ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சினிமாவில் நான் சம்பாதித்தது இயக்குனர் ராம்நாத் தான். நடிகர் கருணாஸ் புகழாரம்..!

by Tamil2daynews
April 17, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
சினிமாவில் நான் சம்பாதித்தது இயக்குனர் ராம்நாத் தான். நடிகர் கருணாஸ் புகழாரம்..!
நடிகர் கருணாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஆதார்’ படத்தின் இசை வெளியீடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. படத்தின் ஆடியோவை இயக்குநர் இமயம் பாரதிராஜா வெளியிட, வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்களும், படக்குழுவினரும் பெற்றுக்கொண்டனர்.
சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற ‘ஆதார்’ படத்தின் இசை வெளியீட்டில் இயக்குநர் இமயம் பாரதிராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவருடன் இசையமைப்பாளர் தேவா. பூச்சி முருகன், இயக்குநர் அமீர், இயக்குநர் இரா. சரவணன், தயாரிப்பாளர் தேனப்பன், நடிகரும், தயாரிப்பாளருமான அருண்பாண்டியன், படத்தின் தயாரிப்பாளர் திருமதி சசிகுமார், நடிகர் கருணாஸ் இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார், நடிகைகள் இனியா, ரித்விகா, உமா ரியாஸ்கான், ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
படத்தின் தயாரிப்பாளர் திருமதி சசிகுமார் பேசுகையில்,‘

‘ எனக்கு இரண்டு பெண்கள். ஒரு மகன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பள்ளியில் படிக்கிறார்கள். எங்கள் அனைவருக்கும் ஒரே இணைப்பு செல்போன் தான். எப்போதும் நான் என் கையில் கடிகாரத்தை கட்டிக்கொண்டு, குறிப்பிட்ட நேரத்திற்குள் பணிகளை நிறைவு செய்யவேண்டும் என்று அனைத்து வேலைகளையும் விரைவாக செய்து கொண்டிருப்பேன். வெளியில் செல்ல வேண்டும் என்றால் காரில் தான் செல்வேன். காரை மிகவும் ரசித்து ஓட்டுவேன். கார் மீது ஒரு சிறிய கீறல் கூட விழாமல் பாதுகாப்பாக பராமரிப்பேன். கடந்த ஓராண்டிற்கு முன் எதிர்பாராதவிதமாக பெரிய விபத்து ஒன்று ஏற்பட்டது. நான் காரை ஓட்டும் போது எப்பொழுதும் சீட்பெல்ட் அணிந்திருப்பேன். அதன் காரணமாகத்தான் அந்த விபத்திற்கு பின்னரும் உயிர் பிழைத்தேன். அதன் பிறகு இயக்குநரை சந்தித்தேன். ஆதார் படத்தின் கதையை நான் தயாரிப்பேன் என்று நினைக்கவில்லை. இதற்காகத்தான் நான் விபத்தில் உயிர் பிழைத்தேனோ..! என இயக்குநரிடம் கூறியதுண்டு. இந்தப்படம் மிகவும் நேர்த்தியாக உருவாகி இருக்கிறது. அனைவரும் ஆதரவு தர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

நடிகரும், தயாரிப்பாளருமான அருண்பாண்டியன் பேசுகையில்,
‘
‘  ‌ 18 வருடங்களுக்கு பிறகு தான் ‘அன்பிற்கினியாள்’ என்ற படத்தில் நான் மீண்டும் நடிக்கத் தொடங்கினேன். அதன் பிறகு என்னைத்தேடி எட்டு படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தது. அதில் எனக்கு இரண்டே இரண்டு படத்தின் கதைதான் பிடித்தது. அதில் ஒன்று ஆதார். அதன்பிறகு இயக்குநரிடம் இந்த படத்தில் வேறு யார் நடிக்கிறார்கள்? என கேட்டேன். கருணாஸ் என்றார். கருணாசுக்கு போன் செய்து ராம்நாத் கதையை சொன்னார். நன்றாக இருந்தது. அவர் சொன்னதை சொன்னவிதத்தில் எடுத்து விடுவாரா? என கேட்டேன். அவர்தான் முழு நம்பிக்கையுடன் எடுத்துவிடுவார் என்றார். கதையைச் சொன்ன மாதிரி எடுத்து விட்டால், நான் என் சம்பளத்தில் இருந்து 50 சதவீதத்தை சலுகையாக தருகிறேன் என்றேன். படம் மிக நேர்த்தியாக உருவாகியிருக்கிறது.‌
இங்கு மேடையில் இயக்குநர் சரவணன் பேசும்போது,‘
தமிழ் சினிமாவின் பொற்காலம் இது’ என தவறான தகவலை சொல்லி இருக்கிறார். தமிழ் சினிமாவின் பொற்காலம் என்பது, இயக்குநர் பாரதிராஜா படம் இயக்கிய காலம்…நாங்கள் நடித்த காலம்.. என அதனைத்தான் குறிப்பிடவேண்டும். தற்போது எல்லாம் மாறிவிட்டது. தமிழ் சினிமா எவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறது என குறிப்பிட வேண்டுமென்றால், இன்று தமிழகத்தில் வேற்று மொழி படங்கள் தான் அதிக வசூலை குவிக்கிறது. சமீபத்தில் வெளியான அஜித் படம் மற்றும் விஜய் படம் ஆகிய இரண்டும் படத்திற்காக செலவழிக்கவில்லை. தங்களுக்காக செலவழித்து கொண்டனர். தயாரிப்பு செலவின் 90 சதவீதத்தை ஊதியமாக கேட்டால் எப்படி? படத்தை உருவாக்க இயலும். இந்த மேடையை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு, ‘இந்தப் போக்கினை வன்மையாக கண்டிக்கிறேன்’. நாங்கள் படம் எடுக்கும் பொழுது 10% தான் சம்பளம், மீதி 90% படத் தயாரிப்பிற்காக இருக்கும். அந்தக் காலகட்டத்தில் தமிழ் சினிமா கதைகள் பட உருவாக்கத்தால் வென்றது
.
‘ஆதார் ’படத்தில் கருணாஸ் சம்பளம் வாங்கவில்லை. படத்தின் தயாரிப்பாளரை நாங்கள் யாரும் சந்திக்கவே இல்லை. இங்குதான் சந்திக்கிறோம். தமிழ் சினிமா ஒரு மோசமான திரை உலகம். இருப்பினும் இந்த சினிமா மீது நம்பிக்கை வைத்து, புதிய தயாரிப்பாளர் ஒருவர் வந்திருக்கிறார் என்றால், அவரை மனதார பாராட்டுகிறேன். இந்தப் படத்திற்கு நாங்கள் உண்மையாக உழைத்திருக்கிறோம். அதனால் இந்த படம் நிச்சயம் வெற்றிபெறும் என்றார்.
படத்தின் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பேசுகையில்,

