‘சட்டம் என் கைபில்’ – விமர்சனம்
எதிர்நீச்சல் , கத்தி, தங்கமகன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நகைச்சுவைய நடிகராக நடித்த சதீஷ் ‘நாய் சேகர்’ படத்தின் வழி நாயகனாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து அவர் நாயகனாக நடித்துள்ள படம் தான் ‘சட்டம் என் கையில்’ . சிக்ஸர் படத்தை இயக்கிய சாச்சி இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் சம்பதா , அஜய் ராஜ் , பாவெல் நவகீதன் , வித்யா பிரதீப் , மைம் கோபி , ரித்விகா தமிழ்செல்வி , கஜராஜ் , பவா செல்லதுரை, வெண்பா உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் நடித்துள்ளார்.
ஏற்காடு மலையில் ஒரு நாள் இரவில் நடக்கும் மொத்த கதையே சட்டம் என் கையில் படத்தின் கதை. டாக்ஸி டிரைவரான சதீஷ் எதிர்பாராத விதமாக எதிரில் பைக்கில் வரும் ஒருவரை இடித்துவிடுகிறார். விபத்தில் இறந்தவனின் உடலை மறைக்க தனது காரின் டிக்கியில் போட்டுக்கொண்டு செல்கையில் அடாவடித்தனம் செய்யும் போலீஸான பாஷாவிடம் (பாவெல் நவகீதன்) மாட்டிக்கொள்கிறார். அதே இரவில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை காவல் துறை கண்டுபிடிக்கிறார்கள். இந்த கொலையை விசாரணை செய்பவர் விநாயகம் (அஜய் ராஜ்). விநாயகத்திற்கும் பாஷாவிற்கு இடையில் அடுத்த இன்ஸ்பெக்டர் சீட்டில் யார் உட்காருவது என்கிற போட்டி ஒருபக்கம் நிலவுகிறது. விபத்தில் இருந்த அந்த நபர் யார்? கொலை செய்யப்பட்ட அந்த பெண் யார்? நாயகனான சதீஷ் இந்த பிரச்சனையில் இருந்து எப்படி விடுபட்டார்? என்பதை அடுத்தடுத்த திருப்பங்களின் வழி சுவாரஸ்யமாக சொல்ல முயற்சிக்கிறது சட்டம் என் கையில் படம்.த்ரில்லர் படங்கள் என்றால் அதில் நிச்சயம் ஒரு பெரிய ட்விஸ்ட் இருக்கும். இந்த ட்விஸ்டை ஒரு இயக்குநர் சரியான நேரத்தில் ரசிகர்களை ஏமாற்றாத வகையில் எப்படி பயன்படுத்துகிறார் என்பதில் தான் அந்த படத்தின் வெற்றியே இருக்கிறது. ஒரு சில படங்களில் இயக்குநர் தன் இஷ்டத்திற்கு படத்தின் க்ளைமேக்ஸில் சம்பந்தமே இல்லாமல் ஒரு ட்விஸ்டை வைத்து படத்தை முடிப்பதை பார்த்திருக்கிறோம். சட்டம் என் கையில் படத்தை பொறுத்தவரை கதாபாத்திரங்களைப் பற்றி எந்த விதமான அறிமுகமும் கொடுக்கப்படுவதில்லை. படம் தொடங்கிய முதல் 10 நிமிடத்திலேயே கதை தொடங்கிவிடுகிறது.
ஒரு குற்றத்தை செய்யும் சதீஷ் அந்த குற்றத்தை மறைக்க நினைக்கிறார். ஒரு கேரக்டரின் பிளாஷ்பேக் எதுவும் தெரியாமல் அவன் செய்யும் தவறுக்கு ஒரு பார்வையாளராக நம்மால் உடன்பட முடிவதில்லை. மறுபக்கம் போலீஸாக வரும் பாவெலும் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால் இந்த கதையில் நான் யார் பக்கம் நிற்க வேண்டும் என்பதே தெரியாமல் குழப்பம் அடைகிறோம். அதை நாம் யோசித்து முடிப்பதற்குள் அடுத்தடுத்து காட்சிகள் நகர்கின்றன. அடுத்த காட்சியில் ஒரு பெண் கொலை செய்யப்படுகிறார். ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக பாடம் சொல்லிக் கொடுப்பவர் என்பதைத் தவிர்த்து அவரைப் பற்றியும் நமக்கு ஒன்றும் தெரிவதில்லை. இறந்த பெண்ணின் பெற்றோர்கள் வந்து கதறி அழுகிறார்கள். எந்த எமோஷனும் இல்லாமல் நாம் அமர்ந்திருக்கிறோம்.
கதாபாத்திரங்களின் பின்னணியை முன்பே சொல்லிவிட்டால் கதையில் சுவாரஸ்யம் குறைந்துவிடும் என்பதால் இந்த திரைக்கதை யுக்தியை கையாண்டிருக்கிறார் இயக்குநர் . படத்தின் பல்வேறு காட்சிகள் மிக சுவாரஸ்யமான முறையில் காட்சியமைக்கப் பட்டிருந்தாலும் எந்த கதாபாத்திரத்துடனும் தொடர்பு படுத்திக் கொள்ள முடியாதது படத்தின் பாசிட்டிவ்களையும் மறைத்துவிடுகிறது. சுருக்கமாகவேனும் கேரக்டர்களை ஏதாவது ஒரு வகையில் தொடர்பு படுத்தி பார்க்க வைத்திருந்தால் இப்படம் ஒரு நல்ல முயற்சி என்று பாராட்டுக்களைப் பெற்றிருக்கும்.
நகைச்சுவை டிராக்கை விட்டு விலகி இந்த மாதிரியான புதிய முயற்சிகளை செய்யும் நடிகர் சதீஷூக்கு பாராட்டுக்கள். பாவெல் நவகீதன் மற்றும் அஜய் ராஜ் இருவரின் நடிப்பு இந்த படத்தின் உயிரோட்டம் என்றே சொல்லலாம்.
ஒளிப்பதிவாளர் பி.ஜி முத்தையா மிக சவாலான ஒரு முயற்சியை சிறப்பாக கையாண்டிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். மைப்பிரதேசத்தை காட்சிபடுத்திய விதமும் பனி சூழ்ந்த இரவை காட்சிபடுத்தியிருக்கும் விதமும் கதைக்கு ஏற்ற ஒரு சூழலை ஏற்படுத்தி தருகின்றன.
இப்படத்தின் திரைக்கதையில் இயக்குனர் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருந்தால்..!