கூத்துக்கலை என்பது மனிதர்கள் சில பல ஒப்பனை உபகரணங்களுடன் நடத்தும் நிகழ்த்துக்கலை. மஹாபாரதக் கூத்து, வள்ளித்திருமண கூத்து, அரிச்சந்திர கூத்து என நமது புராண இதிகாசங்களை ஒட்டி இக்கலைகள் நடத்தப்படுவதுண்டு. திருவண்ணாமலை மாவட்டத்தில் இப்படியான கூத்துக்களுக்கு மவுசு அதிகம். தற்போதைய சூழலில் கூத்துக்கலை வழக்கொழிந்து வந்தாலும், இன்னும் அங்கொன்றும் இங்கொன்றுமாக கூத்துக்கலை பெரும் சிரமத்துடன் இயங்கி தான் வருகிறது.
ஜமா படம் அப்படியான கூத்துக்கலையில் ஊடோடியுள்ள அக்கலைஞர்களின் வாழ்வையும், அதில் ஒருவனின் லட்சியத்தையும் காதலையும் பேசுகிறது. நாயகன் பாரி இளவழகன் சேத்தன் நடத்தும் கூத்து ஜமாவில் குந்தி அல்லது திரளெபதி வேடமிட்டு ஆடும் கலைஞன். அவருக்கு ஒரு தீரா ஆசை உள்ளது. அது என்னவென்றால் ஒருநாளாவது அர்ஜுனன் வேசம் போடவேண்டும் என்பதே. ஆனால் அதற்கு ஜமாவின் தலை ஆன சேத்தன் ஒத்துழைக்க மறுக்கிறார். பாரி இளவழகனின் அப்பாவும் சேத்தனும் ஒருகாலத்தில் ஒன்றாக இருந்தவர்கள் என்றாலும் சேத்தன் பாரி விசயத்தில் கறார்த்தன்மையுடன் நடந்துகொள்கிறார். அதற்குப் பின்னால் பொறாமையும் அதிகாரமும் இருக்கிறது. எப்படியேனும் அர்ஜுனன் பாத்திரமேற்கத் துடிக்கும் பெண் தன்மை கொண்ட நாயகனுக்கும், சேத்தனின் மகள் அம்மு அபிராமிக்கும் காதல் மலர்கிறது. காதலும் லட்சியயமுமாய்ப் பயணிக்கும் நாயகன் பாரி இளவழகனுக்கு நேரும் சம்பவங்கள் தான் மொத்தப் படமும்.
ஒரு கூத்துக்கலைஞனுக்கு மூலதனமே அவனது உடல்மொழி தான். சற்றே பிசிறு தட்டினாலும் முற்றிலும் செயற்கையாகத் தெரிந்து விடும். அந்த அபாயம் உணர்ந்து தன் கதாபாத்திரத்தைச் சிறப்பாகச் செய்துள்ளார் நாயகன் பாரி இளவழகன். படத்தின் இயக்குநரும் இவரே. காதலியிடம் உள்ளுக்குள் காதலை வைத்துக்கொண்டு வெளியில் அதை மறுத்துப் பேசும் இடங்களிலும், குந்தி தேவி வேடமிட்டு அவர் பாடி நடிக்கும் இடத்திலும் க்ளாஸிக் நடிப்பை கொடுத்துள்ளார். சேத்தன் கரியரில் இந்தப்படம் ஒன்று போதும் எனுமளவில் தன் நடிப்பில் நின்று பேசியுள்ளார். பிறருக்குத் துன்பம் தருவதையே தன் கொள்கையாகக் கொண்ட வன்மம் நிறைந்த சேத்தனின் கதாபாத்திரம் படத்தின் பெரும்பலம். அம்மு அபிராமி கிடைத்த வெளிகளில் எல்லாம் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் படத்தில் தோன்றும் எல்லாக் கதாபாத்திரங்களும் சிறப்புற நடித்துள்ளன.
இளையராஜா இசை இதமாக ஒலிக்க வேண்டிய இடத்தில் சற்று கூடுதலாகவே ஒலிக்கிறது. ஒலியில் பிழையா, ஒலிக்கலவையில் பிழையா எனத் தெரியவில்லை. கோபி கிருஷ்ணனின் ஒளிப்பதிவு படத்தை நம்மோடு நெருக்கமாக்கிக் கொள்கிறது. ஒப்பனை கலைஞர்களும், ஆர்ட் & செட் கலைஞர்களும் நல்ல உழைப்பைக் கொடுத்துள்ளனர்.
ஒரு ஜமாவைத் துவங்கி அதில் தான் வாத்தியாராக இருந்து, அர்ஜுனன் வேசம் போட வேண்டும் என்ற ஒரு கூத்துக்கலைஞனின் ஆசை தான் கதையின் மையக்கரு. ஆனால் அந்தக் கலைஞனுக்கு அதை அடைவதால் என்ன கிடைக்கப் போகிறது என்பதில் எமோஷ்னல் டச் என்பது இல்லை. மேலும் மெயின் சம்பவம் நடந்த பின்னும் கதையை இழுத்துச் செல்லும் போக்கு படத்தின் மிகச்சிறு குறைகளில் ஒன்று. கூத்துக்கலையின் டீடெயிலிங், அம்மக்களின் உரையாடல் உள்பட படத்தில் உண்மைக்கு நெருக்கமான விசயங்கள் நிறைய. நல்ல நடிகர்களின் தேர்வு, அவர்களின் கதாபாத்திரங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவம் என திரைக்கதையில் படம் படு கெட்டி. சிற்சில குறைகள் இருந்தாலும் நாம் வாழும் காலத்தில் வீழ்ந்து கொண்டிருந்தாலும், ஏதோ நம்பிக்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் கூத்துக்கலையைக் கண்முன் நிறுத்தியுள்ள இந்த ஜமாவிற்கு ஒரு விசிட் அடிக்கலாம்.
மொத்தத்தில் இந்த ஜமா தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வாதாரத்தை பக்காவாக விளக்குகின்ற படம்.