பெங்களூரில் இந்த ஆண்டு ஏரோஇந்தியா ஷோ தொடங்கும் முன்பே, பயிற்சி ஒத்திகையின் போது இரு விமானங்கள் மோதிக் கொண்டதில் ஒரு விமானி உயிரிழந்தார்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற ஏரோ இந்தியா ஷோவில் அவரது நினைவாக அவர் பறக்க வேண்டிய இடம் காலியாக விடப்பட்டு முழுமை பெறாத வடிவங்களின் தோற்றங்களை வானில் வெளிப்படுத்தினர். விமானப் படை வீரர்கள், வீராங்கனைகளின் பல்வேறு வான் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இதனிடையே பிற்பகலில், கார் பார்க்கிங் பகுதியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. வறண்டுகிடந்த புற்களில் பற்றிய தீ மளமளவென அங்கு நிறுத்தப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான கார்களின் மீது பற்றி கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வாகனங்களின் உரிமையாளர்கள் தங்களின் காருடைய நிலையை அறிய குவிந்தனர். அவர்களை தீப்பற்றி எரியும் இடத்துக்கு அருகே நெருங்க விடாமல் போலீசார் தடுத்தனர். சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. ஆனால், அதற்குள் 300-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாகிவிட்டன.
இந்த தீ விபத்தால் யாருக்கும் காயமோ உயிர்ச் சேதமோ ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த 20-ஆம் தேதி தொடங்கி நாளை வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட ஏரோ ஷோ நிகழ்ச்சி இந்த தீ விபத்து காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.