”ரஜினி, விஜய் படங்களை இயக்க விரும்புகிறேன்” ; 2018 வெற்றிப்பட இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப்
கடந்த சில வாரங்களுக்கு முன் மலையாளத்தில் 2018 என்கிற படம் வெளியானது. கடந்த 2018ல் கேரளாவையே புரட்டி போட்ட பெருமழை வெள்ளத்தையும் அதை கேரள மக்கள் எப்படி எதிர்கொண்டு அதிலிருந்து மீண்டு வந்தனர் என்பதையும் மையப்படுத்தி இந்தப்படம் உருவாகி இருந்தது..
இந்தப்படத்தை இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப் என்பவர் இயக்கியுள்ளார். நிவின்பாலி, நஸ்ரியா இணைந்து நடித்த ஓம் சாந்தி ஒசானா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர், ஒரு முத்தச்சி கதா, சாரா’ஸ் என மூன்று படங்களை இயக்கியுள்ளார். அந்த மூன்று படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு ஒரு நிஜ நிகழ்வை மையப்படுத்தி இந்த 2018 படத்தை எடுத்துள்ளார்.
இந்தப்படம் வெளியான நாளில் இருந்து தற்போது வரை குறையாத வரவேற்புடன் ஓடிக்கொண்டு இருக்கிறது. இதற்கு முன்பு அதிக வசூல் சாதனை செய்த மோகன்லாலின் புலிமுருகன், லூசிபர் போன்ற படங்களின் சாதனைகளையும் முறியடித்து 200 கோடி வசூலை எட்டியுள்ளது.
மலையாளத்தில் மட்டுமல்ல, தமிழ் உள்ளிட்ட மற்ற தென்னிந்திய மொழிகளிலும் வெளியான இந்தப்படம் கேரளாவை போலவே இங்கேயும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தநிலையில் இந்தப்படம் உருவான விதம் குறித்தும், இந்த வெற்றி குறித்தும் நம்மிடம் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார் படத்தின் இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப்.
சினிமா மீதான ஆர்வம் உங்களுக்கு எப்போது வந்தது ?
பத்தாம் வகுப்பு படிக்கும்போதே சினிமா மீது ஒரு ஈர்ப்பு உருவாகி விட்டது. பின்னர் சினிமாவில் நுழைந்ததும் இயக்குனர் வினீத் சீனிவாசனிடம் உதவி இயக்குனராக சேர்ந்து பணியாற்றினேன்.. அவர்களுடைய நட்பு வட்டாரத்தில் இருந்ததால் இயக்குனரான முதல் படத்திலேயே நிவின்பாலி, வினீத் சீனிவாசன் ஆகியோரை நடிக்க வைத்து இயக்குனராக மாறினேன்.
உங்களது முந்தைய மூன்று படங்களின் ஜானரில் இருந்து முற்றிலும் மாறுபட்டு ஒரு படத்தை உருவாக்கவேண்டும் என நினைத்தது ஏன் ?
வேறு ஜானரில் பண்ணுகிறோம் என்றெல்லாம் நினைக்கவில்லை. ஸ்கிரிப்ட் நன்றாக இருக்க வேண்டும்.. மக்களுக்கு பிடிக்க வேண்டும்.. அவர்கள் அந்த கதையுடன் எளிதாக தங்களை பொருத்திப் பார்த்துக் கொள்ள வேண்டும்.. இது இருந்தாலே போதும்.. இந்த 2018 கதையில் இந்த மூன்றுமே இருந்தது..
குறிப்பாக இந்த 2018 படத்தை எடுக்க உங்களை தூண்டியது எது ?
2018ல் பெரும் மழை பெய்து வெள்ளம் வந்தபோது என்னுடைய வண்டியும் கூட அதில் போய்விட்டது. அதன்பிறகு மக்கள் ஒரு வழியாக இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பித்த சமயத்தில் தான், வாழ்க்கை இத்துடன் முடிந்துவிடவில்லை, இன்னும் இருக்கிறது என்று மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் விதமாக இது பற்றி ஒரு தன்னம்பிக்கை வீடியோ எடுக்கலாம் என முடிவெடுத்தோம்.
வெள்ளம் வந்த சமயத்தில் அது எதையும் நான் நேரில் பார்க்கவில்லை.. இதற்காக சேனல்களில், யூடியூப்பில் வந்த வீடியோக்களை, செய்திகளை சேகரிக்க ஆரம்பித்தேன். அவற்றை எல்லாம் பார்க்கும்போது தான் இந்த பேரிடர் தருணத்திலும் பொதுமக்களும் அதிகாரிகளும் இந்த மீட்பு பணியில் தங்கள் உயிரை பொருட்படுத்தாமல் ஈடுபட்ட ஒரு உண்மைக் கதை இருப்பது தெரிய வந்தது. அந்த கதையை இந்த உலகத்திற்கே தெரியவைக்க வேண்டும் என்று தான் இதனை படமாகவே எடுக்கலாம் என்கிற முடிவுக்கு வந்தேன்.
