கதையை மாற்றிய மணிரத்தினம், எப்படி வந்தது இந்த தைரியம்..!
பொன்னியின் செல்வன் பாகம்-2
முதலில் நந்தினி யார் என்ற இடியாப்பச் சிக்கலை (கல்கி மாதிரி ஊமை ராணியின் பெயர் கெடாமல் இருக்க இன்னொரு சகோதரியைக் கொண்டு வந்து குழப்பாமல்) மிக எளிதில் நீக்கியிருப்பதோடு அதன் மூலம் நந்தினி பாத்திரத்துக்கு அருமையான நியாயம் வழங்கியிருக்கிறார்.
முதல் பாகத்தை விட ஐஸ்வர்யா ராய் PS-2 வில் ஜொலிக்கிறார். அந்தக்கால எம்ஜியார் படங்களில் இரண்டாவது கதாநாயகி வில்லனின் துப்பாக்கி குண்டை வயிற்றில் வாங்கி கொண்டு சாவது மாதிரியான சாவு ஊமை ராணிக்கு வந்திருக்க வேண்டாம்.
கல்கியின் நாவல் என்னதான் கதை அருண் மொழி வர்மனைச் சுற்றி படர்ந்தாலும் வீரியமும், வீரமும் மிக்க பாத்திரம் ஆதித்த கரிகாலன்தான். அவனுடைய இறப்பும் அதற்குப் பின்னால் இருக்கும் சதியும்தான் கதையே. எனவேதான் ஆதித்தனின் மரணத்தை கல்கி இறுதி பாகத்தில்தான் நிகழ்த்துவார். இந்த மையப்புள்ளியை நோக்கியே கதை நகர்வதால் ஆதித்த கரிகாலனின் திரைப்பாத்திரத்துக்கு சொல்லாமலே ஒரு கனம் சேர்ந்து விடும்.
இதனைப் புரிந்து உள்வாங்கிக் கொண்டு விக்ரம் அசத்தியிருக்கிறார். ஆரம்பகாட்சியில் மட்டும் அவரை முதலில் பார்க்கும்போது என்னடா மனிதன் இரண்டாவது பாகத்தில் மேலும் மெலிந்து மேலும் வயதாகி விட்டாரே என்று தோன்றுவதை மறுப்பதற்கில்லை. ஆனால் அந்தக் கண்களில் மின்னும் கோபம், நக்கல், காதல், ஆற்றாமை என்று எத்தனை பாவங்கள் இந்த நடிகனிடம்.
அதே போல சேந்தன் முதன் பாத்திரத்தை கச்சிதமாகக் கத்தரி போட்டு தூக்கியதற்கு மனிசாருக்கு நன்றி. இதைச் செய்திரா விட்டால் ஊமைராணி நந்தினி பாத்திரங்கள் படம் நெடுகிலும் நொண்டும். ஆதித்த கரிகாலன் மீது நந்தினிக்கு இருந்த காதலும், ஆதித்த கரிகாலன் வீர பாண்டியனைக் கொன்றதற்கும் நியாயம் கிடைக்காமல் போயிருக்கும். மணிமேகலையை தூக்கி விட்டார்கள் என்பதற்குக் கதை அருண் மொழித் தேவன் என்ற ராஜ ராஜ சோழனின் கதையே தவிர வல்லவராயனின் கதை இல்லை.
முதல் பாகத்தில் ஒவ்வொரு இடத்திலும் கதையைப் புரிய வைக்க காட்சியமைப்புகள் வேண்டியிருந்தது. இரண்டாவது பாகத்துக்கு அது தேவையில்லை என்பதால் எடுத்தவுடன் நந்தினி ஆதித்தனின் இளம்பருவ காதல் கவிதை போல சித்தரிக்கப்பட்டு மணி சாருக்குக் கதையைக் கொண்டு செல்வதில் சிரமம் இருந்திருக்காது. சொல்லப்போனால் எங்கிருந்து தொடங்குவது என்பதுதானே ஒரு திறமையான இயக்குனரின் அடையாளம்.
லாஜிக் என்று பார்த்தாலும் இயக்குனர் கதையை மாற்றியதில் தப்பித்து விடுகிறார். ஆரம்பத்தில் தனக்கு அடைக்கலம் அளித்த வீர பாண்டியனை ஆதித்த கரிகாலன் கொன்று விடுவதும் அதற்குப் பழி தீர்க்க நந்தினி கிளம்புவதும் அழுத்தமான புள்ளி. அதனை நன்றாகவே காட்டியிருக்கிறார் மணிரத்னம்.
