ஜுவி-2 விமர்சனம்
வாழ்க்கையில ஒரு மனிதன் எவ்வளவு அடி வாங்க முடியுமோ அவ்வளவு அடி வாங்கியும்,எவ்ளோ கஷ்ட நஷ்டங்கள் பட முடியுமோ அவ்வளவும் பட்ட நிலையில் ஒருவர் ஒரு தொழிலில் முன்னேறுகிறார் என்ற அவர் அந்த தொழிலை அளவுக்கு அதிகமாக நேசித்து இருக்கிறார் என்று சொல்லலாம்.
அந்த உழைப்பால் உயர்ந்து கொண்டிருக்கும் மனிதர் வேறு யாருமல்ல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தான்.
சமீபத்தில் கூட மாநாடு என்கிற திரைப்படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் கொஞ்சம் சிரமத்தில் இருந்து மீண்டும் அந்த தடை கற்களை படிக்கட்டுகளாக மாற்றி வெற்றி கண்டவர் தான் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் ஜீவி2 பட விமர்சனத்தை பார்க்கலாம்.
வெங்கட் பிரபு- சிம்பு கூட்டணியில் ‘மாநாடு’ என்கிற மிகப் பெரிய வெற்றிப் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் ‘வி ஹவுஸ் புரொடக்சன்’ நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டில் நடிகர் வெற்றி, கருணாகரன் ஆகியோர் நடிப்பில் வித்தியாசமான கதை அம்சத்துடன் வெளியாகி ரசிகர்கள், விமர்சகர்கள் மட்டுமல்லாது திரையுலக பிரபலங்கள் அனைவரிடமும் பாராட்டுக்களை பெற்ற படம் ‘ஜீவி.’
இயக்குநர் V.J.கோபிநாத் இயக்கிய இந்தப் படத்தின் இரண்டாம் பாகமாகத்தான் தற்போது இந்த ‘ஜீவி-2’ உருவாகியுள்ளது.

தயாரிப்பு – வி ஹவுஸ் புரொடக்சன் – சுரேஷ் காமாட்சி, இணை தயாரிப்பு – வெற்றிகுமரன், நாகநாதன் சேதுபதி, எழுத்து இயக்கம் – V.J.கோபிநாத், இசை – கே.எஸ்.சுந்தரமூர்த்தி, ஒளிப்பதிவு – பிரவீண் குமார், படத் தொகுப்பு – பிரவீண் கே.எல்., சண்டை பயிற்சி இயக்கம் – சுதேஷ், பத்திரிகை தொடர்பு – A.ஜான்.
“ஜீவி’ படத்தின் கதை தொடர்பியல் விதியை மையப்படுத்தித்தான் உருவாக்கப்பட்டிருந்தது. எங்கோ ஏதோ ஒரு இடத்தில் ஒருத்தர் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் திரும்பவும், இன்னொரு இடத்தில் வேறு ஒருவருக்கு நடப்பதற்கு நிச்சயம் ஒரு தொடர்பு இருக்கும். அதைத் தெரிந்து கொண்ட நாயகன் அந்த நிகழ்வுகளைத் தடுத்து நிறுத்த முயற்சி செய்வார். அவரால் அது முடிந்ததா என்பதுதான் முதல் பாகத்தின் கதை.
இந்த தொடர்பியல் விதி அத்துடன் முடிந்துவிட்டதா… இல்லை மீண்டும் தொடருமா என ஹீரோவின் நண்பன் கேட்கும் கேள்வியில்தான் இந்த இரண்டாம் பாகத்தின் கதை தொடங்குகிறது.
மீண்டும் இவர்கள் வாழ்வில் தொடர்பியல் விதி விளையாடியதா..? அதன் மூலம் என்னென்ன பிரச்சனைகள் உருவாகின..? அதையெல்லாம் நாயகன் தனது புத்திசாலித்தனத்தால் கண்டுபிடித்து அதை சரி செய்தாரா..? என்பதுதான் இந்த ‘ஜீவி-2’ படத்தின் கதை.
முதல் பாகத்தில் குடியிருக்கும் வீட்டிலேயே நகைகளைத் திருடி அந்த நகைகளும் கடைசியில் கிடைக்காமல் போக.. நகைகள் காணாமல் போனதால் திருமணம் நின்று போன அதே வீட்டுப் பொண்ணான நாயகியை நாயகன் வெற்றி, பாவமன்னிப்பு கேட்பதுபோல திருமணம் செய்து கொள்கிறார்.
