

‘பராசக்தி’ திரைப்படமாக வெளி வந்து, வெற்றி பெற்ற பின், 1953ல், சேலத்தில் ஒரு கண் காட்சியில், மீண்டும் நாடகமாக நடந்தது. அன்று ஏகப்பட்ட கூட்டம். சுமார் ஆறாயிரம் பேர், அந்த நாடகத்தை கண்டு ரசித்தனர். அதில் நீதிமன்றம் காட்சி தான், மிக முக்கியமானதும், சுவாரசியமானதும். ¶
மேடையில், சிவாஜி, வசனம் பேச ஆரம்பித்தவுடன், நாடகம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள், ஏற்ற இறக்கத்தோடு, அவர் கூடவே வசனத்தை பேச ஆரம்பித்தனர். எங்களுக்கெல்லாம் மிகுந்த ஆச்சரியம். இது வரை, தமிழ் மேடை நாடக வரலாற்றிலேயே நடந்திராத நிகழ்ச்சி இது. ¶
சிறிது நேரம் பொறுமை காத்த சிவாஜி, பின், இரு கை கூப்பியபடி, ரசிகர்களிடம், ‘இந்த நாடகத்தின் மீது உங்களுக்கு இருக்கும் பற்று, எங்களுக்கு நன்றாக புரிகிறது. நீங்கள் அமைதியாக இருந்தால் தான், தொடர்ந்து நாடகத்தை நடத்த முடியும். தயவு செய்து, என்னுடன் சேர்ந்து வசனம் பேசாமல் அமைதியாக இருங்கள்…’ என்று கேட்டு கொண்டார்.
அதன்பின், சிறிது நேரம் அமைதியாக இருந்த ரசிகர்கள், மீண்டும் சிவாஜி பேச ஆரம்பித்ததும், பழையபடி கூடவே பேச ஆரம்பித்தனர். இப்படியே, பல முறை நடந்தது. அதனால், அன்று அந்த ஒரு சீனை முடிக்கவே, 45 நிமிடங்கள் ஆனது. அடுத்த நாளும், இக்கண் காட்சியில் இந்நாடகத்தைநடத்தினர்.
முன்னெச்சரிக்கையாக சேலம் நகரின் பல பகுதிகளில், மாட்டு வண்டியில், ஆட்கள் தண்டோரா போட்டு, ‘இன்றைக்கு மாலை, நாடகத்தில் சிவாஜியோடு, சேர்ந்து வசனம் பேச வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்…’ என்று அறிவிப்பு செய்தனர். அன்றும், ரசிகர்களால் அரங்கு நிறைந்து காணப்பட்டது.
பராசக்தி அவருக்கு முதல் படம். முதல் படத்திலேயே இவ்வளவு பெரிய விசிறி படை, அவருக்கு உருவாகி இருப்பது மாபெரும் சாதனை என்று தான் கூற வேண்டும்.
பழம்பெரும் நடிகை சச்சு சொன்ன இணையதள தகவல் இது.