‘லவ்வர்’ – விமர்சனம்
குட் நைட் வெற்றி படத்திற்கு பிறகு ஜெய் பீம் மணிகண்டன் நடித்திருக்கும் படம் லவ்வர்.
தனது துணை மீதான அழகான அன்புக்கு பதில் அவர்கள் மீது பயம் வந்தால் உறவுக்குள் ஏற்படும் சிக்கல்கள் என்னென்ன என்பது குறித்து பேசியுள்ளது இப்படம்.
கல்லூரி முடித்து விட்டு சுய தொழில் செய்ய வைத்திருந்த பணத்தையும் இழந்து வாழ்ந்து வரும் அருணுக்கு (மணிகண்டன்), தொழில் தொடங்க முடியாத விரக்தி, அவரை முன்கோபக்காரனாக மாற்றுகிறது. அவருக்கு திவ்யா (ஶ்ரீ கௌரி பிரியா) மீது காதல். தன்னுடைய விரக்தியை செல்லும் இடமெல்லாம் பிரச்சினை, இருக்கிற கோபத்தை எல்லாம் காதலி மீது காட்டுவதால் காதலை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்த முடியாத நிலை எழுகிறது.
மேலும் அந்தக் காதல் பயமாகவும் மாறுகிறது. இதனால் பல எதிர்பாராத சம்பவங்களும் நடைபெறுகிறது. இப்படியான நிலையில் இந்தச் சூழலை அருண் சிறப்பாக கையாண்டு தன் காதலில் வெற்றி பெற்றாரா என்பதே லவ்வர் படத்தின் அடிப்படைக் கதையாகும்.
நடிப்பு எப்படி?
மணிகண்டன், கௌரிப் பிரியா,கண்ணா ரவி, நிகிலா ஷங்கர், ஹரிஷ் குமார், ஹரிணி உள்ளிட்ட குறிப்பிட்ட கேரக்டர்களை சுற்றி லவ்வர் படம் நகரும் நிலையில், அனைவரும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார்கள். குறிப்பாக இக்கால காதலர்களை மணிகண்டன் – கௌரி பிரியா கேரக்டர்கள் கச்சிதமாக பிரதிபலிக்கிறார்கள். இருவருக்கும் பாராட்டுக்கள்.
இன்றைய சூழலில், இப்படியான ஒரு உறவுச் சிக்கல் கதையை கையில் எடுத்து, தனது அறிமுகப் படத்தின் மூலம் கவனிக்க வைக்கிறார் இயக்குநர் பிரபு ராம் வியாஸ். அது மட்டுமல்லாமல் கெஞ்சுவதும், விட்டுக் கொடுத்துக் கொண்டே செல்வது மட்டும் காதல் அல்ல. காதல் என்றைக்கும் காதல்தான். அதன் புரிதல் தான் எந்த வகையான காதல் அது என்பதை வெளிப்படுத்துகிறது என்பதை சரியான கிளைமேக்ஸ் காட்சியாக வைத்துள்ளார்.
படம் பார்க்கும்போதும் இன்றைய இளைய தலைமுறையினர் ஒவ்வொருவருக்கும் தங்களை அந்த கேரக்டர்களாக பொருந்திப் பார்க்கத் தோன்றும் அளவுக்கு, படம் முழுக்க ஒரு பதற்றத்தையே ஏற்படுத்தி, அதில் வெற்றியும் கண்டுள்ளார். படத்தில் கௌரி பிரியா, மணிகண்டனின் அம்மாவிடம் பேசும் காட்சிகள், கண்ணா ரவி தன்னுடைய முறிந்து போன காதல் பற்றியும் மற்றும் ஹரிஷ் குமார் தனது சந்தோசமான காதல் பற்றியும் பேசும் இடம் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
படத்தின் நீளம் தான் மிகப்பெரிய மைனஸ் ஆக உள்ளது. சில காட்சிகளை எடிட்டிங்கில் வெட்டி இருக்கலாம். ஷான் ரோல்டனின் பின்னணி இசையும் பாடல்களும் ஸ்ரேயா கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும் கவனிக்க வைக்கிறது. நம்மை சுற்றி தினம் தினம் காதலிப்பவர்களை காண்கிறோம். அவர்களுக்கிடையேயான பிரச்சினைகளையும் தீர்த்து வைக்க அல்லது கேட்கிறோம். இதில் தவறான புரிதல் காரணமா அல்லது காதலிக்கும் நபர்கள் தவறாக ஜோடி சேர்ந்து விட்டது காரணமா என்று குழம்பி போயிருப்போம்.
தங்களுக்குள் பிரச்சினை எழும்போது காதலர்கள் முடிவெடுக்க தவறும் இடத்தில் விளைவுகள் வேறுவிதமாக இருக்கும். அதனை செய்யாமல் சரியான கிளைமேக்ஸோடு படத்தை முடித்துள்ளார்கள். ஆக மொத்தம், லவ்வர் படத்தை காதலிப்பவர்களும் சரி, சிக்கலான காதலில் இருப்பவர்களும் சரி தாராளமாக தியேட்டரில் பார்க்கலாம்.