” அருண்பாண்டியன் அவர்கள் நடிக்கும் படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்பது என்னுடைய கனவுகளில் ஒன்று அது. இந்த ஆதார் படத்தின் மூலம் நிறைவேறி இருக்கிறது. இதற்காக அவருக்கும், தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படத்தின் இயக்குநரான ராம்நாத்,‘ ஆதார்’ படத்தின் பின்னணி இசைக்காக மட்டுமே என்னை முதலில் அணுகினார். இந்த படத்தில் பாடல்கள் இல்லையா? என கேட்டேன். இல்லை என்று பதிலளித்துவிட்டு, ‘இது ஒரு லைவ்வான படம்.’ அதனால் பாடல்கள் இடம்பெறாது என்றார்.  அவரிடம் ‘திருநாள்’ படத்தில், ‘பழைய சோறு பச்சை மிளகா..’ என்ற வெற்றி பெற்ற பாடலை அளித்திருக்கிறோம். ரசிகர்கள் மீண்டும் நம்மிடம் எதிர்பார்ப்பார்கள் என எடுத்துக் கூறினேன்.

இந்தப்படத்தில் மூன்று மாதத்திற்கான பின்னணி இசை இருந்தது. இயக்குநரிடம் இந்த இடத்தில் ஒரு பாடலை வைக்கலாமா? என கேட்டேன். அதற்கு அவர் நீங்கள் மெட்டமைத்து பாடலை உருவாக்குங்கள். பிடித்திருந்தால் இடம்பெற வைக்கிறேன் என்றார். அந்தப் பாடல்தான் ‘தேன் மிட்டாய் மாங்காய் துண்டு..’. அந்த பாடலை கேட்டுவிட்டு பொருத்தமாக இருக்கிறது என்று சொல்லி வைத்திருக்கிறார். இதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நானும் கருணாசும் இணைந்து கமர்சியல் பாடல்களை உருவாக்கி இருக்கிறோம். முதன்முதலாக இது போன்ற எமோஷனல் படத்தில் இணைந்து பணியாற்றியிருக்கிறோம். நிச்சயமாக வெற்றி பெறும் என நம்புகிறேன்’: என்றார்.

இயக்குநர் அமீர் பேசுகையில்,
” பொதுவாக ஒரு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் போது, அந்த படக்குழுவினருடன் நமக்கு எந்த தொடர்பும் பெரிதாக இருக்காது. ஆனால் இந்தப்படத்தில் பணியாற்றியவர்களுக்கும், மேடையில் வீற்றிருப்பவர்களுக்கும் எனக்கும் நல்லதொரு புரிதலுடன் கூடிய தொடர்பு இருக்கிறது. இயக்குநர் ராம்நாத் அவருடைய முதல் படமான ‘திருநாள்’ படத்தின் கதையை என்னிடம் சொன்னார். நீங்கள்தான் நாயகனாக நடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். ஒரு முதல் பட இயக்குநர் கதையை சொன்னாலும், அன்றைக்கு அதில் நடிக்க முடியாத ஒரு சூழல் இருந்தது. ‘ஆதார்’ படத்தின் கதையையும் என்னிடம் முதலில் சொன்னார். கதையைக் கேட்டதும் மிகவும் பிடித்திருந்தது. யார் நடிக்கிறார்கள்? என கேட்டபோது, இயக்குநர் இமயம் பாரதிராஜா என சொன்னார். சரி பாரதிராஜாவுடன் நடித்து விடலாம் என திட்டமிட்டேன். ஏனெனில் தமிழ் சினிமாவை திசை மாற்றிய கலைஞர்களில் மிச்சமிருக்கும் ஒரே கலைஞன் அவர்தான். அவரிடம் வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைத்தேன்.

அவரை சந்தித்த போது நீங்கள் நினைக்கும் பாரதிராஜா அங்கு இல்லை. அவர் குற்ற பரம்பரை என்ற திரைக்கதையில் பேய்க்காமன் என்ற ஒரு கதாபாத்திரத்தை எப்படி நடிக்க வேண்டும் என்பதை நடித்துக் காட்டினார். வயசான தாத்தா போன்ற அந்த கதாபாத்திரத்தில் நடித்து காட்டினார். அந்த நடிப்பு என் கண்ணில் அப்படியே இன்னும் நிற்கிறது. ஒரு மார்லன் பிராண்டோ, ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு எத்தகைய நடிப்பை வெளிப்படுத்த முடியுமோ…!  அதே போன்றதொரு நடிப்பை அப்போது வெளிப்படுத்தினார். பாரதிராஜாவால் தற்போது அதே போல் நடிக்க இயலுமா எனத் தெரியாது. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் அதனை செய்து காட்டினார். அதற்குப் பிறகு என்னிடம் பேசும்பொழுது சிகப்பு ரோஜாக்கள் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க தீர்மானித்திருக்கிறேன் என்றார். எப்போதும் சினிமாவை பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பார். அவர் மனதளவில் இன்றும் இளைஞர் தான். தற்போது கூட உடல் சோர்வாக இருக்கிறது. இருந்தாலும் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டிருக்கிறேன் என்றார். இது போன்ற ஒரு கலைஞருடன் பணியாற்றக் கிடைத்த வாய்ப்பு இரண்டாவது முறையும் நழுவி போனது.

இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘தேன் மிட்டாய் மாங்காய் துண்டு..’ என்ற பாடலை எழுதிய கவிஞர் யுரேகாவைப் பற்றி சொன்னார்கள். அவருடன் நான் மதுரையில் ஒன்றாக சுற்றித் திரிந்த காலகட்டம் உண்டு.

இந்தப்படத்தின் முன்னோட்டத்தை பார்த்தபோது நாம் இயக்குநர் ராம்நாத்தை தொடர்ந்து பரிசோதிக்கிறோமோ..! என்ற எண்ணம் ஏற்பட்டது. தற்போது அவரது இயக்கத்தில் கதையே கேட்காமல் நடிக்க வேண்டுமென்ற எண்ணம் உண்டாகி இருக்கிறது. இயக்குநர் ராம்நாத்திடம் ஒரு வேகம் இருக்கிறது. எப்படியாவது ஒரு நல்ல விசயத்தை செய்து விட வேண்டும் என்று எண்ணுகிறார். எந்த இடத்தை நோக்கி செல்ல வேண்டுமோ.. அதே நோக்கி செல்வதில் குறியாக இருக்கிறார். அதற்கு உண்டான தகுதி இந்த ‘ஆதார்’ படத்தில் இருக்கிறது.

நடிகை இனியாவுடன் இணைந்து நடிப்பதற்கான வாய்ப்பு இரண்டாவது முறையும் தவறியிருக்கிறது. இந்த படத்தின் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த்தேவாவிற்கு அவரது தந்தையும், இசையமைப்பாளருமான தேவா ஒரு கோரிக்கை வைத்தார். அதாவது ‘மெலோடியில் கவனம் செலுத்தி உருவாக்கு. அதுதான் உன் அடையாளத்தை உயர்த்தும்’ என்றார். தேவா சரியாகத்தான் கணித்திருக்கிறார். அதனால் ஸ்ரீகாந்த் தேவா தொடர்ந்து மெலோடியான பாடல்களை அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

அருண்பாண்டியன் பேசும்போது நிறைய புள்ளி விவரங்களை சொல்லிவிட்டு, தமிழ் சினிமா தற்போது பின் தங்கி இருக்கிறது என குறிப்பிட்டார். தயாரிப்பாளர்கள் நடிகர்களுக்கு படத்தின் பட்ஜெட்டில் 90% அல்லது 80% சம்பளமாக தருகிறார்கள். தர வேண்டியிருக்கிறது என சொன்னார். ஏன் கொடுக்கிறார்கள் என்பதை நான் கேட்கவில்லை. ஆனால் அவர் பேசும்போது ஒரு வார்த்தையை பயன்படுத்தினார். அதை தவறுதலாகத் தான் பயன்படுத்தியிருப்பார் என நினைக்கிறேன். ‘தமிழ் சினிமா எல்லா வகையிலும் பின் தங்கி இருக்கிறது’ என சொன்னார். இதை நான் ஏற்க மறுக்கிறேன். இந்தியாவிற்கே புதிய பாணியிலான சினிமாவைக் கற்றுக் கொடுத்தது தமிழ் சினிமா. ஒருநாளும் தமிழ் சினிமா பின் தங்காது. ‘ஆர் ஆர் ஆர்’, ‘கே ஜி எஃப்’ போன்ற படங்களை வைத்து தமிழ் சினிமாவை எடை போடாதீர்கள். ஏனென்றால் நாங்கள் அந்த காலத்திலேயே ‘சந்திரலேகா’ என்ற பிரமாண்டமான படைப்பை உருவாக்கி இருக்கிறோம். ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘நாடோடி மன்னன்’, ‘உலகம் சுற்றும் வாலிபன்’ போன்ற படைப்புகளுக்கு நிகராக இதுவரை வேறு எந்த மொழிப் படங்களும் உருவாகவில்லை. சமூக படைப்புகளுக்கு இணையாகவோ எளிமையான படைப்புகளுக்கோ ஈடு இணை இல்லை. அதனால் தமிழ் சினிமா எப்போதும் இந்திய சினிமாவிற்கு முன்னோடி தான். ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்ப வணிக சினிமாவாக மாறும்போது மாற்றங்கள் ஏற்படும். ‘16 வயதினிலே’, ‘கிழக்கு சீமையிலே’ போன்ற படங்கள் வெளியான போதும், வணிக சினிமா இருந்திருக்கிறது. ஆனால் அவை ஒருபோதும் இவை வெளியாவதற்கு தடையாக இருந்ததில்லை என்பதை முக்கியமாக பார்க்க வேண்டும். தமிழ் சினிமாவில் பணியாற்றிய கலைஞர்கள் தான் இன்று வேற்று மொழிப்படங்களில் பணியாற்றுகிறார்கள். இயக்குநர் ராஜமவுலி அவர்களே ஆர் ஆர் ஆர் படத்தின் விளம்பர நிகழ்வில்,“ தமிழ்சினிமா எங்களது தாய்வீடு என்று சொல்லியிருக்கிறார்.. இங்கு கற்றுக் கொள்ள வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது என்றும், எங்களுக்கு தமிழ்சினிமா பிரமிப்பை தருகிறது.” என்றும் சொன்னார். அதனால் தமிழ் சினிமாவில் முன்னேற்றத்திற்கு கலைஞர்களும், தொழில்நுட்ப கலைஞர்கள் என்றைக்கும் அயராது பாடுபட்டுக் கொண்டிருப்பார்கள்.

