சுயாதீன இசை கலைஞர்களின் முயற்சியில் மியூசிக் வீடியோ ஆல்பங்கள் வெளியாகி இசை ரசிகர்களின் பாராட்டை பெறுவதுடன் மில்லியன் கணக்கிலான டிஜிட்டல் பார்வைகளை கடந்து சாதனையும் படைத்து வருகிறது. அந்த வகையில் இசை கலைஞர் ஸ்மித் ஆஷர் இசையில் உருவான ‘அன்னக்கிளியே’ எனும் மியூசிக் வீடியோ ஆல்பம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை அனிருத்தின் இசை நிறுவனமான அல்புகெர்க்கி ரெக்கார்ட்ஸ் ( Albuquerque Records) சார்பில் வெளியிட்டு, வாழ்த்தும் தெரிவித்திருக்கிறார்.
இசைக் கலைஞர் ஸ்மித் ஆஷர் இசையில் உருவான ‘அன்னக்கிளியே நீ வரும் வழியே தள்ளாடிப் போகுதே மனமே…’ எனத் தொடங்கும் இண்டி மியூசிக்கல் வீடியோ ஆல்பம் வெளியாகி இருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் தீக்ஷிதா எழுதி பாடியிருக்கிறார். இவருடன் இசையமைப்பாளர் ஸ்மித் ஆஷர் இணைந்து பாடியிருக்கிறார். இந்த பாடலுக்காக நடிகர் பவன் அலெக்ஸ் மற்றும் நடிகை பிரகதி ஸ்ரீவத்சவா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
இந்த பாடலுக்கான வீடியோவில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் அனைத்தும் பாடலுக்கான சூழலை நேர்த்தியாக விவரித்திருப்பதுடன் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கிறது. மேலும் இந்தப் பாடலில் வி எஃப் எக்ஸ் காட்சிகள் இடம்பெற்று பாடலின் தரத்தை சர்வதேச அளவிற்கு உயர்த்தி இருக்கிறது.
இந்த பாடலுக்கான வீடியோவை விக்கி பப் இயக்க, ஜே சரோலா ஒளிப்பதிவு செய்ய, தீஜோ பரத்வாஜ் தயாரித்திருக்கிறார். இந்த பாடலை அனிருத் அவருடைய பிரத்யேக யூடியூப் பக்கத்தில்
வெளியிட்டிருக்கிறார்.
அனிருத் – அல்புகெர்க்கி ரெக்கார்ட்ஸ் – ஸ்மித் ஆஷர் கூட்டணியில் உருவான ‘ அன்னக்கிளியே’ இண்டி மியூசிக்கல் வீடியோ ஆல்பம் இசை ரசிகர்களை வசப்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாக இந்தப் பாடல் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் லட்சக்கணக்கான டிஜிட்டல் பார்வைகளை பெற்று இணையவாசிகளின் வரவேற்பை பெற்று இருக்கிறது.
அடர்ந்த வனம்- கழுகின் கூரிய பார்வை- தனியாக தவிக்கும் இளைஞன்- பிரம்மாண்டமான நீர்வீழ்ச்சிக்கு அருகே சிறிய குன்றில் ஒய்யாரமாக வீற்றிருக்கும் வன தேவதை- பார்த்தவுடன் கண்களுக்குள் பரிமாறிக் கொள்ளும் காதல்- வனவாசிகளின் வில்லாளான எதிர்ப்பு- தப்பித்து ஓடுதல்- உயர்ந்த பாறை மீதிலிருந்து காதலுடன் காதலர்கள் குதிப்பது- ஆழமான நீர் நிலைக்குள் ஒன்றிணைவது- சங்க கால தமிழர் மரபில் போற்றப்பட்ட யாழி எனும் விலங்கின் மீது அமர்ந்து தப்பிப்பது.. வானவெளியில் மகிழ்ச்சியுடன் பறப்பது- என அமைக்கப்பட்டிருக்கும் இந்த பாடலுக்கான காணொளி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறது.
மெல்லிசை- காதல் உணர்வுள்ள பாடல் வரிகள்- காந்த குரல்- என பல சிறப்பம்சங்கள் இந்த மியூசிக் வீடியோவில் இடம் பிடித்திருப்பதாலும்.. ‘ராக் ஸ்டார்’ அனிருத்தின் அல்புகெர்க்கி ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் பிரத்யேக இணையதளத்தில் வெளியாகி இருப்பதாலும்.. இதற்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனிடையே தொன்மையான ஆலயங்களில் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ள யாழி எனும் பறவை மற்றும் விலங்கு இனத்தைச் சார்ந்த மிருகத்தை இயக்குநர் விக்கி பப் தலைமையிலான குழுவினர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தாமல், முழுக்க கிராபிக்ஸ் காட்சிகள் மூலம் ஆறு மாத காலம் கடுமையாக உழைத்து இதனை இன்றைய ஜென் ஸீ கிட்ஸ்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் யாழியை உருவாக்கி, அதனை வானவெளியில் பறக்கச் செய்திருப்பது புதுமையான முயற்சி என திரையுலக கலைஞர்கள் பாராட்டி வருகிறார்கள் என்பதும் இதுவே இந்த மியூசிக் வீடியோவின் பிரத்யேக சிறப்பம்சம் என்பதும் குறிப்பிடத்தக்கது.









