Y Not Studio சசிகாந்த் தயாரிப்பு இயக்கத்தில் மாதவன், சித்தார்த், நயன்தாரா நடித்திருக்கும் படம் டெஸ்ட்.
இந்தியாவில் குறிப்பாக தமிழில் கிரிக்கெட்டை மையமாக கொண்டு ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. இந்தப் படத்திலும் கதையின் மையப்புள்ளி கிரிக்கெட் தான் என்றாலும் கூட இது முழுமையான ஒரு ஸ்போர்ட்ஸ் படம் அல்ல, கிரிக்கெட் பின்னணியில் நடக்கும் அரசியல், சூதாட்டம், சம்பந்தப்பட்ட மனிதர்களின் அது ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவற்றையே பிரதானமாக கையில் எடுத்துள்ளார் இயக்குநர் சசிகாந்த். ஆனால், அதை திரைக்கதையாக பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யமாக கொடுத்துள்ளாரா என்றால், இல்லை என்பதே பதில்.
படத்தின் ஆரம்ப காட்சிகளில் ஒவ்வொரு கதாபாத்திரமும் அறிமுகம் செய்யப்பட்ட விதமும், அவற்றின் பண்புகளை நமக்கு காட்டிய விதமும் சிறப்பு. படத்தில் வரும் பிரதான கதாபாத்திரங்கள் யாவுமே முழுமையாக நல்லவர்களோ, அல்லது முழுமையாக கெட்டவர்களோ அல்ல. அவரவர் அவரவர் வழியில் சுயநல நோக்கம் கொண்டிருக்கின்றனர். சித்தார்த்துக்கு கிரிக்கெட், மாதவனுக்கு தனது ஹைட்ரோ ஃப்யூயல் ப்ராஜக்ட், நயன்தாராவுக்கு குழந்தை என அந்தந்த கதாபாத்திரங்களுக்கென இருக்கும் தனிப்பட்ட நோக்கம் மிகச் சரியான முறையில் நமக்கு கடத்தப்படுகின்றன.
ஆனால், படம் டிராமாவிலிருந்து ஒரு கட்டத்தில் த்ரில்லர் பாணிக்கு மாறுகிறது. அங்கிருந்தே படத்தின் பிரச்சினையும் தொடங்கி விடுகிறது. ஆரம்பம் முதலே சாதுவான, நல்ல மனம் கொண்ட ஒரு கதாபாத்திரம் அப்படியே நேர்மறையாக மாறுவதாக காட்டியதை ஏற்க இயலவில்லை. குறைந்தபட்சம் முதல் பாதியில் அதற்கு நியாயம் சேர்க்கும் வகையில் காட்சிகளை வைத்திருந்தால் கூட பரவாயில்லை. ஆனால், படம் முழுக்கவே அப்படி எதையும் காட்டாமல் திடீரென ஒரு கதாபாத்திரத்தை முழு நெகட்டிவ் ஆக மாற்றுவது எப்படி சரியாகும்?

படத்தின் ஆரம்பத்தில் இருந்த சுவாரஸ்யம் போகப்போக பலவீனமாக ஆனது படத்தின் மிகப்பெரிய மைனஸ்.
மொத்தத்தில் படம் பார்க்கும் ரசிகர்கள் பொறுமையை டெஸ்ட் செய்வது போல உள்ளது.