
நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை 16.10.2021 மற்றும் 17.10.2021 ஆகிய தேதிகளில் நடத்திய பனைச்சந்தை 2021 சிறப்பாக நடைபெற்றது.
பனைசார் பொருட்களின் விற்பனை அங்காடிகள், பனையின் பலவிதமான பயன்கள் குறித்த விளக்கங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னெடுப்பாக அக்டோபர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் பனைச்சந்தை 2021 நடைபெறும் என்று அக்கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை அறிவித்திருந்தது. முதன்முறையாக பனைப்பொருட்களை சந்தைப்படுத்தும் வகையில் அமைந்த இந்நிகழ்விற்காக தமிழ்நாடெங்கிலும் உள்ள பனைசார் பொருட்களை விற்பனைப்படுத்தும் 25 பனை விற்பனையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஒருங்கிணைக்கப்பட்டனர்.
இந்நிலையில் 16.10.2021 காலை 11 மணி அளவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் இந்நிகழ்வினை தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில் பனை பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான அவசியத்தை விளக்கினார். மேலும் பனைசார் பொருட்களின் உற்பத்தியை பெருக்கவும், பனைத் தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும், பனைத்தொழிலை நவீனப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். மேலும் சுற்றுச்சூழல் பாசறையின் சார்பில் முன்மொழியப்பட்டுள்ள பனைப்பொருளாதார திட்ட வரைவினை அவர் வெளியிட்டார். அதானைக் குறித்து பேசிய சீமான் “ஒரு பனை மரத்திலிருந்து பெறப்படும் பதநீர்/கள்ளின் மதிப்பு ரூபாய் 4,000, பனங்கற்கண்டு/கருப்பட்டியின் மதிப்பு ரூபாய் 6,000, பனையோலையின் மதிப்பு ரூபாய் 100, பனைநாரின் மதிப்பு ரூபாய் 70, பனை ஈக்கின் மதிப்பு ரூபாய் 70 என்று ஆண்டிற்கு ஒரு மரம் தரும் வருவாய் மொத்தம் 10,240 ரூபாய், தமிழகத்தின் 5 கோடி பனைமரங்களின் மூலம் கிடைக்கக்கூடிய வருவாயின் திறன் மொத்தம் 51,200 கோடி ரூபாய்” என்று பனையின் ஆண்டு சந்தை மதிப்பினை விளக்கினார். அவருடன் தமிழ்நாடு கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி உடனிருந்தார்.



அதனைத்தொடர்ந்து தமிழகமெங்கிலுமிருந்து வரவழைக்கப்பட்ட பனைத் தொழிலாளர்கள் தங்களது பனைப்பொருட்களை காட்சிப்படுத்தினர். பனைத் தொழிலாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் தங்கள் பொருட்களைக் காட்சிப்படுத்தவும், பொதுமக்கள் கலந்துகொள்ளவும் பதிவுக் கட்டணமோ அல்லது நுழைவுக்கட்டணமோ ஏதுமின்றி இலவசமாக அனுமதிக்கப்பட்டனர். பனையோலையில் செய்யப்பட்டிருந்த வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் அலங்காரப் பொருட்கள், பனங்கருப்பட்டி, பனங்கற்கண்டு, பதநீர், பனை இனிப்புகள், பனம்பழச்சாறு, முதலிய பனைசார் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இதன்மூலம் பனையின் முக்கியத்துவம் குறித்தும், பனைசார் வாழ்வியலைக் கொண்டவர்களின் நிலையைக் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பெருந்திரளாக கலந்துகொண்ட பொதுமக்களும், நாம் தமிழர் கட்சியினரும் பனைப்பொருள் அங்காடியினை பார்வையிட்டதோடு, தங்களுக்கு விருப்பமான பொருட்களை வாங்கியும் சென்றனர். மேலும் பனையேறிகளின் தற்கால சிக்கல்களை விளக்கும் விதமான காட்சிப்பொருட்களும் இடம்பெற்றன. நாம் தமிழர் கட்சி தமிழ்மீட்சி பாசறையின் சார்பில் ஓலைச்சுவடிகள் காட்சிப்படுத்தபட்டிருந்தன, ஓலைச்சுவடி அரங்கினை பார்வையிட்ட மக்கள் புதிய பனையோலையில் தங்கள் பெயர்களை எழுத்தாணி கொண்டு எழுதிப்பார்க்கவும் செய்தனர். இரண்டாம் நாளன்று ஒடியல் மாவில் செய்யப்பட்ட ஒடியல் கூழ் விற்பனை செய்யப்பட்டது, மேலும் பனையோலைப் பீப்பியும் காட்சிக்கு வைக்கப்பட்டது. சிறுவர் சிறுமியர் அதனை விருப்பத்தோடு வாங்கிச்சென்றனர். பனையோலையால் செய்யப்பட்டிருந்த விளையாட்டு பொருட்கள் மற்றும் பீப்பீ ஆகியவற்றை வைத்து சிறுவர் சிறுமியர் விளையாடிக்கொண்டிருந்ததால் பனைச்சந்தையே விழாக்கோலம் பூண்டது. பனைச்சந்தைக்கு வந்த மக்களுக்கு யாழ்ப்பாண பனை விதைகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
பனையோலைக்கொண்டு செய்யப்பட்ட கைவினைப்பொருட்கள் அனைத்தும் இரண்டாம் நாள் முடிவில் விற்றுத்தீர்ந்தன. மொத்தமாக 400 கிலோ அளவிலான பனைக்க்கருப்பட்டிகள் பனைச்சந்தையில் விற்பனையாகின. அதேபோல் ஒடியல் கூழினையும் மக்கள் அதிக அளவில் வாங்கிப் பருகினர். செம்மை அங்காடியின் சார்பில் பனைத்தேன் இச்சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது, அதுவும் முழுமையாக விற்றுத் தீர்ந்தது. பனை இனிப்பு பொருட்களும் முதல்நாளிலேயே விற்றுத்தீர, இரண்டாம் நாள் புதிதாக கொண்டுவரப்பட்டு அதுவும் முழுமையாக விற்கப்பட்டது. வெயிலுக்கு இதமாக மக்கள் அதிக அளவில் பனம்பழச்சாறினையும் வாங்கிப் பருகினர். மேலும் அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த சூழலியல் சார்ந்த புத்தகங்களையும் மக்கள் அதிக அளவில் வாங்கிச்சென்றனர். பனைச்சந்தையின் முடிவில் அனைத்து விற்பனையாளர்களும் தங்களின் எதிர்பார்ப்பிற்கு அதிகமாக வியாபாரம் ஆனதில் தங்கள் மகிழ்ச்சியை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களிடம் பகிர்ந்தனர்.
இந்நிகழ்வின் மூலம் பனையின் முக்கியத்துவம் குறித்தும், சிறப்புகள் குறித்தும் பனைசார் வாழ்வியலைக் கொண்டவர்களின் நிலையைக் குறித்தும் மக்கள் விழிப்புணர்வு பெற்றனர். அடுத்த பனை நிகழ்வு குறித்து ஆர்வத்துடன் கேட்டறிந்தனர். இறுதியாக 17.10.2021 மாலை 6:30 மணி அளவில் பனைச்சந்தை 2021 முடிவுக்கு வந்தது.









