ஏ ஆர் ரகுமானை விவாகரத்து செய்தார் அவரின் மனைவி சாய்ரா பானு.இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை விவாகரத்து செய்வதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக சாய்ரா பானுவின் வழக்கறிஞர் வந்தனா ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
“பல ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு, தன்னுடைய கணவர் ஏ.ஆர்.ரஹ்மானிடமிருந்து பிரியும் கடினமான முடிவை சாய்ரா எடுத்துள்ளார். அவர்களுடைய உறவில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க உணர்வுரீதியான அழுத்தத்துக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஒருவர் மீது ஒருவர் அவர்கள் ஆழமான அன்பை வைத்திருந்தாலும், பதட்டங்களும் சிரமங்களும் தங்களுக்கு இடையே ஒரு தீர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கியுள்ளன என்பதை அவர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த நேரத்தில் எந்த தரப்பினரும் இந்த விரிசலை சரிசெய்ய இயலாது.
வலி மற்றும் வேதனையில் தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக சாய்ரா தெரிவித்துள்ளார். தன்னுடைய வாழ்க்கையில் இந்த கடினமான அத்தியாத்தை கடக்கும் இந்த நேரத்தில், சாய்ரா தன்னுடைய பிரைவசியை மதிக்குமாறு பொதுமக்களிடம் கோருகிறார்” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானு திருமணம் கடந்த 1995ஆம் ஆண்டு நடைபெற்றது. இவர்களுக்கு கதீஜா, ரஹீமா மற்றும் அமீன் என்ற மூன்று குழந்தைகள் உள்ளனர்.