தென்கொரிய திரைப்பட விழாவில் சிறந்த திரைப்பட விருது பெற்ற “சாட் பூட் த்ரி” தமிழ் திரைப்படம் பற்றிய கொரிய தமிழ்ச் சங்கத்தின் செய்தி குறிப்பு
விருதிற்கான சான்றிதழையும், பணமுடிப்பையும் விழாவில் கலந்துகொண்ட படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமான திரு. அருணாச்சலம் வைத்யநாதன் அவர்கள் பெற்றுக்கொண்டார். நிகழ்வில் கொரிய தமிழ்ச் சங்கத்தின் சார்பில் முனைவர் பு. பாஸ்கரன், செயலாளர், செயற்பாட்டுக்குழு, அவர்கள் கலந்துகொண்டு இயக்குனரை வாழ்த்தி தேவையான உதவி மற்றும் ஒத்துழைப்புக்களை வழங்கினார்.
பின்னர் இப்படம் கொரிய மக்களுக்கு திரையிடப்பட்டது. படத்தில் இடம்பெற்ற குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளுக்குமிடையேயான காட்சிகள் தமக்கு நெருக்கமாக இருந்ததாக கொரிய மக்கள் தெரிவித்தனர். 2016-இம் ஆண்டு முதல் நடக்கும் இந்த பன்னாட்டு திரைப்பட விழாவில் விருதுபெரும் முதல் இந்திய திரைப்படம் “சாட் பூட் த்ரி” என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கடந்த ஜூலை மாதம் விருதிற்கான விண்ணப்பங்கள் பன்னாட்டு அளவில் பெறப்பட்டு செப்டம்பர் இறுதியில் முடிவுகள் வெளியிடப்பட்டன. புகழ் பெற்ற கொரிய திரைப்பட இயக்குனர்களான சாங் பியோம் கோ, சாங் ஜே லிம், மற்றும் கிவி தோக் லீ ஆகியோர் அடங்கிய குழு விருதிற்கான படங்களை தெரிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.தமது கொரிய வருகையின் ஒரு பகுதியாக முனைவர் பாஸ்கரன் அவர்களும் படத்தின் இயக்குனரும் இந்திய தூதரகம் சென்று மாண்புமிகு இந்திய தூதர் அமித் குமார், துணைத்தூதர் சுரீந்தர் பகத், பண்பாட்டுத்துறை செயலாளர் முனைவர் சோனு திரிவேதி ஆகியோரை சந்தித்தனர்.
இச்சந்திப்பில் கொரியாவில் தமிழ் உள்ளிட இந்திய திரைப்படங்களை வணிகரீதியாக கொண்டு செல்வது குறித்து கலந்துரையாடினர். கொரிய மற்றும் தமிழ் திரைப்படங்களுக்கு தமிழ் கொரிய மக்களுக்கிடையே இருக்கும் நல்ல வரவேற்பு, தமிழ் திரைத்துரையின் உலகளாவிய வீச்சு மற்றும் வளர்ச்சி குறித்து இயக்குனர் தூதரிடம் எடுத்துரைத்தார்.
சாத் பூட் திரி உள்ளிட்ட சிறந்த தமிழ்ப்படைப்புகளை கொரிய மக்களிடம் கொண்டுசெல்ல தம்மாலான அணைத்து உதவிகளையும் செய்வதாக தூதரும் பண்பாட்டுத்துறை செயலாளரும் தெரிவித்தனர்.
படத்தின் இயக்குனருக்கும் இந்திய தூதரக அதிகாரிகளுக்குமிடையான சந்திப்பிற்கான ஏற்பாடுகளை கொரிய தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் சு. இராமசுந்தரம், மக்கள் தொடர்பு செயலாளர் சாந்தி பிரின்ஸ், காப்பாளர் முனைவர் பிரபாகரன், செயலாளர் முனைவர் பத்மநாபன், மூத்த உறுப்பினர்கள் முனைவர்கள் சரவணன், சோபா, கோபி மற்றும் திவ்யா ஆகியோர் செய்திருந்தனர்.மகிழ்வுடன் தாய்நாடு திரும்பிய இயக்குனர் அவர்கள் கொரிய தமிழ்ச் சங்கத்திற்கும், உடன்நின்று உதவி செய்த முனைவர் பாஸ்கரன், கள ஏற்பாடுகளை முன்னின்று செய்த சங்கத்தின் தலைவர் முனைவர். இராமசுந்தரம் உள்ளட்ட சங்கத்தின் ஆளுமைக்குழு உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தார்.