பாத்திரப்படைப்புகள் எல்லாமே தெளிவாக உள்ளன. போதுமான வெளிச்சம், போதுமான ஒளியமைப்பு. இனிய இசை என்று எல்லாமே படத்தை முழுமையடையச் செய்துள்ளன. குறிப்பாக ஆதித்த கரிகாலன் கடம்பூர் மாளிகையில் குதிரையில் அமர்ந்தபடி சிற்றரர்சர்களை சொல்லம்புகளால் சந்திக்கும் காட்சி. வாவ்! விக்ரம் அசத்தியிருப்பார். அதே போல கடம்பூர் மாளிகையில் நந்தினி ஆதித்தனைப் பழி தீர்க்கும் இடத்திலும் இரண்டு பேரும் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருப்பார்கள்.
அதே போல நதியில் ஐஸ்வர்யா ராய் மூழ்கும் காட்சியிலும் அசத்தியிருப்பார்( மணிரத்னத்திற்கு ஐஸ்வர்யாவை அத்தனை பிடிக்கும் போல.) சிவாஜி குடும்பத்தினரின் தமிழ் உச்சரிப்பில் சுத்தமாக ல ள வித்யாசம் இல்லாமல் இருப்பது வருத்தமாக உள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசை அபாரம். Mani’s way of making காரணமாக ஒரு பாடலையும் படத்தில் முழுவதும் கேட்க முடியவில்லை என்றாலும் பாடல்கள் இரண்டாம் பாகத்தில் அட்டகாசம். BGM இல் சொல்லவே வேண்டாம். தீவர்த்தி படபடவென்று எரியும் ஓசையைக் கூட விடவில்லை, துல்லியமாக விழ வைத்திருக்கிறார்.
நாவலைப் படித்தவர்கள் பெரிய குறையாகச் சொல்வது இறுதியில் வரும் இராட்டிரகூட போர் நாவலில் இல்லாமல் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது என்பதாகவே இருக்கும். நாவலுக்கு வேண்டுமானால் தனக்குரிய மணிமுடியை அருண்மொழி வர்மன் சேந்தன் அமுதனுக்கு விட்டுக் கொடுப்பது போல அமைத்திருந்தது வெற்றியைக் கொடுத்திருக்கலாம். ஆனால் இது முழுக்க முழுக்க மூன்று வீரர்களின் கதை. க்ளைமாக்சில் ஒரு போர்க்காட்சி கூட இல்லாமல் முடித்தால் இரண்டே நாளில் படத்திற்கு எதிர்பார்த்த வெற்றி கிடைத்திருக்காது. அதே போல என்ன காரணத்திற்காக அநிருத்த பிரம்மராயர் பாத்திரத்தை டம்மியாக்கினார் என்று தெரியவில்லை.
ராவணனில் அதர்மத்தின் பக்கம் நின்று சொதப்பியிருந்ததை பொன்னியின் செல்வனில் தர்மத்தின் பக்கம் நின்று மணிசார் சரி செய்து விட்டார்.
இரண்டு மூன்று காட்சிகளில் பின்னால் கும்பலில் இருக்கும் நடிகர்கள் கண் அசைவையும்,
கை அசைவையும் இயக்குனர் கூட பராவாயில்லை உதவி இயக்குனர்கள் கூட சரியாக கவனிக்கவில்லை.

அதே போல அலெக்சாண்டர் டூமாசை ஒற்றி கல்கி பாண்டிய இளவரசன் நந்தினி இடையில் அருமையாக வசனம் எழுதியிருப்பார். அதில் பாதி கூட ஜெயமோகன் தொடவில்லை. டைட்டிலில் மட்டுமே ஜெயமோகன் பெயர் வருவதைப் பார்க்க முடிகிறது.
புத்தகம் முழுமையாக படித்தவர்களுக்கு இப்படம் நிறைவை தராது என்பது உறுதி.
புத்தகங்களை அதிகம் படிப்பதில் கைதேர்ந்தவர் இயக்குனர் மணிரத்தினம்.
நாவல் வேறு, திரைப்படம் வேறு. இதனைப் புரிந்து கொண்டு மணிரத்தினம் பொன்னியின் செல்வனில் நிறைவைத் தந்திருக்கிறார்.
இப்படத்தில் கதையை மாற்றிய இயக்குனர் மணிரத்தினத்தின் செயல் ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை. இருந்தாலும் அதற்கு விடை இயக்குனர் மணிரத்தினத்திற்கு மட்டுமே தெரியும்.