‘நந்தா’ படத்தில் காமெடி நடிகராக தேர்வு செய்யப்பட்டதிலிருந்து நடிகர் கருணாசை எனக்குத் தெரியும். நகைச்சுவை நடிகராக வளர்ந்து, ஒரு அரசியல் கட்சியை தொடங்கி, அதன் தலைவராகவும் பணியாற்றி வருகிறார். பல்வேறு சமூக விசயங்களில் கலந்து கொண்டாலும் கருணாசின் முகத்திற்கு திரையில் குணச்சித்திர வேடத்திற்கு ஒரு வெள்ளந்தியான… ஒரு எதார்த்தமான மனிதருக்கு… அப்படியே நூறு சதம் பொருந்துவார். அது இந்த ‘ஆதார்’ படத்தில் முழுமையாக தெரிகிறது. இந்தப் படத்தில் மட்டுமல்ல ‘சங்க தலைவன்’ என்ற ஒரு படத்திலும் கருணாஸ் நடித்திருந்தார். அந்தப் படத்தை வெளியிட்ட வெற்றிமாறனிடம் படத்தை விளம்பரப்படுத்தும் போது, ‘கருணாசின் முகத்தையும் பெரிதாக இடம் பெற வையுங்கள். படம் ஓடும்’ என தெரிவித்தேன். அந்தப் படத்தில் கருணாஸ் பிரமாதமாக நடித்திருந்தார். தமிழ் திரையுலகில் நடிகர் நாகேஷிற்கு பிறகு மிகச் சிறந்த குணச்சித்திர நடிகர் கருணாஸ் தான். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.” என்றார்.

நடிகை இனியா பேசுகையில்,

” அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த ஆதார் படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். இந்த படத்தில் சரோஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். மிகவும் அழுத்தமான கதாபாத்திரம். சில வசனங்களை பேசியிருக்கிறேன். அந்த வசனங்களை அழுத்தி வித்தியாசமாக உச்சரிக்க வேண்டும் என்பதையும், அதன் அவசியத்தையும் இயக்குநர் ராம்நாத் சொன்னார். அதன்பிறகு அவர் எதிர்பார்த்தபடி பேசி நடித்திருக்கிறேன். படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் என்னை சந்திக்க தோழி ஒருவர் வருகை தந்தார். அவர் என்னை பார்த்துவிட்டு இதுவரை இல்லாத புது இனியாவாக இருக்கிறாய் என்று குறிப்பிட்டார். இந்தப்படத்தில் என்னைப் போலவே ஒவ்வொரு கதாபாத்திரமும் வித்தியாசமாக இருந்தது. உடன் நடித்த நடிகர் கருணாஸ் படப்பிடிப்பு தளத்திலும் கூட சினிமாவை பற்றியே பேசிக்கொண்டிருப்பார். பல விசயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். இந்தப்படத்தில் நடிக்கத் தேர்வு செய்ததற்காக இயக்குநருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அண்மை காலமாக நான் நடிப்பதற்கு வாய்ப்புள்ள கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறேன்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் சிறப்பு விருந்தினரான இயக்குனர் பாரதிராஜா பற்றி ஒரு விசயத்தை சொல்லியாக வேண்டும். ‘வாகை சூடவா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் கலந்து கொண்ட போது,‘ நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிக்கத் தெரிந்த ஒரு நடிகை அறிமுகமாக இருக்கிறார்’ என பாராட்டினார். அவர் இந்த வார்த்தை எனக்கு ஒரு ஆஸ்கார் விருது போல் இன்றும் பசுமையாக மனதில் நிற்கிறது. அவருடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கும், அவரைப் போன்ற மூத்த படைப்பாளிகளுடன் பழகுவதற்கு கிடைத்த வாய்ப்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பாரதிராஜா சார் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு கிட்டியது. ஆனால் அது நழுவி போனது. எப்படியாவது அவருடைய இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. நீங்கள் மீண்டும் படத்தை இயக்கினால் எனக்கு ஒரு வாய்ப்பு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், நடிகர் நடிகைகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த ஆதார் திரைப்படம் வித்தியாசமான முயற்சி. ரசிகர்கள் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

நடிகர் கருணாஸ் பேசுகையில்,

” முதலில் இந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கு நன்றி. ஏனெனில் நான்தான் பினாமி பெயரில் இந்தப் படத்தை தயாரிக்கிறேன் என தகவல்கள் பரவியிருக்கிறது. கூவம் என்றால் நாறும். அதிலும் கூவத்தூர் சம்பவத்திற்குப் பிறகு ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதெல்லாம் தவறு. அதே தருணத்தில் இவர்களை திருத்துவது என் வேலை அல்ல. அதற்கான கால நேரமும் எனக்கு இல்லை.

ராம்நாத்தின் ‘ஆதார்’ கதையை கேட்டு, அந்தக் கதை மீது நம்பிக்கை வைத்து, தயாரிப்பாளர்கள் முதலீடு செய்துள்ளார்கள். அவருக்கும் அவருடைய துணைவியாருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இயக்குநர் அமீர் அண்ணன் என்னை வாழ்த்தி பேசியது மறக்க முடியாத தருணமாக நினைக்கிறேன். அமீர் இயக்கத்தில் உருவான ராம் படத்தில் நான்தான் நடிக்க ஒப்பந்தமானேன். இதற்காக சென்னை துறைமுகம் வரை சென்று போட்டோசூட்டிலும் கலந்து கொண்டேன். அதன் பிறகு அவர்கள் இருவரும் நண்பர்கள். அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் பொழுது நான் மூன்றாம் மனிதராக வேடிக்கை பார்த்திருக்க வேண்டும் ஆனால் சற்று உரிமை எடுத்துக்கொண்டு, உள்ளே புகுந்து சிலவற்றை பேசினேன். அது தவறாக முடிந்துவிட்டது. உடன் இருந்தவர்களும் எனக்கு சரியான புத்திமதியை எடுத்துரைக்கவில்லை. இதனால் எனக்கு கிடைத்த வாய்ப்பு என்னைப்போன்ற மற்றொரு எளிய மனிதனுக்கு கிடைத்தது. அந்த வகையில் எனக்கு மகிழ்ச்சிதான். இயக்குநர் அமீருடன் பணியாற்றவில்லை என்ற வருத்தம் என்னுள் இருந்தது. ஆனால் இன்று அவர் என்னை பாராட்டி பேசியது. அதிலும் மறைந்த நடிகர் நாகேஷ் அவருடன் ஒப்பிட்டு பேசியது என்னால் வாழ்நாள் முழுவதும் மறக்க இயலாது.

