‘தங்கலான்’ – விமர்சனம்
இப்படத்திற்கான இவ்வருடத்தின் தேசிய விருதுகள் எத்தனை கிடைக்கும் என்பதை நினைத்துக் கொண்டு இந்த விமர்சனத்தை பார்க்கலாம்.
கோலார் தங்க வயல்களில் இருக்கும் தங்கத்தை எடுக்க ஆங்கிலேயர்களின் முயற்சிகள் தோல்வியில் முடிகின்றன. இந்த தங்கத்தை எடுக்க வட ஆற்காடு பகுதியில் வேப்பூர் கிராமத்தில் வசிக்கும் மக்களின் உதவியை நாடுகிறார்கள்.
ஜமீன்தார்களின் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலைபெற ஆங்கிலேயர்களுக்கு தங்கத்தை கண்டுபிடிக்க முடிவு செய்கிறான் தங்கலான். தங்கலான் தங்கத்தை கண்டுபிடித்தானா? தங்கம் அவன் மக்களுக்கு அடிமைத்தனத்தில் இருந்து விடுதலையைப் பெற்று தந்ததா? என்பதே கதை.
மஞ்சள் பிசாசு என்று அழைக்கப்படும் தங்கத்தை எடுக்க அப்பகுதியில் வாழ்ந்த பட்டியலின மக்கள் பலியான வரலாற்றையும் இதே மக்கள் அந்நிலத்தின் பூர்வ குடிகளாக வாழ்ந்த வரலாற்றையும் நாட்டார் கதைசொல்லல் வழியாக இணைக்கும் வகையில் இப்படத்தை இயக்கியுள்ளார் பா ரஞ்சித்.
ஜமீன்தார்களின் அடக்குமுறையில் வேப்பூர் மக்கள் தங்கள் நிலத்தை இழந்து நிற்பதும் அவர்களிடம் இருந்து விடுதலை பெற ஆங்கிலேயர்களுக்கு உதவி செய்வதும் முதல் பாகமாகவும், அதே ஆங்கிலேயர்கள் தங்களை அடிமைப்படுத்த நினைக்கையில் அவர்களை எதிர்த்து தங்கள் நிலத்திற்காக போராடுவது இரண்டாம் பாகமாக தொடர்கிறது.
தங்கத்தை தேடி அலையும் போது ஏற்படும் மர்மமான சவால்கள் ஆயிரத்தில் ஒருவன் படத்தை நிறைய இடங்களில் நினைவுபடுத்துகிறது. வாய்மொழிக் கதைகளில் வருவது போல் நிறைய இடங்கள் மேஜிக்கல் ரியலிஸம் பாணியில் சொல்லப்பட்டிருப்பது ஒரு சிறப்பான முயற்சி.
புத்தர் நாட்டார் கதைகளின் வழி முனியாக வருவது , சைவம் வைணவத்தின் ஆதிக்கத்தை சுருக்கமாகவும் ஒரு விதமான நகைச்சுவையுடனும் சொல்லிச் செல்கிறார்கள்.
தங்கலான் மற்றும் கங்கம்மா இடையில் இருக்கும் காதல் காட்சிகள். வெள்ளைக்காரர் கொடுத்த துணியை போட்டுக்கொண்டு ஜாங்கோ படத்தில் வருவது போல் தங்கலான் குதிரையில் வருவது. பெண்கள் அனைவரும் முதல் முறையாக ரவிக்கை அணியும் காட்சிகள் பா ரஞ்சித் இப்படத்தில் வைத்திருக்கும் ஸ்பெஷல் மொமண்ட்ஸ்.
வழக்கமான கமர்ஷியல் சினிமாவைப் போன்ற திரைக்கதை அமைப்பு இல்லை என்றாலும் தங்கலான் படம் காட்டும் மக்களும் அவர்களின் வாழ்க்கை முறையும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக காட்டப்பட்டிருக்கின்றன. நிகழ்காலமும் கடந்த காலமும் சேர்ந்து நடக்கும் பகுதிகள் ஆரம்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தினாலும் க்ளைமேக்ஸ் காட்சியில் ஒரு பிரம்மாண்டமான அனுபவமாக திரள்கிறது.
