ஐந்து ஆறு வருடங்களுக்கு முன்பு எடுத்திருக்கும் வருணன் படத்தை தூசி தட்டி இப்பொழுது ரிலீஸ் செய்து இருக்கிறார்கள்
தண்ணீர் கேன் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரிடேயே ஏற்படும் மோதலால் எப்படி ரத்தம் பாய்ந்து ஓடுகிறது என்பதைச் சொல்லும் படம், வருணன்.
வட சென்னை, ராயபுரம் பகுதியில் ராதாரவியும், சரண்ராஜூம் தண்ணீர் கேன் விற்பனை செய்கிறார்கள். தங்களுக்குள் ஏதும் ஒப்பந்தம் செய்துகொள்ளாமலேயே, ஆளுக்கு ஒரு ஏரியா என பிரித்துக்கொண்டு தொழில் நடத்துகிறார்கள்.
அதே நேரம், இருவரிடமும் வேலை செய்யும் இளைஞர்களிடையே அவ்வப்போது மோதல், ரத்தக்களறி ஏற்படுகிறது.
இதற்கிடையே அந்தப் பகுதி காவல்துறை அதிகாரி, ராதாரவியுடன் சேர்ந்து பிஸினஸ் செய்ய விரும்புகிறார். அதற்கு ராதாரவி மறுப்பு தெரிவிக்கிறார். இதனால் ஆத்திரம் அடையும் அவர், எதிர்த்தரப்பினரான சரண்ராஜூடன் சேர்ந்து தொழில் செய்ய ஆரம்பிக்கிறார்.
இந்த நிலையில் சரண்ராஜ் மனைவி மர்மமாக இறக்க.. அதைத் தொடர்ந்து அதிரடி சம்பவங்கள் நடக்கின்றன. இறுதியில் என்ன ஆனது என்பதே கதை.தண்ணீர் கேன் நிறுவனம் நடத்தும் அண்ணாச்சியாக ராதாரவி. வழக்கம்போல சிறப்பான நடிப்பை அளித்து இருக்கிறார். தன்னிடம் வேலை பார்ப்பவர்களிடம் கனிவும், கண்டிப்புமாக நடந்து கொள்வது, காவல் அதிகாரியிடம் அதிகாரமாக பேசுவது என இந்தப் படத்திலும் முத்திரை பதித்திருக்கிறார்.
அவருக்கு எதிர்த்தரப்பாக… தண்ணீர் கேன் நிறுவனம் நடத்தும் இன்னொருவராக சரண்ராஜ். பொதுவாக பெரும்பாலான படங்களில் கொஞ்சம் எரிச்சலூட்டும் நடிப்பையே அளிப்பவர் இவர். ஆனால் இந்தப்படத்தில் சரி வர பேச முடியாத கதாபாத்திரத்தில் சிற்பபாக நடித்து கவர்கிறார்.நாயகனாக நடித்திருக்கும் துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் மற்றும் நாயகியாக நடித்திருக்கும் கேப்ரில்லா, ற்றொரு நாயகன், நாயகியாக நடித்திருக்கும் பிரியதர்ஷன் மற்றும் ஹரிபிரியா, வில்லனாக நடித்திருக்கும் சங்கர்நாக் விஜயன் மற்றும் ஜீவா ரவி, மகேஸ்வரி, அர்ஜுனா கீர்த்திவாசன், ஹைட் கார்த்தி, கெளசிக், கிரண்மயி உள்ளிட்ட அனைவருமே சிறப்பாக நடித்து உள்ளனர்.
ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் சந்தோஷ் வித்தியாசமான கோணங்களில் அசத்துகிறார். குறிப்பாக, கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி பிரமிப்பு.
போபோ சசியின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்துக்கு பலம்.
என்.ரமணா கோபிநாத்தின் வசனம் ஈர்க்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் ஜெயவேல் முருகன், தண்ணீர் கேன் தொழிலை மையமாக வைத்து திரைக்கதை அமைத்திருப்பதாக ஏற்கெனவே கூறியிருந்தார். ஆனால் இரு தரப்பினருக்கு இடையேயான மோதல்… அதனால் ஏற்படும் ரத்தக்களறிதான் படம்.
கதையை சொல்லும் பின்னணியில் வரும் புரட்சித் தமிழன் சத்யராஜின் குரல் நமக்கு ஆறுதல்.
தண்ணீருக்காக இவ்வளவு பெரிய சண்டையா அதுவும் தமிழ்நாட்டிற்குள் என்று நினைக்கும் பொழுது கர்நாடகாவெல்லாம் பெரிய மேட்டரே கிடையாது அப்படி தான் நமக்கு தோன்றுகிறது.
படம் எடுத்து நீண்ட வருடமானதால என்னவோ தெரியவில்லை படம் பார்க்கும் பொழுது ஒரு உற்சாகமே நம் மனதிற்குள் வரவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.