இந்தப் படத்தில் பாரதிராஜா நடிக்க வேண்டியதிருந்தது. ஆனால் அவர் நடிக்கவில்லை. இந்த தருணத்தில் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திரா சொன்ன ஒரு விசயம் நினைவுக்கு வருகிறது. ‘ஒரு நல்ல சினிமா தனக்கான தொழில்நுட்ப கலைஞர்களையும், தனக்கான நடிகர்களையும் தானே தேடிக்கொள்ளும்’ என்பார். அது இந்தப் படத்தில் முழுமையாக நிறைவேறியது.

ஏராளமானவர்களுக்கு ‘திண்டுக்கல் சாரதி’ படத்தில் சிம்ரன் தான் நாயகி என தெரியாது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் சிம்ரனை தான் எனக்கு நாயகியாக அளித்தார்கள். ஆனால் நான் என் தகுதிக்கு சிம்ரன் வேண்டாம் என உறுதியாக கூறினேன். அவர்கள் நடித்திருந்தால் இந்த படம் இந்த அளவிற்கு வெற்றி பெற்றிருக்காது. ஏனெனில் என்னைப்போன்ற கதாபாத்திரத்திற்கு ஆவரேஜான பெண்ணே அழகாக இருப்பார். அந்தக் கதைக்கு அவ்வளவு பெரிய நாயகியை நடிக்க வைத்தால், ரசிகர்களே சிம்ரன் ஓடி விடுவார் என்று நினைத்து விடுவார்கள். அதனால் சிம்ரன் வேண்டாம் என உறுதியாக முடிவெடுத்து, வேறு ஒருவரை நடிக்க வைத்தேன். இது எப்படி பொருத்தமான முடிவாக இருந்து படத்தை வெற்றி பெற செய்ததோ.. அதேபோல் இந்த படத்திலும் இந்த கதை தனக்கான நடிகர்களை தேர்வு செய்து கொண்டது.

