ஷெரிஃப் இயக்கத்தில் வைபவ், நந்திதா ஸ்வேதா, தான்யா ஹோப், சரஸ் மேனன், சுரேஷ் சக்கரவர்த்தி, ஜீவா சுப்பிரமணியன், விலங்கு கிச்சா ரவி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “ரணம் அறம் தவறேல்”. அர்ரோல் குரோலி இசையமைத்துள்ள இப்படத்திற்கு பாலாஜி கே ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். மது நாகராஜன் தயாரித்துள்ளார்.
“ரணம் அறம் தவறேல்” படம் குற்றமும், விசாரணையும் என ஒரு க்ரைம் த்ரில்லர் பட பாணியில் கதையானது அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்தடுத்த இடங்களில் கால், கை, உடம்பு என தனித்தனியாக எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்படுகின்றன. காவல் நிலையத்தில் குற்றச் செயலுக்கான கிரைம் ஸ்டோரி எழுதுபவரும், குற்றவாளிகளை உருவங்களை ஸ்கெட்ச் செய்பவருமான வைபவ் விசாரணைக்கு உதவ வருகிறார். அவரின் முயற்சியில் கண்டெடுக்கப்பட்ட உடல் பாகங்கள் வெவ்வேறு நபர்களுடையது என தெரிய வருகிறது. அதேசமயம் இந்த வழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டரும் காணாமல் போகிறார். இதனால் வழக்கு தான்யா ஹோப் கைக்கு வருகிறது. இவரும் வைபவ் இருவரும் இணைந்து வழக்கின் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முயல்கிறார்கள். ஒவ்வொரு முறையும் குற்றவாளிகளை நெருங்கும்போது அடுத்தடுத்து அதிர்ச்சியான சம்பவங்கள் காத்திருக்கின்றன. இறுதியாக உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்தார்களா? இந்த கொலைகளுக்கு எல்லாம் காரணம் என்ன? என்பதை இறுதியாக ரணம் அறம் தவறேல் படத்தின் கதையாகும். இப்படத்தில் வைபவ், தான்யா ஹோப், சுரேஷ் சக்கரவர்த்தி, நந்திதா, ஜீவா சுப்பிரமணியம் உள்ளிட்ட சில கேரக்டர்களை சுற்றி தான் கதையானது நகர்கிறது. சிவாவாக வரும் வைபவ் குற்றங்களை கண்டுபிடிக்க உதவுபவராகவும், ஸ்கெட்ச் செய்து ஒருவரின் உருவத்தை கண்டறியும் நபராகவும் சிறப்பாக நடித்துள்ளார். இது அவரின் 25வது படம் என்பதால் நடிப்பில் வெரைட்டி காட்ட முயற்சித்துள்ளார். இதேபோல் தான்யா ஹோப் போலீசாக வருவதால் எப்போதும் ஸ்ட்ரிக்டான நபராகவே வலம் வருகிறார். இவர்களை தவிர நந்திதா கேரக்டருக்கான நடிப்பை வெளிப்படுத்தினாலும் அவரது காட்சிகள் பெரிய அளவில் தாக்கம் ஏற்படுத்தாதது ஏமாற்றம் தான். படம் தொடங்கி முதல் 20 நிமிடங்கள் அப்படி, இப்படி என சென்று கொண்டிருக்கும் நிலையில் கொலைக்கான விசாரணை காட்சிகள் தொடங்கி இடைவேளை வரை படம் பார்ப்பவர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் சிறப்பாக காட்சியமைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இரண்டாம் பாதி திரைக்கதை முதல் பாதியை விட சற்று தொய்வாகவே உள்ளது.
அப்பகுதியில் காட்டப்படும் காட்சிகளின் சுவாரஸ்யம், நம்பகத்தன்மையை கூட்டியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
அரோல் குரோலியின் பின்னணி இசை படத்துக்கு பலமாக அமைந்துள்ளது. மேலும் காவல்துறை விசாரணைக்கு உதவும் வைபவ் போலீசாரை விட க்ரைம் கண்டுபிடிப்பதில் காட்டும் தீவிரம் என்ற கேள்விக்கான விடை சரியாக சொல்லப்பட்டாலும் அவை இரண்டாம் பாதி திரைக்கதையில் ஒட்டியும் ஒட்டாமல் இருக்கிறது. ஆக மொத்தத்தில், க்ரைம் த்ரில்லர் படம் பார்க்க விரும்புவர்கள் நிச்சயமாக ரணம் படத்தை பார்க்கலாம்.
சமீப காலமாக இது மாதிரியான படங்களை ரசிகர்கள் வெகுவாக ரசிப்பார்கள் என்பது உண்மை