கதை, அதை சொல்லும் விதம் என மலையாளத் திரையுலகம் டாப் லெவலில் இருந்தாலும் கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகளிலும் இந்தப்படத்தில் அசத்தியிருந்தீர்கள்.. எப்படி சாத்தியமானது ?
இந்த படத்தின் கிராபிக்ஸ் மற்றும் விஎஃப்எக்ஸ் காட்சிகளுக்காக முன்கூட்டியே மிகத்தெளிவாக திட்டமிட்டு இதற்காக மினியச்சர் செய்து, ஸ்டோரி போர்ட் உருவாக்கி இருந்தோம். அது இந்த படத்தில் மிக சரியாக ஒர்க் அவுட் ஆகிவிட்டது. அதனால் தான் இந்த படத்தில் எது நிஜமான காட்சி எது கிராபிக்ஸ் என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதில் தொலைக்காட்சி சம்பந்தப்பட்ட காட்சிகளைத் தவிர மற்றவை எல்லாம் பெரும்பாலும் நிஜமாகவே படமாக்கப்பட்டன. லூசிபர், மாமாங்கம் போன்ற படங்களுக்கு தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றிய மோகன்தாஸ் இந்த பணிகளுக்கு தலைமை ஏற்று அத்தனை வேலைகளையும் சிறப்பாக கையாண்டார்
இந்த மாதிரி படங்களுக்கு ப்ரீ புரொடக்சன் ஒர்க் ரொம்பவே முக்கியம் இந்தப்படத்தில் நிறைய நட்சத்திரங்கள் இருந்தார்கள். அவர்களை சமரசம் பண்ண வேண்டிய சிரமம் ஏதும் இருந்ததா ?
இந்த படத்தில் நடிக்க அழைத்தபோது யாருமே தயங்கவில்லை. காரணம் ஒரு பக்கம் ஸ்கிரிப்ட் பக்காவாக இருந்தது என்றால், இன்னொரு பக்கம் இது கேரளாவின் ஒற்றுமையை வெளி உலகத்திற்கு எடுத்துக்காட்டும் ஒரு படம் என்பதால் கூடுதல் அர்ப்பணிப்புடன் நடித்தார்கள். இத்தனைக்கும் அவர்களில் பலரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் வெவ்வேறு படங்களில் நடித்து வந்தார்கள். இருந்தாலும் இந்த படத்திற்காக தாங்களாகவே நேரத்தை ஒதுக்கி நடித்தார்கள்.
இந்த படத்தில் நடித்தவர்களில் நடிகர் டொவினோ தாமஸ் தான் அதிகப்படியாக கிட்டத்தட்ட 45 நாட்களுக்கு மேல் ஒதுக்கி இதில் நடிக்க வேண்டி இருந்தது. பெரும்பாலான நேரங்களில் அவர் நீருக்குள்ளேயே இருக்கும்படி காட்சிகள் அதிகம் இருந்தன. இந்த படத்திற்காக அனைவருமே கஷ்டப்பட்டு இருந்தார்கள் என்றாலும் அதிக நாட்கள் ஒதுக்கிய வகையில் இதில் டொவினோ தாமஸ் இன்னும் கொஞ்சம் அதிகம் சிரமங்களை பட்டு நடித்தார்.
பட்ஜெட்டில் மட்டுமல்லாமல், இந்த படத்தை தயாரிப்பதில் உள்ள நடைமுறை சிரமங்களையும் தயாரிப்பாளர் புரிந்துகொண்டனரா..? அவர்களை எப்படி கன்வின்ஸ் செய்தீர்கள் ?
மலையாள சினிமாவை பொறுத்தவரை ஒரு படத்திற்கு இவ்வளவுதான் என ஒரு பட்ஜெட் இருக்கிறது. அதை தாண்டி படம் பண்ணுவதற்கு தயாரிப்பாளர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆனால் இந்த படம் பண்ண வேண்டும் என்பது என்னுடைய ஆசையாக இருந்ததால், இதற்காகவே பிளான் ஏ, பிளான் பி, பிளான்சி என மாற்றுத்திட்டங்களை எல்லாம் வைத்து தேவைப்பட்ட இடங்களில் அவற்றை செயல்படுத்தினேன். இதனால் நான் தீர்மானித்திருந்த பட்ஜெட்டிற்குள் இந்த படத்தை எடுக்க முடிந்தது.
