விடுதலை பாகம்1- விமர்சனம்
1987 காலகட்டம்! ஒரு மலைக் கிராமத்தில் சுரங்கம் அமைக்க அரசு முடிவெடுக்கிறது. அதனால் மலைவளமும் அங்குள்ள மக்களும் பாதிக்கப்படுவார்கள் என அரசாங்கத்திற்கு எதிராக திரும்புகிறது மக்கள் படை ஒன்று. அந்த மக்கள் படையின் தலைவர் விஜய்சேதுபதியைப் பிடிக்க காவல்துறை பெரும் சிரத்தை எடுக்கிறது. அந்தக் காவல்துறை டீமில் சாதாரண டிரைவர் போலீஸாக இருக்கிறார் சூரி. விஜய்சேதுபதியின் மக்கள் படைக்கு தொடர்பு கொண்டுள்ள ஒரு பெண்ணோடு காதல் வயப்படுகிறார் சூரி. ஒரு கட்டத்தில் விஜய்சேதுபதியை பிடித்து வர வேண்டிய அகநெருக்கடி சூரிக்கு ஏற்பட சூரி விஜய்சேதுபதியை பிடித்தாரா.. அடுத்தடுத்து என்ன நிகழ்ந்தது என்பது திரைக்கதையாக விரிகிறது
கதையின் நாயகனாக சூரி அதகளப்படுத்தி இருக்கிறார். வெள்ளந்தித் தனமாக இருந்தாலும் தவறு செய்யவில்லை அதனால் உயரதிகாதியிடம் மன்னிப்பு கேட்கமாட்டேன் என்ற உறுதியில் கலக்கியுள்ளார். அவருக்கும் பவானிக்குமான காதல் காட்சிகளில் சூரியின் பாடிலாங்வேஜ் அல்டிமேட் ரகம். வாத்தியாராக வரும் விஜய்சேதுபதி சற்று நேரமே வந்தாலும் அதை கெத்து நேரமாக மாற்றுகிறார். ஒரு போராளியாக வரும் அவரின் கேரக்டர் வடிவம் படு ஸ்ட்ராங்காக எழுதப்பட்டுள்ளது. OC-ஆக வரும் சேத்தன், DSP ஆக வரும் கெளதம் வாசுதேவ் மெனென் உள்ளிட்ட அனைத்து கேரக்டர்களும் அசத்தல் ரகம். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது நடிகை பவானியின் நடிப்பை. Every ப்ரைம்களிலும் அவர் கண்கள் நம்மை கட்டிப்போடுகிறது. சிறுசிறு வசனங்களால் கூட நம்மை கலங்கடிக்கிறார்
வெற்றிமாறனின் திரைமொழி இந்தமுறையும் நம்மை ஏமாற்றவில்லை. ஒரு காட்சியின் ஓப்பனிங்-end துவங்கி, ஒவ்வொரு கேரக்டர்களின் தனித்துவம் வரைக்கும் பெரும் சிரத்தை எடுத்து உழைத்திருக்கிறார். வெற்றிமாறனும் மணிமாறனும் எழுதியிருக்கும் வசனங்கள் படத்தின் மற்றுமொரு பில்லர்.
அரசின் செயல்பாடுகளில் உடன்பாடு இல்லை என்றாலும் அதிகாரிகள் அரசு சொன்னதைச் செய்யவேண்டிய நிர்பந்தத்தில் இருப்பதை இயல்பாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். மேலும் காவல்துறைக்கு தண்டிப்பதில் இதுதான் எல்லை என்ற எந்த வரையறைகளும் இல்லை என்பதை அம்மணப்படுத்தி ஆவணப்படுத்தியுள்ளார் வெற்றிமாறன். சோளகர் தொட்டி நாவலில் வருவதைப் போல உடலில் துணியில்லாமல் பெண்கள் படும் அவஸ்தைகளை திரையில் காட்டி நம்மை விம்மச் செய்கிறார். இத்தனை அடிகள் வாங்கியும் அவமானங்கள் தாங்கியும் அம்மக்கள் மீண்டும் மீண்டெழத்தான் போகிறார்கள் என்பதற்கான லீட்-ஐ கொடுத்து இந்தப்பாகத்தை நிறைவு செய்துள்ளது விடுதலை. இந்த விடுதலை மக்கள் அனைவருக்குமானது.