பொது வாழ்க்கை என்று வந்துவிட்டால் ஆயிரம் பேர் ஆயிரம் விமர்சனத்தை முன் வைப்பார்கள். அதற்காக வருத்தப்பட்டு பதிலளிப்பதை விட நடப்பதை எதிர்கொள்ள வேண்டும். இருபத்தியிரண்டு ஆண்டுகளுக்கு முன் நந்தா படத்தின் படப்பிடிப்பை இங்குதான் அரங்கம் அமைத்து நடத்தினார்கள். ஆனால் இன்று இந்த இடம் வேறு ஒருவரின் கைகளுக்கு மாறி விட்டது. ஆனால் 22 ஆண்டுகளுக்கு பிறகு அதே இடத்தில் நான் நடித்த ஒரு படத்தின் இசை வெளியீடு நடைபெறுகிறது என்றால், உண்மையிலேயே எனக்கு கிடைத்த வெற்றியாக தான் பார்க்கிறேன்.
எனக்கு இருந்த சின்ன சின்ன ஆசைகளை எல்லாம் இந்த சினிமாதான் நிறைவேற்றியது. அதனால் தற்போது எனக்கு யார் மீதும் பொறாமையோ.. மனவருத்தமோ கிடையாது. சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவில் முதலீடு செய்தேன். லாபத்தையும் பார்த்தேன். நஷ்டத்தையும் பார்த்தேன். சினிமாவில் நான் நிறைய கஷ்டங்களும் லாபங்களும் தோல்விகளும் சந்தித்தாலும் சினிமா என்னை ஒருபோதும் கைவிடவில்லை. நான் சினிமாவுக்கு உண்மையாக இருந்தேன். அதனை அளவுகடந்து நேசித்தேன். நேசித்தும் வருகிறேன். ‘சேது’ படத்தில் நான் நடிக்கவில்லை. ஆனால் அந்த படம் வெளிவருவதற்கு நான் கடுமையாக உழைத்துக் கொண்டே இருந்தேன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அந்தப்படத்தின் வெளியீட்டுக்காக உழைத்ததால், இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகனாக அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. அதனால் சினிமாவில் நீ என்ன சம்பாதித்தாய்? என்று யாராவது என்னைக் கேட்டால், இந்த சினிமாவில் நான் ராம்நாத் என்ற ஒரு இயக்குநரை  நண்பராக சம்பாதிக்கிறேன் என்று உறுதியாக சொல்வேன் நன்றி.” என்றார்.
இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் பேசுகையில்,
” குறும்படம் ஒன்றிலிருந்து ‘ஆதார்’ என்ற ரியால்டி ஃபிலிமை இயக்குவதற்கான ஆற்றலையும், உந்துதலையும் வழங்கிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட்ட பார்த்திபன் அவர்களுக்கு நன்றி. இந்தப் படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்ட இயக்குநர் செல்வராகவனுக்கு நன்றி. ‘சினிமா  டைரக்டருக்கான மீடியம்’ என என்னுள் ஆழமாக விதைத்த இயக்குநர் ஜனநாதன் அவர்களுக்கு இத்தருணத்தில் அஞ்சலி செலுத்துகிறேன். அவர் தற்போது நம்மிடம் இல்லை என்றாலும், அவர் இந்த படைப்பை கண்டிருந்தால் நிச்சயம் பாராட்டியிருந்தார். திரையில் எதனை பேச வேண்டும் என்று அவர் என்னிடம் கேட்டுக்கொண்டாரோ.. அதனை நான் இந்த படத்தில் ஓரளவு பேசி இருப்பதாகவே நினைக்கிறேன். 2016 ஆண்டிற்குப் பிறகு நான் ‘ஆதார்’ கதையை மட்டுமே தயார் செய்தேன். இது ஒரு நான் லீனியர் பாணியிலான திரைக்கதை.
இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களை நேரில் சந்தித்து, இந்த கதையை சொன்னேன். கதையைக் கேட்டுவிட்டு சிலாகித்து பாராட்டினார். எப்படி இது போன்ற ஒரு கதாபாத்திரத்தை யோசித்தாய்? எப்படி இதனை திரைக்கதையாக எழுத முடிந்தது? என் தோளில் தட்டிக் கொடுத்தார். தற்போது இந்தப் படத்தில் அருண்பாண்டியன் ஏற்று நடித்திருக்கும் கதாபாத்திரத்தில் பாரதிராஜாவை நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தேன். அதன் பிறகு பல சந்தர்ப்பங்களிலும் இயக்குநர் பாரதிராஜா இந்த கதை குறித்து என்னிடம் கேட்டுக் கொண்டே இருந்தார். இது எனக்கு மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருந்தது காலச் சூழலில் அவர் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க முடியவில்லை.
அதன் பிறகு இயக்குநர் அமீர் அவர்களிடம் தகுதியை விவரித்து இருக்கிறேன். திருநாள் படத்தின் கதையின் நாயகனாக ஒரு கட்டத்தில் அமீர் தான் இருந்தார். அவரிடம் கதையை சொன்னபோது சற்று காத்திருக்குமாறு கூறினார். அதன் பிறகு வேறு கால சூழலால் அவருடன் இணைந்து பணியாற்ற முடியவில்லை. இதில் எனக்கு ஒரு மகிழ்ச்சி என்னவென்றால், அடுத்து இவனிடம் கதையை கேட்காமல் நடிக்கலாம் என்று சொன்னது மகிழ்ச்சியாக இருக்கிறது பெருமிதமாக இருக்கிறது. ஏனென்றால் அவர் இயக்கிய படங்களை நான் திரும்பத் திரும்ப பார்த்து வியந்து பிரமித்திருக்கிறேன்.
ஆதாரை பொறுத்தவரை இரண்டு விசயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இப்படத்தின் திரைக்கதையின் முழுவடிவம் பல்வேறு தயாரிப்பு நிறுவனங்களிடம் செல்கிறது. பல நிறுவனங்கள் இப்படத்தைத் தயாரிக்க முன்வந்தன. அவர்களின் தயாரிப்பு ஒருங்கிணைப்பில் ஏதேனும் ஒரு இடத்தில் தடை இருந்து கொண்டே இருந்தது. ஒரு தருணத்தில் நான் உளவியல்ரீதியாக பாதிக்கப்பட்டேன். இந்த திரைக்கதை ஏன் படைப்பாக உருவாகவில்லை என்ற கோபம் என்னுள் இருந்தது. ஐந்தாண்டு காலம் இந்த திரைக்கதை ஏன் அமைதியாக இருக்கிறது? என்று எனக்கு புலப்படவில்லை. ஓர் ஆண்டிற்கு முன்னர் தான் இதற்கான விடை எனக்கு கிடைத்தது. இந்த திரைக்கதையை நானே தயாரிக்க போகிறேன் என்பதுதான் அதற்கான விடை. முதல் பிரதி அடிப்படையில் இந்த படத்தை தயாரிக்க திட்டமிட்டேன். உடனடியாக இயக்குநர் அமீர் அவர்களைச் சந்தித்து ஆலோசனை செய்தேன். அவரிடம் கேட்டபோது உன்னால் முடியும் வெற்றியுடன் திரும்பி வா என நம்பிக்கை அளித்தார். அதன்பிறகு படத்தை நிறைவு செய்த பிறகுதான் இந்த இசை வெளியீட்டு விழா அழைப்பிதழ் கொடுப்பதற்காக தான் அவரை சந்தித்தேன். இங்கு மேடையில் வீற்றிருக்கும் அனைத்து திரை ஆளுமைகளும், இதற்கு வெவ்வேறு வகையில் உதவி செய்து இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நடிகர் கருணாஸ் உடன்  இருபத்தியிரண்டு ஆண்டுகள் பயணித்து வருகிறேன். நந்தாவிற்கு பிறகு அவருடைய நட்பு என்னுடைய அடையாளமாகவே மாறிவிட்டது. திரையுலகில் நான் யாரை சந்தித்தாலும், என்னிடம் கருணாஸ் எப்படி இருக்கிறார்? என்று முதலில் கேட்டுவிட்டு, பிறகு தான் என்னை பற்றி கேட்பார்கள். அந்த அளவிற்கு எங்களின் நட்பு பயணிக்கிறது. இது எனக்கான அடையாளமாகவும், கடின உழைப்புக்கு கிடைத்த பலனாகவும் நினைக்கிறேன். 2010ஆம் ஆண்டின் என்னுடைய முதல் படமான ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்தோம். அது ஒரு மறக்க முடியாத நிகழ்வு.
ஷங்கர் சார் அலுவலகத்தின் வெளியில் நான் அமர்ந்திருக்கிறேன். உள்ளே கருணாஸ் சென்று அவருக்கு அழைப்பிதழை கொடுத்துவிட்டு பேசிக்கொண்டிருக்கிறார். சிறிது நேரத்திற்குப் பிறகு வெளியே வந்தவுடன் கருணாஸ் என்னை சுட்டிக் காட்டி, ‘இவர்தான் ராம்நாத்’ என என்னை அறிமுகப்படுத்தினார். இயக்குநர் ஷங்கர் எனக்கு கைகொடுத்து, சிறிது நேரம் இமைக்காமல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு ‘நல்லா வருவீங்க. உங்கள பத்தி ஒரு வார்த்தை சொன்னாரு. நான் இதுவரைக்கும் கோடம்பாக்கத்தில் கேட்காத வார்த்தை அது.’ என சொன்னார். பிறகு, ‘அவரே அண்ணே நீங்க சினிமாவுல என்ன சம்பாதிச்சு இருக்கீங்க?’ என கேட்டபோது, கருணாஸ், ‘நான் சினிமாவில் டைரக்டர் ராம்நாத் என்பவரை சம்பாதிக்கிறேன் வெளியில் உட்கார்ந்து இருக்கிறான்’ என சொன்னாராம். இந்த வார்த்தையை 2010ஆம் ஆண்டில் இயக்குநர் ஷங்கரிடம் கருணாஸ் சொல்லியிருக்கிறார். என்னைப் பற்றி உயர்வாக கூறிய நடிகர் கருணாசுக்கு நான் என்ன  திருப்பிச் செய்யப்போகிறேன் என யோசித்துக்கொண்டே இருந்தேன். அதற்கான ஒரு பதிலாக இதில் கருணாஸ் சார் நடித்திருக்கிறார். இதை நான் உறுதியாகவே சொல்வேன். இந்தப் படம் வெளியான பிறகு நடிகர் கருணாசுக்கு மிகப்பெரிய மரியாதை கிடைக்கும்.
இந்த படத்தில் நடித்திருக்கும் நடிகை ரித்விகா கதையை கேட்டதிலிருந்து தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக என்னை பின் தொடர்ந்து, படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். ஏனெனில் கதையை நேசித்த நடிகை அவர்.

