திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை செய்து வரும் பிருத்விராஜ் ராமலிங்கம், அங்கு மேனேஜரை முறைத்துக் கொள்கிறார். இதனால் அந்த மேனேஜர், முதலாளியுடன் சேர்ந்து கொண்டு பிருத்விராஜை அவமானப்படுத்தி பழி வாங்குகிறார். மன வேதனையுடன் வீட்டுக்கு திரும்பும் அவர் அன்று இரவு குடித்துவிட்டு அளவுக்கு மீறிய போதையில் தங்கி இருக்கும் வீட்டின் உரிமையாளர் முதல் பல்வேறு இடங்களில் இரவு முழுவதும் அலப்பறை செய்கிறார். இதனால் போலீஸ் ஸ்டேஷன் வரை செல்லும் பிருத்விராஜ் அங்கும் ஒரு சம்பவத்தை செய்கிறார். அதன் பிறகு நடந்தது என்ன என்பதே இந்த படத்தின் மீதி கதை.
ஒவ்வொருவரும் காலையில் வேலைக்கு செல்லும் போது இந்த நாள் இனிய நாளாக அமைய வேண்டும் என எண்ணிக் கொண்டுதான் செல்வோம். ஆனால் இந்த கதையின் நாயகனுக்கு அன்றைய நாள் குட் டே வாக அமையாமல் பேட் டேவாக அமைகிறது. அதன் பின்னனி மற்றும் சுவாரசியத்தை ஒரு நாள் இரவில் நடக்கும் கதையாக இயக்குனர்கள் கொடுத்திருக்கிறார்கள்.
கதையின் நாயகனாக நடித்துள்ள பிரித்விராஜ் ராமலிங்கத்தின் இயல்பான முகம் அந்த கேரக்டருடன் ஒன்றி விடுகிறது. குடித்துவிட்டு இப்படி எல்லாம் செய்வார்களா என ஆச்சரியப்பட வைக்கும் வகையில் அவர் நடித்துள்ளார். இவர் தான் கதையின் பிரதான கேரக்டராக இருக்கிறார். இவரை சுற்றி கதை நகர்வதால் மற்றவர்களுக்கு பெரிதாக காட்சிகள் கொடுக்கப்படவில்லை. காளி வெங்கட், ஆடுகளம் முருகதாஸ், மைனா நந்தினி, போஸ் வெங்கட் விஜய் முருகன் ஆகியோர் ஒரு சில காட்சிகளில் வந்து செல்கின்றனர்.
இரவில் குடித்துவிட்டு ஒருவர் செய்யும் அலப்பறைகளை ஒரு ஜாலியான கதையாக சொல்லி உள்ளார்கள். இருப்பினும் அதை திரைக்கதையாக மாற்றுவதில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். திரைக்கதை ஓட்டத்திற்கு தீனி போட முடியாமல் பல இடங்களில் படம் லாக் ஆகி நிற்கிறது. அதிக அளவிலான மதுபான காட்சிகள் படம் பார்ப்போருக்கு போதையை தருகிறது