ரேசர் – விமர்சனம்
‘ஆசை, லட்சியம், அது இதுன்னு பேசிக்கிட்டிருக்காம நல்லா படிச்சு வேலைக்குப் போய் சம்பாதிக்கப் பாரு’ என்று சொல்லும் அப்பா. பைக் ரேசர் ஆகவேண்டும் என்ற கனவுடன் இருக்கும் மகன். இது தான் ரேசர்
கனவுக்கு தடைபோடும் அப்பாவுக்குத் தெரியாமல் தன் லட்சியப் பாதையில் நடைபோட முயற்சிக்கும் மகன் சந்திக்கும் கஷ்ட நஷ்டங்கள் தான் திரைக்கதை…
அவன் தான் நினைத்த சாதனையை நிகழ்த்த முடிந்ததா இல்லையா என்பது கிளைமாக்ஸ்… இயக்கம் சட்ஸ் ரெக்ஸ்
அப்பாவின் பாசம் பொதிந்த கட்டுப்பாட்டுக்கு அடங்கிப் போவது, விருப்பத்தை விட்டுக் கொடுக்க முடியாமல் அப்பாவுக்குத் தெரியாமல் லோன் போட்டு விரும்பிய பைக் வாங்கி ரேஸில் கலந்து கொள்வது, தனக்கு பைக் ரேஸில் அனுபவம் இல்லாததை சுட்டிக்காட்டி சீண்டும் சாம்பியன் முன் அவமானத்தில் மனம் உடைவது, ஒரு கட்டத்தில் முயற்சியால் குறிப்பிட்ட இலக்கை எட்டிப் பிடித்து கெத்தாக கோப்பையை வெல்வது என உணர்வுகளின் கலவையாய் நடிப்புப் பங்களிப்பை அழகாக, அளவாக தந்திருக்கிறார் அகில் சந்தோஷ்.
பெரிதாய் வேலையில்லை என்றாலும் வருகிற மிகச்சில காட்சிகளில் கச்சிதமாக நடித்திருக்கிறார் ஹோம்லி லுக், கிளாமர் கிக் என இரண்டுக்கும் பொருந்துகிற தோற்றத்திலிருக்கும் லாவண்யா
மகன் மீது பாசம் இருந்தாலும் அவன் தன் விருப்பத்துக்கேற்ப மட்டுமே நடந்துகொள்ள வேண்டும் என நினைக்கிற, அதற்கேற்ற வசதி வாய்ப்புகளை உருவாக்கித் தருகிற அப்பாவாக சுப்ரமணியன். கனிவான சர்வாதிகாரியாக இயல்பான நடிப்பால் தன் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியிருக்கிறார்.
கதாநாயகனின் அம்மாவாக பார்வதி, நண்பர்களாக சரத், நிர்மல், சதீஷ், ரேஸுக்கான பைக் உருவாக்கித் தருவதில் எக்ஸ்பர்ட்டாக – உற்சாகமான பைக் மெக்கானிக்காக ஆறுபாலா, பைக் ரேஸ் பயிற்சியாளர் அனீஸ், வில்லனாக அரவிந்த் என அத்தனைப் பேரும் பாத்திரங்களுக்கேற்ற சரியாக பொறுந்தியுள்ளனர்.
சைக்கிள் பழகும் பருவம், தானே முயற்சித்து ஸ்கூட்டரை ஓட்டும் ஆர்வம், அப்பாவின் பைக்கை எடுத்து ஓட்டிப் பார்க்கிற துணிச்சல் என கதாநாயகனின் இளம்பருவ காட்சிகளில் வருகிற அந்த பதின்பருவப் பையனின் துடிப்பான நடிப்பும், களங்கமில்லா சிரிப்பும் கவர்கிறது.
ரேஸ் காட்சிகளில் நிஜமான பைக் ரேஸ் வீரர்களை பயன்படுத்தியிருக்கிறார்கள்.
ரேஸ் பைக்குகளின் தரம் – விலை, பயிற்சிக் களம், பந்தயச் சாலை, பந்தயங்களில் கலந்துகொள்ள ஆகும் செலவு, அந்த களத்தில் நிலவும் போட்டி பொறாமை என பலவற்றை காட்சிப்படுத்தியதில் இருக்கும் நேர்த்தியில் இயக்குநரின் உழைப்பு தெரிகிறது!
பிரபாகரின் ஒளிப்பதிவு படத்தின் பலம். இசையில் காட்சிகளின் தேவைக்கேற்ற ஏற்ற இறக்கம் என தன் பங்கிற்கு கச்சிதமாக பணியாற்றியுள்ளார் பரத்.
பெற்றோரின் விருப்பம், பணப் பற்றாக்குறை என சில காரணங்களால்ஏறபடும் இளைய தலைமுறையின் வேதனையை எளிமையான திரைமொழியில் காட்சிப்படுத்தியிருப்பதற்காக இயக்குநருக்கு பாராட்டு.
ரேசர் – பைக் ரேஸ் ஆர்வலர்களுக்கான கதை.