Mrs and Mr – விமர்சனம்
பிக் பாஸ் மற்றும் வெளியில் தனக்கு கிடைத்த வாய்ப்புகளின் மூலம் சிறுக சிறுக தான் சேர்த்த பணத்தை வைத்து ஜோவிகா விஜயகுமார் தயாரித்திருக்கும் படம் “Mrs and Mr”. அவரது அம்மா வனிதா விஜயகுமார் எழுதி, இயக்கி நாயகியாகவும் அவரே நடித்திருக்கிறார். வனிதாவுக்கு ஜோடியாக அவரின் நண்பர் ராபர்ட் மாஸ்டர் நடிக்க, ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார்.
40 வயதில் குழந்தை பெற்றுக் கொள்ள ஆசைப்படும் நாயகியை சுற்றி காதல், காமெடி படமாக உருவாகியுள்ளது. வெற்றி பெறுமா? இல்லையா? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, தாய்லாந்தில் வசிக்கும் வனிதா விஜயகுமார் ராபர்ட் மாஸ்டரை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். ராபர்ட் குழந்தை வேண்டாம் என்கிறார். 40 வயதில் இருக்கும் வனிதாவுக்கு அவரது அம்மா ஷகீலா மற்றும் தோழிகள் இப்போ விட்ட இனிமே குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என சொல்ல, வனிதாவுக்கும் குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆசை வருகிறது. ஆனால் ராபர்ட் குழந்தை வேண்டாம் என சொல்லி விலகி ஓடுகிறார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட, அதே சமயம் வனிதா கர்ப்பமாக, அவர் தன் தாயுடன் இந்தியாவுக்கு வந்து விடுகிறார். ராபர்ட் வனிதா இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? ராபர்ட் ஏன் குழந்தை வேண்டாம் என்கிறார்? கர்ப்பமான வனிதாவுக்கு குழந்தை பிறந்ததா? என்பதே மீதிக்கதை.
வனிதா விஜயகுமார், ராபர்ட் மாஸ்டர், ஷகீலா, ஆர்த்தி கணேஷ்கார், ஸ்ரீமன், பவர் ஸ்டார் சீனிவாசன், கணேஷ்கார், அனு மோகன் என பல நடிகர்கள், பழைய நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். எல்லாமே கொஞ்சம் ஓவர் ஆக்டிங்காகவே முடிந்து விடுவதால் படம் முழுக்க யாரையுமே பெரிதாக குறிப்பிட்டு பாராட்டும்படி இல்லை. இவர்கள் போதாதென்று கிரண் ரத்தோடு ஒரு பாடலுக்கு ஆடி விட்டு போகிறார்.
ஸ்ரீகாந்த் தேவா நல்ல இசையமைப்பாளர் தான் என்றாலும் அவருடைய பாடல்கள் எதுவும் பெரிதாக மனதில் நிற்கவில்லை. சுமாராகவே இருக்கிறது. கபில் ஒளிப்பதிவும் ஓகே ரகம். பல இடங்களில் எடிட்டர் ஃப்ளாஷ்களும் நம்மை டிஸ்டர்ப் செய்து கொண்டே போகிறது.
அடல்ட் காமெடி படம் என்று சொல்லும் அளவுக்கு தான் படமே இருக்கிறது.
தாய்மை போன்ற எமோஷனலான விஷயங்களைக் கொண்ட கதைக்களமாக இருப்பினும் கொஞ்சம் கூட எமோஷன் கனெக்ட் ஆகவில்லை. மாறாக நிறைய முகம் சுழிக்க வைக்கும் காட்சிகள் தான் ஆங்காங்கே வந்து நம்மை இம்சை செய்கிறது. மொத்தத்தில் வனிதா வெறும் நடிகராக மட்டும் நடித்து நல்ல கதையம்சம் உள்ள இளம் இயக்குனரை தேர்ந்தெடுத்து நடித்திருந்தால் கூட ஒரு தயாரிப்பாளராக ஜோவிகாவுக்கு நல்ல பெயர் கிடைத்திருக்கும். ஆனால் விழலுக்கு இறைத்த நீர் போல இந்த படம் அமைந்தது ஜோவிகாவின் துரதிருஷ்டம். இந்த படத்தின் தவறுகளை அடுத்த படத்தில் திருத்திக் கொள்வார் என நம்புவோம்.