ஜி.வி பிரகாஷின் பின்னணி இசை போர் முரசைப்போல் ஒவ்வொரு காட்சியையும் உயிர்ப்புடன் வைத்துக்கொண்டே இருக்கிறது.
தங்கத்தை கண்டுபிடிக்கும் பயணம் சுவாரஸ்யமானதாக இருந்தாலும் கதையின் மையமான வரலாறு வசனங்கள் வழியாகவும் , தங்கலானின் கனவுகள் வழியாக மட்டும் சொல்லப்படுவதால் படம் சொல்ல வருவது முழுமையாக ஜெனரல் ஆடியன்ஸூக்கு புரியாமல் போகலாம்.
படத்தின் நீளம் ஒரு பலவீனமான அம்சம். இறைய சூழலில் வெளியாகும் பெரிய பட்ஜெட் படங்கள் பெரும்பாலும் மூன்று மணி நேரம் ஓடக்கூடியவரை. ஆனால் சலிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவோ என்னவோ படத்தின் நீளத்தை 2:30 மணி நேரத்திற்கும் குறைவாக சுருக்கியுள்ளார்கள்
இரண்டாம் பாதியில் ஒரு கட்டத்திற்கு மேல் படம் எந்த கதாபாத்திரத்தையும் பின் தொடராமல் ஒரே இடத்தில் தேங்கி விடுகிறது.
முக்கிய கதாபாத்திரங்களைத் தவிர வெள்ளைகார துரையாக வரும் க்ளெமெண்ட், தங்கலானின் மகனாக வரும் அசோகன் , பசுபதி ஆகியவர்களின் கதாபாத்திரங்கள் படத்தின் தொடக்கத்தில் இருந்த முக்கியத்துவம் இறுதியில் கொடுக்கப்படவில்லை. இதனால் அவர்களின் கதாபாத்திரங்கள் முழுமை பெறாமலே இருந்து விடுகின்றன. ஆரத்தியாக மாளவிகா மோகணன் தோற்றத்தில் நம்மை கவர்ந்தாலும் நடிப்பாக அவருக்கு பெரிய வாய்ப்புகள் அமையவில்லை. வெள்ளக்கார துரை க்ளெமெண்ட் பேசுவதற்கு தமிழ் டப்பிங் கொடுக்காமல் இருந்திருந்தால் படத்தின் நம்பகத்தன்மை கொஞ்சம் கூடியிருக்கும்.
லைவ் சவுண்ட் செய்திருப்பது ஒரு நல்ல முயற்சி என்றாலும் கதாபாத்திரங்கள் பேசும் தமிழை புரிந்துகொள்வதை லைவ் சவுண்ட் இன்னும் கடினமானதாக மாற்றுகிறது. தங்கலான் தனக்குள்ளாக சில வரிகளை உச்சரித்துக் கொண்டே இருக்கிறார். இதைப் பற்றிய எந்த விளக்கமும் பார்வையாளர்களுக்கு தெரிவதில்லை.
கதையாக எப்படி தொடங்கி எப்படி முடிக்க வேண்டும். தங்கலான் யார் என்பதில் இயக்குநருக்கு நிறைய தெளிவு இருக்கிறது என்றாலும் அதை இன்னும் கொஞ்சம் பொறுமையாக ஆடியன்ஸூக்கு கடத்த தவறிவிடுகிறார்.
ஆனால் ஒட்டுமொத்தமாக ரசிகர்களுக்கு ஒன்று நிச்சயம் புரியும். நிலமோ தங்கமோ , அதிகாரம் கொண்டவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் உழைப்பை சுரண்டி அவர்களை அடிமையாக மட்டுமே வைக்க நினைப்பார்கள். அதை எதிர்த்து தங்கலான் என்கிற ஒருவன் தன் மக்களின் விடுதலைக்காக போராடிய வரலாற்றை தங்கலான் படம் உணர்வுப் பூர்வமாக சொல்கிறது.