இந்த படம் இந்த அளவுக்கு வசூலில் சாதனை படைக்கும் என நினைத்தீர்களா..?
படம் எடுத்த போதும் சரி, வெளியான போதும் சரி.. கேரளாவில் உள்ள மூன்றரை கோடி மக்களும் பார்க்க வேண்டும் என்கிற ஆசை எனக்கு இருந்தது. மற்றபடி இது எவ்வளவு வசூலிக்கும் என்றோ இவ்வளவு பெரிய வெற்றியை பெறும் என்றோ அந்த சமயத்தில் நான் நினைக்கவே இல்லை. 200 கோடி வசூல் என்பதை விட மக்கள் அனைவரிடமும் இந்தப்படம் சென்று சேர்ந்து இருக்கிறது என்பதில்தான் எனக்கு மகிழ்ச்சி. அது மட்டுமல்ல இதுபோன்று இன்னும் பல படங்கள் வரவேண்டும்.. மலையாள திரை உலகின் எல்லை இன்னும் விரிவடைய வேண்டும் என்பதுதான் என் ஆசை.
இந்த படத்துக்கு உங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு யார்கிட்டே இருந்து ?
மம்முட்டி இந்த படத்தை பார்த்துவிட்டு நிஜமாகவே ஒரு ஹாலிவுட் படம் பார்ப்பது போல இருக்கிறது. எப்படி இந்த படத்தை எடுத்தாய் என ஆச்சரியப்பட்டார். ஒவ்வொரு டெக்னிக்கல் விஷயங்களையும் கேட்டு தெரிந்து கொண்டார். நிறைய பாராட்டுக்கள் வந்தாலும் மலையாள சினிமாவின் மூத்த இயக்குனர் பாசில் என்னை அழைத்து பாராட்டியதுடன் நீங்கள் தான் இந்த மலையாள சினிமாவின் மிகப்பெரிய இயக்குனர் என்று கூறினார். நான் அதை ஒப்புக்கொள்ள மறுத்தபோது, இந்த மாதிரி நிறைய நட்சத்திரங்களை வைத்து பாடல்கள், சண்டை என கமர்சியல் அம்சங்கள் இல்லாமல் ஒரு படத்தை எடுத்து இவ்வளவு பெரிய அளவிற்கு வெற்றி பெற செய்துள்ளீர்கள் என்பதால் தான் நான் அப்படி கூறினேன் என்று சொன்னார்.
அல்போன்ஸ் புத்ரன், வினீத் சீனிவாசன் போன்றவர்கள் தமிழ் சினிமாவுடன் தொடர்பில் இருக்கிறார்கள். நீங்கள் தமிழில் படம் பண்ண விரும்புகிறீர்களா ?
2018 படத்தை பார்த்துவிட்டு தமிழகத்திலிருந்து ரசிகர்கள், பத்திரிகையாளர்கள் அனைவரும் தொலைபேசியில் அழைத்து பாராட்டினார்கள். பிரபலங்கள் என யாரிடமும் இருந்து இதுவரை அழைப்பு வரவில்லை. தமிழ் சினிமாவில் யாராவது ஒரு நடிகர் இந்த படத்தை பார்த்துவிட்டு வாடா இப்படி ஒரு படம் எடுப்போம் என்று அழைப்பு விடுப்பார்களா என்று காத்திருக்கிறேன்.. இங்கே தமிழில் படம் பண்ண வேண்டும்.. அதிலும் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா என முன்னணி ஹீரோக்களின் படங்களை இயக்க வேண்டும் என எனக்கும் ஆசை இருக்கிறது. நிச்சயம் ஒரு நாள் இதில் ஒன்றாவது நிறைவேறும் என நம்புகிறேன்.
இடையில் டைரக்சனில் இருந்து ஒதுங்கியது போல நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்தீர்களே.. ?
எனக்கு நடிப்பு, டைரக்ஷன் இரண்டுமே பிடிக்கும் நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் வந்ததால் அப்படியே பயணப்பட ஆரம்பித்து விட்டேன். ஆனால் நடிப்பு என்பது எனக்கு ஒரு வேலை மட்டும் தான்.. டைரக்ஷன் என்பது என்னுடைய வேட்கை.
உங்களது அடுத்த படம் ?
அடுத்து எனது முதல் பட ஹீரோ நிவின்பாலியுடன் இணைந்து படம் பண்ணும் திட்டம் இருக்கிறது. விரைவில் அதற்கான அறிவிப்பு வரும் .