பெற்றவர்களிடம் கௌரவமான வேலையில் வெளியூரில் இருக்கிறேன் என்று சொல்லிவிட்டு சென்னைக்கு வந்து தவறான வேலைகளில் ஈடுபடும் நபர்களுக்கு இப்படம் உதாரணம்.
நாளிதழ்களில் வரும் நகைப் பறிப்பு செய்திகளை வாசித்துவிட்டு ‘யாருக்கோ’ என்று எளிதில் கடந்து விடுகிறோம். இதுபோன்ற சம்பவங்களில் சில இளம் பெண்கள் உயிர்விடும் அதிர்ச்சியையும் அடுத்தடுத்த நாட்களில் மறந்து விடுகிறோம். ஆனால் நகைப்பறிப்புக்குப் பின் உள்ள ‘திருட்டு’ நெட்வொர்க், அவர்கள் எப்படிச் செயல்படுகிறார்கள், அந்த நகைகளை என்ன செய்கிறார்கள் என்கிற குற்றத்தை, பரபர த்ரில்லாக தருகிறது, அறிமுக இயக்குநர் எஸ்.எம்.பாண்டி இயக்கி இருக்கும் இந்த ‘ராபர்’.
படித்து வேலையில் இருக்கும் மாடர்ன் இளைஞன் ஒருவன், பண ஆசைக்காகத் தடம் மாறுவதையும், அந்தப் பண போதை அவனை எப்படி கொடூரமானவனாக அடுத்தடுத்த கட்டங்களுக்குக் கொண்டு செல்கிறது என்பதையும் நகை பரிமாற்றத் தொடர்புகள் மற்றும் அவர்களின் ஏமாற்றுத் தனங்களையும் சொல்லும் கதையின் வேகம், ரசிக்கவும் பதைபதைக்கவும் வைக்கிறது.
சிறைக்குப் புதிதாக வரும் கைதிகளிடம் பழைய கைதியான சென்ராயன், ராபரி கதையை விவரிப்பது போன்ற, முன் பின்னான திரைக்கதையும் இறுதியில் வருகிற அந்த ட்விஸ்டும் ரசனை.
அம்மா தீபா சங்கர், கிளைமாக்ஸில் எடுக்கும் முடிவு பகீர் ரகம். உதயகுமாரின் ஒளிப்பதிவும் ஜோகன் சிவனேஷின் பின்னணி இசையும் படத்தை வேகமாகக் கொண்டு செல்ல, அழுத்தமாக உதவியிருக்கிறது.
ஒரே மாதிரியான காட்சிகள் சிலஇடங்களில் தொய்வை ஏற்படுத்துவது உள்ளிட்ட சின்ன சின்னக் குறைகள் இருந்தாலும் த்ரில் அனுபவத்தைத் தருகிறது ‘ராபர்’.