இந்த 2-ம் பாகம் நாயகனின் இல்வாழ்க்கையில் 10 மாதங்கள் முடிந்த பின்பு தொடர்கிறது. இப்போது வெற்றி, ஷேர் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கிறார். திடீரென்று கருணாகரனை திரும்பவும் சந்திக்கிறார். கருணாவை தன் வீட்டுக்கு அழைத்து வந்து காட்டுகிறார் வெற்றி.
நாயகி அஸ்வினியின் கண் ஆபரேஷனுக்காக 8 லட்சம் ரூபாய் பணம் தேவைப்படுகிறது. அதனால் இன்னும் அதிகமாக சம்பாதிக்க நினைக்கும் வெற்றி கையில் இருக்கும் 1 லட்சம் ரூபாயை வைத்து செகண்ட் ஹேண்ட்டில் கார் வாங்கி ஓட்டுகிறார். அதே நேரம் கருணாகரனுக்கு ஒரு டீக்கடையை வைத்துத் தருகிறார் வெற்றி.
ஆனால் விதி விளையாடத் துவங்க.. அஸ்வினியின் பூர்வீக வீடு கடனில் மூழ்கப் போவதாக தாய் மாமனான மைம் கோபி வந்து கதறுகிறார். இந்த வீட்டுப் பத்திரத்தை வைத்து அஸ்வினியின் கண் ஆபரேஷனுக்கான பணத்தைக் கடனாக வாங்க நினைத்த வெற்றிக்கு இது பேரிடியாகிறது.
கார் திடீரென்று மக்கர் செய்ய அதை சரி செய்ய முப்பத்தைந்தாயிரம் ரூபாய் தேவையாகிறது. அதே நேரம் வெற்றியின் அக்கா மகளுக்கு உடல் நலமில்லாமல் போகிறது. இந்தப் பிரச்சினைகளால் வெற்றி நிம்மதி இழந்திருக்கும் சூழலில், இவர்களுடன் கூட்டணி சேர்கிறார் முபாஷிர்.
பெரிய பணக்கார வீ்ட்டுப் பையனான முபாஷிரின் வீட்டுக்கு செல்லும் வெற்றியும், கருணாகரனும் வீட்டைப் பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள். இப்போது தனக்கிருக்கும் பணப் பிரச்சினைகளை தீர்க்க வேண்டுமெனில் முதல் பாகத்தில் செய்தது போலவே கொள்ளையடித்தால்தான் முடியும் என்று நம்புகிறார் வெற்றி.
கருணாகரனும் இதற்கு ஒத்துழைக்க.. முபாஷிரின் வீட்டிலேயே பணம், நகைகளைக் கொள்ளையடிக்க திட்டம் தீட்டுகிறார் வெற்றி. இந்தக் கொள்ளை முயற்சி நடந்ததா இல்லையா.. இதன் பின் என்னவானது.. முதல் பாகம் போலவே இதிலும் தப்பித்தாரா இ்ல்லையா என்பதுதான் இந்த இரண்டாம் பாகத்தின் திரைக்கதை.
அளவுக்கேற்ற சட்டை துணி என்பதை போல மீட்டருக்கு மேலேயும் இல்லாமல் கீழேயும் இல்லாமல் தனக்கு வருவதை நடித்திருக்கிறார் வெற்றி. அமைதியான கதாபாத்திரங்கள்தான் இவரது முகத்திற்கும், நடிப்பும் ஓகேயாகும் என்பது இந்தப் படத்திலும் உறுதியாகியுள்ளது.
கருணாகரன்தான் பல காட்சிகளில் பலரையும் காப்பாற்றுகிறார். நடிப்பில் அனைத்துவிதங்களையும் காட்டி தனது தனித்த அடையாளத்தைக் காண்பித்திருக்கிறார். முபாஷிர் அறிமுக நடிகராக தனது நடிப்பை வலுவான அஸ்திவாரத்தில் போட்டிருக்கிறார். அடுத்தடு்த்த படங்களில் பார்ப்போம்.
இந்தப் படத்தில் கதைதான் நாயகனாக இருப்பதால் திரைக்கதையும் வேகம், வேகமாக நகர்வதால் நடிப்புக்கென்று ஸ்பெஷல் ஸ்கோப் யாருக்குமே தரப்படவில்லை என்பது சோகம்தான்.
படத்தின் மிகப் பெரிய தவறு இன்ஸ்பெக்டராக நடித்தவரின் நடிப்புதான். சிறப்பான ஷாட்டுகளையும், காட்சிகளையும் அவருக்கு வைத்திருந்தும் அவரது கவன ஈர்ப்பில்லாத நடிப்பினால் நம்மை அவர் கவரவில்லை. மேலும் போலீஸ் விசாரணைகூட சுணக்கமாக இருந்தது வருந்தத்தக்கது..!