இந்தப் படத்தில் நடித்த நடிகர் திலீபனும் இப்படித்தான். கதையை கேட்ட பிறகு சிறிய வேடமாக இருந்தாலும் இந்த படைப்பில் என்னுடைய பங்களிப்பு இருக்க வேண்டும் என்று உறுதியாக கூறினார்.

இந்தப் படத்தில் நடித்த தெலுங்கு நடிகர் பிரபாகர், எனக்காகவும், படத்தில் அவருடைய கதாபாத்திரத்துக்காகவும் சம்பளத்தை குறைத்து வாங்கிக் கொண்டார்.

ஒன்றரை வருடத்திற்கு முன் ஆதார் படத்தின் திரைக்கதை லீனியர் வெர்ஷனில் இருந்தது. அப்போது நாயகி வேடத்தில் நடிக்க நடிகை இனியா பொருத்தமாக இருப்பார் என தேர்வு செய்து வைத்திருந்தேன். ஆனால் இந்தப் படத்தில் இறுதியாக இணைந்தவர் நடிகை இனியா. படத்தயாரிப்பு, சிக்கனமான படப்பிடிப்பு திட்டமிடல்  போன்ற பல காரணங்களால் என்னுடைய வேகத்திற்கு ஈடு கொடுக்க கூடிய அனுபவசாலி இனியா என்பதை உணர்ந்துகொண்டு அவரிடம் பேசி படப்பிடிப்பில் கலந்து கொள்ள வைத்தேன். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல் இந்த படத்தில் நடிகர் அருண்பாண்டியன் அவர்களின் பங்களிப்பும் மறக்க முடியாது. .அவர் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்த நேரம். அவர் கதையை கேட்டுவிட்டு நடிக்க ஒப்புக்கொண்டார். அத்துடன் தன்னுடைய உடல்நிலை குறித்த விவரத்தையும் தெரிவித்தார். அவரிடம் இரவு நேர படப்பிடிப்பு இருக்கிறது என சொன்னபோது, சற்றும் தயங்காமல்… ஓய்வெடுக்காமல்… படத்தின் கதாபாத்திரத்தின் மீது இருந்த அதீத நம்பிக்கையால் முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார். இது என்னால் மறக்கவே இயலாது. அவருக்கு சினிமா மீது மிகுந்த பற்று இருப்பதை அந்தத் தருணத்தில் நேரடியாக உணர்ந்தேன். பல நாட்கள் மாத்திரை சாப்பிடாமல் படத்தில் நடித்தார். இதுகுறித்து அவரிடம் பின்னர் கேட்டபோது,“ மாத்திரை சாப்பிட்டால் தூங்க வேண்டும். தூங்கினால் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாது. அதனால்… .’என்று சொன்ன போது என் கண்ணில் கண்ணீர் வந்தது.

ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி நான் அதிகம் பேசாதவர் என்பதையும், என் காட்சிகள் எப்படி அமைய வேண்டும் என்பதையும் துல்லியமாக உணர்ந்தவர். அதனால் அவருடன் பணியாற்றியது இனிமையான அனுபவம். நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரின் முழுமையான ஒத்துழைப்பு அமைந்ததால் ‘ஆதார்’ சிறப்பாக  தயாராகியிருக்கிறது.
தயாரிப்பாளர் 20 ஆண்டுகால நண்பர். தஞ்சாவூரில் வீடியோ விஷன் என்ற கடையை தொடங்கி நடத்தியவர். நானும் அவரும் ஒன்றாகவே சினிமாவிற்கு வந்தோம். அவர் நடிகராகவும், நான் இயக்குநராகவும் முயற்சித்தோம். ஆனால் ஒரு புள்ளியில் அவர் தொடர்பு எல்லைக்கு வெளியே சென்றார். சரியாக சொல்லவேண்டும் என்றால், 21 ஆண்டுகள் தொடர்பு கொள்ளவில்லை. அதன் பிறகு கடந்த ஆண்டு ஒரு நாள் காலை தொலைபேசி மூலம் என்னை தொடர்பு கொண்டார். எனக்கு பேரதிர்ச்சி. என்னாச்சு? ஏன் தொடர்பு கொள்ளவில்லை? என கேட்டபோது, அவர் வெளிநாடு சென்று சம்பாதித்த கதையை சொன்னார். அதன்பிறகு நடைபெற்ற தொடர் பேச்சுவார்த்தையில் அவர் படத்தை தயாரிப்பதில் ஆர்வம் காட்டினார். அவருடைய தங்கை வெண்ணிலா. இந்தப் படத்தின் தயாரிப்பாளர். அவர் மேடையில் பேசும்போது அவர் சந்தித்த விபத்து குறிப்பிட்டார். விபத்திலிருந்து நான் உயிருடன் மீண்டது இந்தப் படத்தைத் தயாரிப்பதற்காக தான் என சொன்னார்.
ஒரு கிராமத்திலிருந்து புறப்பட்டு சென்னைக்கு வரும் ஒரு தம்பதி, எப்படி அவர்களுக்கே தெரியாமல் ஒரு வணிக சந்தை அரசியல் சிக்கி சிக்கினார்கள் என்பதும், அதனை தமிழ்நாடு காவல்துறையினர் எப்படி அணுகினார்கள் என்பதையும் தான் ‘ஆதார்’ விரிவாக திரைக்கதையாக பேசுகிறது.
நான் திரையுலகில் போராடித்தான், எனக்கான அடையாளத்தைப்பெற்றிருக்கிறேன். எனக்கு அதிர்ஷ்டம் கை கொடுத்ததில்லை, ஆனால் நான் கடைப்பிடித்த நேர்மையால் தான் இந்த தயாரிப்பாளர் எனக்கு கிடைத்தார்.  தயாரிப்பாளரிடம் படத்தைத் தயாரிக்கும் முன் அவரிடம் நான் இத்தனை ஆண்டு காலம் போராடிக் கொண்டிருப்பதற்கு ஒரே காரணம் என்னிடம் இருக்கும் நேர்மைதான். இதனை புரிந்து கொண்டு படத்தை தொடங்குங்கள் என அறிவுறுத்தினேன். அவர் இன்றுவரை என்மீது  முழு நம்பிக்கையுடன் இருக்கிறார். இது எதுக்கு மகிழ்ச்சியை தருகிறது’என்றார்.
இயக்குநர் இமயம் பாரதிராஜா பேசுகையில்,”  பொதுவாக இதுபோன்ற நிகழ்வுகளுக்கு கலந்து கொள்ள விரும்புவதில்லை ஆனால் தற்போது இது போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறேன் ஏனெனில் கலைஞர்களை இங்கு தான் சந்திக்க முடிகிறது. இது போன்ற நிகழ்வுகளில் கலைஞர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு மீண்டும் ஒரு ஜென்மம் இருந்தால் அதிலும் சினிமாக்காரன் ஆகவே பிறக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. படத்தின் முன்னோட்டத்தை பார்த்தேன் அதில் கருணாஸ் கைக்குழந்தையைத் தூக்கிக்கொண்டு  வீதிகளில் நடக்கும்போது என் கண்களில் என்னையும் அறியாமல் கண்ணீர் எட்டிப்பார்த்தது. கதை என்ன என்று முழுதாக தெரியாதிருந்தாலும் முன்னோட்டத்தை பார்க்கும்போது கண்ணீர் வருகிறது.
சினிமா கம்பெனிகளில் நமக்கு கிடைக்கும் பேரும் புகழும் வேறு எங்கும் கிடைப்பதில்லை. சினிமா தொழில் தான் நல்ல தொழில்.. ஒரு தயாரிப்பின் மதிப்பு 100 ரூபாய். 70 ரூபாய் செலவில் அந்த தயாரிப்பு உருவாகிறது என்ற கவலை அவருக்கு அருண் பாண்டியனுக்கு ஏனென்றால் அவன் தயாரிப்பாளராகவும் இருந்தவர். நடிகர்கள் சம்பளம் வாங்குவது தவறென்று சொல்லவில்லை ஆனால் ஒரு பட தயாரிப்பின் உங்களுடைய பங்கு எவ்வளவு என்பதை உறுதிப்படுத்த வேண்டும். தமிழ் படங்களை விட தெலுங்கு படங்களில் அண்மைக்காலமாக பிரமாண்டமாக செலவழித்து ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறார்கள். அந்த வகையில் நீங்கள் என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளுங்கள் தற்போதைய சூழலில் தமிழ் மலையாள சினிமாக்களை விட தெலுங்கு சினிமா ஒருபடி உயர்வாகவே இருக்கிறது. ” என்றார்.
Previous Post

ஆம்ரோ சினிமாஸ் தயாரிக்கும் முதல் பிரமாண்ட படம் ‘RAT’

Next Post

நாக அம்மனின் பக்தையாக பிந்து மாதவி நடிக்கும் புதிய படம்..!

Next Post

நாக அம்மனின் பக்தையாக பிந்து மாதவி நடிக்கும் புதிய படம்..!

Popular News

  • தென்னகத்தில் கால்பதிக்கும் Applause Entertainment நிறுவனம் சென்னையில் புதிய அலுவலக கிளையினை திறந்துள்ளது.

    0 shares
    Share 0 Tweet 0
  • பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • தணிக்கை குழுவினரின் பாராட்டை பெற்ற ‘மெய்ப்பட செய்’! – ஜூலை 15 ஆம் தேதி வெளியாகிறது

    0 shares
    Share 0 Tweet 0
  • தனுஷ் நடிப்பில் உருவாகும் “கேப்டன் மில்லர்” அறிவிப்பு வீடியோ, எட்டு திக்கும் அதிரடியான வரவேற்பை பெற்றுள்ளது !

    0 shares
    Share 0 Tweet 0
  • “ராக்கெட்ரி” விமர்சனம்.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

தணிக்கை குழுவினரின் பாராட்டை பெற்ற ‘மெய்ப்பட செய்’! – ஜூலை 15 ஆம் தேதி வெளியாகிறது

July 5, 2022

உலக அங்கீகாரத்தின் ஆரம்பத்தில் “இரவின் நிழல்” ..!

July 5, 2022

தென்னகத்தில் கால்பதிக்கும் Applause Entertainment நிறுவனம் சென்னையில் புதிய அலுவலக கிளையினை திறந்துள்ளது.

July 5, 2022

தனுஷ் நடிப்பில் உருவாகும் “கேப்டன் மில்லர்” அறிவிப்பு வீடியோ, எட்டு திக்கும் அதிரடியான வரவேற்பை பெற்றுள்ளது !

July 5, 2022

SonyLIV’ தளத்தின், எதிர்பார்ப்பை எகிற வைக்கும் தமிழ் ஒரிஜினல் படைப்பு, “தமிழ் ராக்கர்ஸ்” டீசர் வெளியானது !

July 4, 2022

படப்பிடிப்பில் நடிகர் விஷாலுக்கு விபத்து!

July 4, 2022
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2022 Tamil2daynews.com.