வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் கடந்த ஒருவார காலமாக அங்குள்ள இஸ்லாமிய மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இஸ்லாமியர்களுக்குச் சொந்தமான வீடுகள், கடைகள் அடித்து நொறுக்கப்படுவதும், பள்ளிவாசல்கள் தீயிட்டுக் கொளுத்தப்படுவதையும் வேடிக்கை பார்க்கும் அம்மாநிலத்தை ஆளும் பாஜக அரசின் செயல் வன்மையான கண்டத்திற்குரியது.
கடும்போக்கு இந்துத்துவ அமைப்புகளால் இஸ்லாமிய மக்கள் மீது, அவர்களது உடைமைகள் மீது நடத்தப்படுகின்ற தொடர் தாக்குதல்களைத் திரிபுராவை ஆளும் பாஜக அரசு, வேடிக்கை பார்ப்பது அடிப்படை மனித அறத்திற்கே எதிரான கொடுஞ்செயலாகும். திரிபுரா தனிமாநிலம் உருவான பின் 50 ஆண்டுகளில் இல்லாத அளவில், முதன்முறையாகப் பாஜக ஆட்சி அமைத்தபிறகு இஸ்லாமியர்கள் மீது இத்தகைய கொடுந்தாக்குதல்கள் நடத்தப்படுவது மாநில அரசின் மறைமுக ஆதரவுடனே நடைபெறுகிறது என்பதை உறுதிப்படுத்துகிறது. எதிர்வரும் நகர்மன்றத்தேர்தலை மனதில் வைத்து மதக் கலவரத்தைத் தூண்டிவிட்டு அதன்மூலம் அரசியல் இலாபம் அடைய அம்மாநில பாஜக அரசு திட்டமிடுகிறதோ என்ற சந்தேகமும் எழுகிறது.
கட்சியின் கொள்கை, தத்துவம் எதுவாக இருப்பினும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அமைத்த பிறகு, அந்த அரசு என்பது அனைவருக்கும் பொதுவானதாக, அனைத்து மக்களையும் பாதுகாப்பதாக இருக்க வேண்டும். ஆனால் அரசே கலவரம் நடப்பதை கைக்கட்டி வேடிக்கை பார்ப்பதும், கலவரம் செய்வோரை கண்டுகொள்ளாமல் பாதிக்கப்படுகின்ற மக்களைப் பாதுகாக்கத் தவறுவதும் பாஜக என்பது மனிதக்குலத்திற்கே எதிரான கட்சி என்பதையே மீண்டும் , மீண்டும் வெளிப்படுத்துகிறது.
மாநிலத்தில் நடக்கும் மதப்படுகொலைகளைத் தடுக்க வேண்டிய ஒன்றிய பாஜக அரசும் எவ்வித சலனமுமின்றி ஒதுங்கி நிற்கிறது என்பதில் எவ்வித வியப்புமில்லை. ஆனால் மதச்சார்பின்மை, முற்போக்கு, என்று முகமூடி போடுகின்ற காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும், இயக்கங்களும் வாய் திறக்காமல் மௌனித்திருப்பது ஏன் ?
இத்தகைய இக்கட்டான சூழலில் திரிபுராவை இன்னொரு குஜராத்தாகாமல் காப்பாற்ற வேண்டியது இந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு குடிமகனின், பொறுப்பும், கடைமையுமாகும். ஆகவே மதம் கடந்து மனிதம் போற்றும் சனநாயக சக்திகள், மனித உரிமை போராளிகள், இயக்கங்கள் ஒன்றிணைந்து குரல் கொடுப்பதன் மூலம் திரிபுராவில் வாழும் இஸ்லாமிய மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை விரைந்து தடுத்து நிறுத்தவேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.
— சீமான்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி.