“பவதாரிணியின் ஆத்மா சாந்தி அடைந்திருக்கும் என நம்புகிறேன்”; புயலில் ஒரு தோணி இசை வெளியீட்டு விழாவில் இசைஞானி இளையராஜா நெகிழ்ச்சி
இசைஞானி இளையராஜாவின் தவப்புதல்வி பின்னணிப் பாடகியும் இசையமைப்பாளருமான பவதாரணி மிக குறைந்த வயதிலேயே கடந்த வருடம் இந்த உலகை விட்டு மறைந்தது திரையுலகுக்கும் இசையுலகுக்கும் பேரதிர்ச்சியாக அமைந்தது. நேற்று (பிப்-12) அவரது நினைவேந்தல் நிகழ்ச்சியில் பிறந்த நாள், நினைவு நாள் இரண்டும் ஒரு சேர அனுஷ்டிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அவரது இசையமைப்பில் கடைசியாக உருவாகியுள்ள ‘புயலில் ஒரு தோணி’ படத்தின் இசையை இசைஞானி இளையராஜா அவர்கள் வெளியிட்டார்.
பின்னர் இளையராஜா பேசும்போது, “இன்று தான் பவதாரிணி பிறந்தநாளும் கூட. இதில் ஆச்சரியம் என்னவென்றால் அவருடைய பிறந்த நாளும் அவர் இறந்த திதியும் ஒரே நாளில் வந்துள்ளது. பெரும்பாலும் இப்படி யாருக்கும் அமைந்ததில்லை. அவருடைய ஆத்மா சாந்தி அடைந்திருக்கிறது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணமாக நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். அவர் கடைசியாக இசையமைத்த ‘புயலில் ஒரு தோணி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இங்கே நடக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் கேட்டுக் கொண்டனர். இதுவரை பவதாரிணி இசையமைத்து பாடிய பாடல்களை இங்கே எனது குழுவினர் பவதாரிணியின் நினைவாக இசையமைத்துப் பாட இருக்கிறார்கள். பவதாரணி இந்த உலகை விட்டு செல்வதற்கு முன் என்னுடன் கழித்த நாட்கள் என்னால் மறக்க முடியாதது” என்று நெகிழ்வுடன் கூறினார்.
கவிஞர் சினேகன் பேசும்போது, “நடந்தது நிஜமா, இல்லையா என்று நம்ப முடியாத ஒரு சூழலில் இந்த ஒரு வருடம் ஒரு கனவு மாதிரி இருக்கிறது. இசைஞானியின் நந்தவனத்திற்குள் அதிர்வு இல்லாமல் இசைத்துக் கொண்டிருந்த வீணை போல சகோதரி பவதாரணியின் அன்பும் இசையும் அவ்வளவு அழகாக இருக்கும். சகோதரர்கள் கார்த்திக் ராஜா, மற்றும் யுவன் கூட அவர் வெளிப்படுத்தும் அன்பை பார்க்கும் போது எனக்கே பொறாமையாக இருக்கும். அந்த அன்பில் ஒரு நிஜம் ஒளிந்திருக்கும். இரண்டு பேருமே பவதாரிணியை ஒரு தேவதை மாதிரி தாங்கி கொண்டிருப்பார்கள்.
தனக்கு என்ன தேவை என்பதை பாடலாசிரியர்களிடம் அழகாக கேட்டு வாங்கக் கூடியவர் பவதாரிணி. அந்த வகையில் அவருடைய வாழ்வு தொடரில் நானும் ஒரு ஓரத்தில் இருக்கிறேன் என்பதை நினைத்து பெருமைப்படுகிறேன். படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் ஈசன் ஆகியோர் அவரது இசையை நேசித்து தான் பவதாரிணியை இந்த படத்திற்கு இசையமைக்க வைத்தார்கள்.