கான்ஜுரிங் கண்ணப்பன் – விமர்சனம்
அறிமுக இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் சதீஸ் ஹீரோவாக நடித்து இன்று வெளிவந்துள்ளதுள்ள திரைப்படம் கான்ஜுரிங் கண்ணப்பன்.
இப்படத்தில் சதீஸ் உடன் இணைந்து சரண்யா பொன்வண்ணன், ரெஜினா, நாசர், ஆனந்த்ராஜ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மாபெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கிய இப்படம் எந்த அளவிற்கு ரசிகர்களை முழுமையாக பூர்த்தி செய்துள்ளது என்று இந்த விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.
கேமிங் துறையில் வேலை தேடி கொண்டிருக்கும் கதாநாயகன் சதீஸ் ஒரு நாள் தெரியாமல் சூனியம் செய்து வைத்திருக்கும் Dream catcher-ல் இருந்து ரெக்கை ஒன்றை எடுத்துவிடுகிறார்.
இதனால் எப்போதெல்லாம் அவர் உறங்குகிறாரோ, அப்போதெல்லாம் ஒரு கனவு உலகத்தில் பேயிடம் சிக்கிக்கொள்கிறார்.
கதாநாயகன் சதீஸ் சிக்கிக்கொண்டது மட்டுமல்லாமல் அவரது தாய், தந்தை, மாமா மற்றும் ஆனந்த்ராஜ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோரும் Dream catcher-ல் இருந்து ரெக்கையை பிடிங்கி கனவு உலகத்திற்குள் சிக்கிக்கொள்கிறார்கள்.
இதனால் அவர்கள் அனைவரும் சந்தித்த விளைவுகள் என்னென்ன, இதிலிருந்து அவர்கள் தப்பித்தார்களா இல்லையா என்பதே படத்தின் மீதி கதை.
கதாநாயகன் சதீஸ் நடிப்பு ஒகே. அவருடைய நகைச்சுவையில் எதுவுமே எடுபடவில்லை. ஆனால் சீரியஸான இடங்களில் அவருடைய நடிப்பு பாராட்டுக்குரியது.
சரண்யா பொன்வண்ணன் மற்றும் ஆனந்த்ராஜ் நடிப்பு படத்திற்கு பலம். சில இடங்களில் நம்மை சிரிக்க வைக்கிறார் ரெடின் கிங்ஸ்லி.
ஆனால், விடிவி கணேஷ், நமோ நாராயணன், நாசர் மற்றும் ரெஜினாவின் கதாபாத்திரங்கள் பெரிதளவில் ஒர்கவுட் ஆகவில்லை. பேயாக நடித்த நடிகை Elli Avrram நடிப்பு ஓகே.
அறிமுக இயக்குனரான செல்வின் ராஜ் சேவியர் எடுத்துக்கொண்ட கதைக்களம் வழக்கமான பேய் கதைகளை விட சற்று மாறுபட்டதாகவே இருந்தது. இதுவே இப்படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட்.
ஆனால், திரைக்கதை காலை வாரிவிட்டது. முதல் பாதி விறுவிறுப்பாக சென்றாலும் இரண்டாம் பாதியில் சுவாரஸ்யம் குறைவு தான்.
ஹாரர் மற்றும் திரில்லர் போன்ற கதைக்களத்தில், அடுத்த என்ன என்று படம் பார்க்கும் ரசிகர்களுக்கு தெரியவே கூடாது. ஆனால், இந்த கதையில் பேய் இந்த இடத்தில் தான் வரப்போகிறது, இந்த விஷயம் தான் அடுத்து நடக்கப்போகிறது என எளிதாகவே நம்மால் கணிக்க முடிகிறது.
நகைச்சுவையாவது கைகொடுத்திருந்தால் கண்டிப்பாக படத்தில் கொஞ்சம் சுவாரஸ்யம் கூடி இருக்கும். ஆனால், அதுவும் நடக்கவில்லை. இதுதான் இப்படத்திற்கு மிகப்பெரிய பின்னடைவு
யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை சூப்பர். SFX சிறப்பாக இருக்கிறது. ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் இன்னும் கூட நன்றாக இருந்து இருக்கலாம்.