பெற்றவர்களின் கடமை பெற்றதோடு இல்லாமல் பெற்ற பிள்ளைகளின் ஆசையை நிறைவேற்றும் ஒரு தந்தையின் கதை தான் இந்த விமானம்.
சென்னை குடிசைப்பகுதிகளில் கட்டணக் கழிப்பறை நடத்தி சம்பாதிக்கும் மாற்றுத்திறனாளி அப்பா சமுத்திரக்கனி. அம்மாவை இழந்த அவரது நான்காவது படிக்கும் மகனாக நடித்துள்ள துருவனுக்கு விமானம் என்றால் கொள்ளைப் பிரியம்.
பாசக்கார ஏழை அப்பாவாக சமுத்திரக்கனி நடிப்பி மிளிர்கிறார். கட்டணக் கழிப்பிடத் தொழிலை நேர்மையாக செய்வது, மாற்றுத் திறனாளிகள் வாகனத்தில் மகனை வாஞ்சையாக அழைத்துச் செல்வது, மகனுக்காக துடிதுடிப்பது என குடும்பத்துக்காக நாள்தோறும் கஷ்டப்படும் ஏழை தந்தைகளை திரையில் பிரதிபலித்திருக்கிறார்.அப்பாவின் கஷ்டங்களைப் புரிந்து கொண்டு படிப்பில் சுட்டியாக விமானக் காதலாராக மாஸ்டர் துருவன். கொஞ்சம் செண்டெமெண்ட் மேலோங்கி நடித்தாலும் கதைக்கு வேண்டியதை செய்திருக்கிறார். விமானத்தை பார்த்து ரசிக்கும் இடங்களில் ஈர்க்கிறார்.
அப்பா – மகன் பாசத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படத்தில் அனுசுயா கதாபாத்திரமும் கவர்ச்சியும் தேவையற்ற திணிப்பு. மொட்டை ராஜேந்திரன் – ராகுல் ராமகிருஷ்ணா இணைந்து செய்யும் காமெடி சிரிப்புக்கு பதிலாக கடுப்பையும், கோபத்தையே வரவழைக்கிறது. சரண் அர்ஜூனின் இசை சலிப்பு தட்டுகிறது.
சாதிய, வர்க்கரீதியாக, உடல்ரீதியாக என பலவிதங்களில் ஒடுக்கப்படும் மாற்றுத் திறனாளி சமுத்திரக்கனி அனுபவிக்கும் கஷ்டங்களை திரையில் காண்பித்தது பாராட்டுக்குரியது. ஆனால் உலகின் அத்தனை பிரச்னைகளையும் சமுத்திரக்கனியின் தலையில் கட்டி சோகத்தில் நம்மை முக்கி எடுக்கிறார்கள். படம் பார்க்கும் பார்வையாளர்களை அழவைக்காமல் விடுவதில்லை என இயக்குநர் சபதம் எடுத்துவிட்டு வந்திருப்பார் போலும்… கிளாசிக் சோக தமிழ் சினிமாவான துலாபாரத்தை விட சோகம் ததும்ப படம் செல்கிறது!படத்தின் அடுத்தடுத்து வரும் காட்சிகள் நாம் ஏற்கனவே யூகித்தபடி நகர்வது சற்று சலிப்பை ஏற்படுத்துகின்றது.
இருந்தாலும் இக்கதையில் இவ்வளவு சோகம் தேவையா என்ற கேள்வி நம் மனதிற்குள் எழுவது உண்மை.