மைம் கோபி வீட்டுக்கு வெற்றி வந்திருக்கும் நிலையில், இன்ஸ்பெக்டரும் திடீரென்று துப்பாக்கியுடன் பிரசன்னமாவதும், துப்பாக்கி குண்டு எங்கே பாய்ந்தது என்பதுகூட தெரியாத அளவுக்கு காட்சிகளை வைத்து மிக சாதாரணமாக இந்தக் காட்சிகளைப் படமாக்கியிருப்பது வருத்தம் தரும் செயல்.
நாயகி அஸ்வினி கண் பார்வையில்லாதவராக கஷ்டமே படாமல் நடித்திருக்கிறார். ரமாவுக்காச்சும் அழுவதுபோல ஒரு காட்சி. ரோகிணிக்கும் அதுவும் இல்லை. மைம் கோபி முதலில் இருந்து பாசமாகப் பேசிவிட்டு, கடைசியாக தனது வில்லத்தனத்தைக் காண்பித்திருக்கிறார்.
பிரவீன்குமாரின் ஒளிப்பதிவு படம் நெடுகிலும் இதுவொரு மாயவுலக படம் என்பதைக் காட்டுவதைப் போலவே இருக்கிறது. கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் இசையில் ‘நீ நீ போதுமே’ பாடலும், பாடல் காட்சிகளும் ரசிக்க வைத்திருக்கின்றன.
படத் தொகுப்பாளர் கே.எல்.பிரவீனின் தொகுப்பு சிறப்பு என்றாலும் சில இடங்களில் வேகமாகக் காட்சிகள் பறப்பதால் பேசப்பட்ட வசனங்களைப் புரிந்து கொள்வதற்குள்ளாகவே, அடு்த்த காட்சியின் வசனங்கள் காதில் நுழைந்துவிடுகின்றன.
மைம் கோபியின் ஆரம்பக் காலக் கதையை சில விநாடிகளில் சொன்னதால் அது ஜம்ப் ஆகிவிட்டது. பணம் இருந்த பையை திருச்சிக்கு வந்து வெற்றி கைப்பற்றும்போது அந்தப் பையன் சொல்லும் கதையில் இருக்கும் டிவிஸ்ட்டு ‘அட’ போட வைத்தாலும், மைம் கோபியின் மகள் யார் என்பது தெரிய வரும்போது இன்னும் மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
ஒய்.ஜி.மகேந்திரனின் பேச்சு சுற்றி வளைக்கும் தன்மையுடன் இருப்பதும் அவர் பேசும் வசனங்கள் வேதாந்தமாக இருப்பதும் நமக்குக் கொஞ்சம் குழப்பத்தைக் கொடுத்திருக்கிறது.
கிளைமாக்ஸில் வெற்றி எடுக்கும் அதிரடி முடிவை வசனம் மூலமாகச் சொல்லியிருக்க வேண்டும். அதை விஷூவலாகவே காட்டிவிட்டுச் சென்றதால், எத்தனை பேருக்கு அது புரிந்திருக்கும் என்று தெரியவில்லை.
இப்படி தொடர்பியல்.. விதி, கர்மா, முன்வினைப் பயன் என்று பல விஷயங்களையும் தொடர் கதையாக நம் காதில் ஓதி, ஓதி.. “என்னதான்யா சொல்ல வர்றீங்க..?” என்று ஒரு கட்டத்தில் நமக்கு அலுப்பைக் கூட்டிவிட்டார் இயக்குநர். மேலும் அநியாயமான குடி, சிகரெட் புழக்கத்தை படத்தில் குறைத்திருக்கலாம்.
மூன்றாவது பாகத்திற்கான லீடை இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் கொடுத்திருப்பதுபோல தெரிகிறது.
எப்படி தெரிந்தாலும் வெளிப்படையாக தொடர்பியல் இல்லாமலேயே கோடிக்கணக்கான இந்தியக் குடும்பங்களில் இது போன்ற பிரச்சினைகள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர் கதையாக வரத்தான் செய்கிறது. நமது குடும்பத்தினர் இந்தப் பிரச்சினைகளை சமாளித்துக் கொண்டுதான் வாழ்கிறார்கள். அப்படியே வாழவும் பழகிவிட்டார்கள். இது அவர்களுக்குப் பெரிய விஷயமே இல்லை.
ஜுவீ படத்துக்கு கிடைத்த வரவேற்பு மூன்றாம் பாகம் வருமா என ரசிகர்கள் கேட்கும் அளவுக்கு உள்ளது.
அதையும் படத்தின் இறுதியில் இயக்குனர் தெள்ளத் தெளிவாக காட்டியது கூடுதல் சந்தோஷத்தை அளிக்கிறது.