‘தில் ராஜா’ – விமர்சனம்
கமர்ஷியல் கிங் இயக்குநர் ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில், விஜய் சத்யா, ஷெரின், வனிதா விஜயகுமார் ஆகியோரது நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘தில் ராஜா’ ரசிகர்களின் மனதை வெல்கிறதா?, விமர்சனத்தை பார்ப்போம்.
நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான நாயகன் விஜய் சத்யா, மனைவி மற்றும் தனது மகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். மகளின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக குடும்பத்துடன் வெளியே சென்றுவிட்டு திரும்பும் போது, எதிர்பாராத பிரச்சனை ஒன்று அவர்களை துரத்துகிறது. அதில் இருந்து தப்பிப்பதற்காக விஜய் சத்யா மேற்கொள்ளும் பாதுகாப்பு நடவடிக்கையால், அவர் மட்டும் இன்றி அவரது குடும்பத்திற்கும் மிகப்பெரிய சிக்கல் ஏற்படுகிறது. இதனால், ஒரு பக்கம் வில்லன் கோஷ்ட்டி மறுபக்கம் காவல்துறை துரத்த, குடும்பத்துடன் வாழ்வா…சாவா…!, என்ற நிலையில் ஓடிக்கொண்டிருக்கும் விஜய் சத்யா, அதில் இருந்து எப்படி மீள்கிறார்? என்பதை கமர்ஷியலாகவும், திரில்லராகவும் சொல்வது தான் ‘தில் ராஜா’.
இயக்குநர் ஏ.வெங்கடேஷ் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கியிருந்தாலும், தனது பலமான கமர்ஷியல் ஃபார்மூலாவை பக்கவாக கையாண்டு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாக மட்டும் இன்றி திரில்லர் அனுபவத்தையும் கொடுத்திருக்கிறார்.
நாயகனாக நடித்திருக்கும் விஜய் சத்யா, ஆறடி உயரம், சிக்ஸ் பேக் உடல் என்று அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக அமர்க்களப்படுத்துகிறார். எதிர்பாராமல் நடந்த சம்பவத்தால் மிகப்பெரிய சிக்கலில் சிக்கிக்கொண்டு அதில் இருந்து தப்பிப்பதற்காக போருபவர், தன்னை சுற்றி பதற்றமான சூழல் இருந்தாலும் அதை முகத்தில் காட்டாமல் சமாளிக்கும் காட்சிகளில் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார்.
விஜய் சத்யாவின் மனைவியாக நடித்திருக்கும் ஷெரின், பாடல்களுக்கு மட்டும் பயன்படும் நாயகியாக அல்லாமல் திரைக்கதையோடு பயணிக்கும் நாயகியாக வலம் வருகிறார்.
அமைச்சர் கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருக்கும் ஏ.வெங்கடேஷ் ஆரவாரம் செய்யாமல் மிரட்டுகிறார். அவரது மனைவியாக நடித்திருக்கும் வனிதா விஜயகுமாரின் அதிரடி குறைவு என்றாலும் கவனம் ஈர்க்கிறது.
போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் சம்யுக்தா கம்பீரத்தை தாண்டிய கவர்ச்சியில் பார்வையாலர்களின் கண்களை பறிக்கிறார்.
நாயகனின் நண்பராக நடித்திருக்கும் விஜய் டிவி பாலாவின் நையாண்டி வசனங்கள் சில சிரிக்க வைக்கிறது. அவருக்கு ஈடுகொடுத்து கவுண்டர் அடிக்கும் இமான் அண்ணாச்சியின் காட்சிகள் அவ்வளவாக எடுபடவில்லை.
கு.ஞானசம்பந்தம், அம்மு, லொள்ளு சபா மனோகர், வெனீஸ், ரங்கநாதன், மூக்குத்தி முருகன், தணிகைவேல் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் முகம் காட்டும் வேலையை செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் மனோ வி.நாராயணாவின் கேமரா சேசிங் காட்சிகளை வேகமாகவும், பாடல் காட்சிகளை கலர்புல்லாகவும், ஆக்ஷன் காட்சிகளை அமர்க்களமாகவும் படமாக்கியிருக்கிறது.
அம்ரீஷ் இசையில், நெல்லை ஜெயந்தன் மற்றும் கலைகுமார் வரிகளில் பாடல்கள் அனைத்தும் அக்மார்க் கமர்ஷியல் அம்சங்கள். பின்னணி இசை திரைக்கதையின் வேகத்துக்கு ஈடுகொடுக்கும் விதத்தில் பயணித்திருக்கிறது.
வழக்கமான ஆக்ஷன் கமர்ஷியல் படம் என்றாலும் படத்தொகுப்பாளர் சுரேஷ் அர்ஸ், நான் லீனர் முறையில் காட்சிகளை தொகுத்து, படம் முழுவதையும் விறுவிறுப்பாகவும், எதிர்பார்ப்புடனும் பயணிக்க வைத்திருக்கிறார்.
தனது வழக்கமான ஆக்ஷன் கமர்ஷியல் ஃபார்மூலாவுடன் திரைக்கதை அமைத்திருந்தாலும், அதில் திரில்லர் என்ற கூடுதல் அம்சத்தை சேர்த்து படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்லும் இயக்குநர் ஏ.வெங்கடேஷ், நாயகனுக்கு ஏற்பட்ட சிக்கல், அதில் நாயகனும், அவரது குடும்பமும் சிக்கிக்கொண்டது எப்படி?, அதில் இருந்து மீள்வதற்கான அவர்களது போராட்டம், ஆகியவற்றை பல திருப்பங்களுடன் சொல்லி அனைத்து விதமான ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் முழுமையான கமர்ஷியல் ஆக்ஷன் திரில்லர் அனுபவத்தை கொடுத்திருக்கிறார்.
பழைய ஏ வெங்கடேஷ் மீண்டும் ஒரு ரவுண்டு வருவார்