கங்குவா – விமர்சனம்
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா(Kanguva) திரைப்படம் (14-11-2024)அன்று உலகெங்கிலும் வெளியாகியுள்ளது. பாபி தியோல் , திஷா பதானி , யோகி பாபு உள்ளிட்டவர்கள் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில நடித்துள்ளார்கள். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.
இந்திய ரஷ்ய எல்லையில் மருத்துவ ஆய்வகத்தில் ரகசியமாக குழந்தைகளை வைத்து ஆராய்ச்சி ஒன்று நடக்கிறது. இந்த ஆய்வகத்தில் ஜீடா என்கிற ஒரு சிறுவன் தப்பி கோவாவிற்குச் செல்கிறான். காவல்துறையால் தேடப்படும் குற்றவாளிகளை பிடித்து தரும் பவுண்டி ஹண்டர்களாக ஸ்டைலான என்ட்ரி கொடுக்கிறார்கள் சூர்யாவும் திஷா பதானியும். இவர்களுடன் காமெடி என்கிற பெயரில் கடுப்பேற்றுகிறார்கள் ரெடின் கிங்ஸ்லி மற்றும் யோகி பாபு. ஆய்வகத்தில் இருந்து தப்பிச் சென்ற சிறுவன் பிரான்சிஸ் இடம் சேர்கிறான்.
நிகழ்காலத்தில் ஒரு கதை நடக்க இன்னொரு பக்கம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தொடர்கிறது கங்குவாவின் கதை.
நிகழ்காலத்தில் வரும் பிரான்சிஸ் சூர்யாவின் காட்சிகளில் வைப் செய்ய வைக்கிறேன் என்கிற பெயரில் கடுப்பேற்றியிருக்கிறார் சிறுத்தை சிவா. சூர்யா திஷா பதானி , யோகி பாபு என அனைவரின் ஓவர் ஆக்டிங்கை சகிக்க முடியவில்லை.
தப்பியோடி வரும் சிறுவனுக்கும் சூர்யாவுக்கு என்ன தொடர்பு என எந்த வித தெளிவுமில்லாமல் 1000 ஆண்டு கடந்த காலத்திற்கு தாவுகிறது படம்.
நிகழ்கால காட்சிகளைவிட கடந்த கால காட்சிகள் ரசிகர்களை அதிகம் கவரும் படியாக அமைந்துள்ளன என்றாலும் வசனம் முதல் திரைக்கதை வரை குழப்பி அடித்து வைத்திருக்கிறார் இயக்குநர்.
கொஞ்ச நேரம் உரைநடைத் தமிழிலும் கொஞ்ச நேரம் பேச்சுத் தமிழிலும் அமைந்த வசனங்கள் குளறுபடியின் உச்சம். மிக பிரம்மாண்டமாக செட் அமைத்து போர் காட்சிகள் உருவாக்கப்பட்டிருந்தாலும் ஒரு சண்டைக் காட்சியிலும் கண்டினியுட்டி சிங் ஆகவில்லை. முதலையுடன் சண்டை, நடுக்கடலில் சண்டை , பெண்களின் வீரத்தை நிரூபிக்க ஒரு தனிச்சண்டை காட்சி என படம் முழுவதும் ஆக்ஷன் காட்சிகள் தலைவிரித்தாடுகின்றன.
படத்தை ஓரளவிற்கு உயிரோட்டமாக வைத்திருக்கும் ஒரு அம்சம் என்றால் தேவிஸ்ரீ பிரசாதின் இசை தான். ஒளிப்பதிவாளர் வெற்றி படத்திற்கு ஒரு தனி டோன் செட் செய்திருக்கிறார் என்றாலும் படத்தொகுப்பு காட்சிகளை கோர்வையாக வழங்குவதில் கோட்டை விட்டிருக்கிறது.
படத்தின் ப்ரோடக்ஷன் டிசைனர் மிலன் மற்றும் அவர் மனைவிக்கு தனி பாராட்டுக்களைத் தெரிவிக்க வேண்டும். சின்ன சின்ன பொருட்கள் முதல் ஆயுதங்கள் , கிராமம் என ஒரு முழு உலகத்தை கண்முன் நிறுத்தியிருக்கிறார்கள்.
பல்வேறு கதாபாத்திரங்கள் படத்தில் இருந்தாலும் சூர்யாவைத் தவிர எந்த கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.அதிலும் நிகழ்காலத்தில் வரும் பிரான்சிஸ் கதாபாத்திரத்தை வித்தியாசமாக காட்ட வேண்டும் என்பதற்காக சூர்யாவின் பிளஸை எல்லாம் மைனஸாக மாற்றிவிட்டார்கள். எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றே தெரியாதபடி திஷா பதானி தமிழ் பேசுகிறார். ரெடின் கிங்ஸ்லி இனிமேல் நெல்சன் படங்களில் நடிப்பதோடு நிறுத்திக்கொள்வது நல்லது.பாபி தியோலின் தோற்றம் செம வெயிட்டாக இருந்தாலும் அவர் செட் பீஸாக மட்டுமே பயண்படுத்தப்பட்டிருக்கிறார். சொகுசாக நாற்காலியில் உட்கார்ந்து ஆட்களை ஏவிவிடும் வில்லன் டெம்பிளெட்டை மாற்றி புதிதாக முயற்சித்திருக்கலாம்.
ஒரு சிறுவனுக்கு கொடுத்த சத்தியத்தை காக்க முடியாத தலைவன் அந்த சத்தியத்தை நிறைவேற்ற மறுபிறப்பு எடுக்கிறான். இந்த பிறப்பிலாவது தனது சத்தியத்தை அவன் காப்பாற்றினானா என்பதே படத்தின் ஒன்லைன். ஆனால் அந்த அடிப்படை எமோஷனுக்காக காட்சிகளை உருவாக்காமல் பாகுபலி , கே.ஜி.எஃப் என எல்லா படங்களையும் மிஞ்ச வேண்டும் என்பதற்காக சைன்ஸ் ஃபிக்ஷன் , ஃபேண்டஸி என கலந்து கட்டி எடுத்து மூச்சுத்திணற வைத்திருக்கிறார்கள்.
மொத்தத்தில் இந்த ‘கங்குவா’ படம் நடிகர் சூர்யா சில வருடங்களுக்கு முன்பு நடித்த ‘ஏழாம் அறிவின்’ கலவை என்றே சொல்லலாம்.