தினேஷ்,கலையரசன், ஷபீர் கல்லாரக்கல் , பாலசரவணன், வேட்டை முத்துக்குமார், ரித்விகா, வின்சு ரேச்சல் சாம், அருள்தாஸ், யுவன் மயில்சாமி, கவிதா பாரதி நடித்துள்ளனர். அதியன் ஆதிரை இயக்கியுள்ளார், ஒளிப்பதிவு பிரதீப் காளி ராஜா, இசை ஜஸ்டின் பிரபாகரன் , படத்தொகுப்பு செல்வா ஆர்.கே, கலை டி. ராமலிங்கம். பாடல்கள் உமாதேவி, தனிக்கொடி.
லேர்ன் அண்ட் டெக் புரொடக்ஷன், நீலம் புரொடக்ஷன் தயாரித்துள்ளன.
நக்சல் பாரிகள் என்ற பெயரில் நிரபராதிகள் போலி என்கவுண்டர் செய்யப்பட்ட உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாகி இருக்கிறது.எளிய மக்களின் உயிரை கிள்ளுக்கீரையாக நினைத்து அதிகார வர்க்கம் போடும் ஆட்டத்தைத் தோலுரித்துக் காட்டுகிறது இந்த ’தண்டகாரண்யம்.’
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொழுவப்பட்ட என்ற கிராமத்தில் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகிறார்கள் .அந்த ஊரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் இருப்பவர்கள் அண்ணன் தினேஷ் தம்பி கலையரசன்.கலையரசன் வனத்துறையில் தற்காலிகமாக வேலை பார்த்து வருகிறார்.உள்ளூர்ப் பெண் பிரியாவோடு காதலும் உள்ளது. வனத்துறையில் எதிர்பார்ப்புடன் ஏழு ஆண்டுகள் செல்கின்றன. வேலை நிரந்தரமாகி விடும் என்ற கனவில் இருக்கிறார்.ஆனால் அண்ணன் தினேஷால் ஒரு பிரச்சினை ஆகிறது.எனவே வேலையை இழக்க நேரிடுகிறது.அப்படிப்பட்டவரிடம் ராணுவத்தில் சேரலாம் என்று ஒருவர் வழிகாட்டுகிறார். நிலத்தை விற்றுச் சில லட்சங்கள் பணத்தைக் கட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி சென்று இராணுவப் பயிற்சி மையத்தில் சேர்கிறார்.கூடவே பால சரவணனும் செல்கிறார்.அங்கே பயிற்சிகள் கடுமையாக இருக்கின்றன.கொடுமையாகவும் இருக்கின்றன. அங்கே போன பிறகு தான் தெரிகிறது தன்னுடன் பயிற்சி பெறுபவர்கள் முன்னாள் நச்சல்பாரிகள் என்று. ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு விட்டுச் சரணடைந்த அவர்களுக்கு மறுவாழ்வு, ராணுவப் பயிற்சி ,வேலைவாய்ப்பு என்று ஆசை வார்த்தை கூறி அங்கே கொண்டு வந்திருக்கிறார்கள்.
நச்சல் பாரிகள் என்று ஒப்புக்கொண்டால் தான் மேலே பயிற்சிக்குச் செல்லலாம் என்று ராணுவ அதிகாரிகள் கூறுகிறார்கள். அப்போது வேறு வழியில்லாமல் கலையரசனும் பால சரவணனும் ஒப்புக்கொள்கிறார்கள்.அப்பகுதி மாநில சட்டமன்றத் தேர்தல் வருகிறது. வெளியே நக்சல் பாரிகளின் தொல்லைகள் .பிரச்சினையைச் சமாளிக்கச் சரணடைந்தவர்களை ராணுவ அதிகாரிகள்போலி என்கவுண்டர் செய்து பலி கொடுக்கத் திட்டமிடுகிறார்கள் .சரணடைந்த நக்சல் பாரிகள் பற்றிய செய்தி பத்திரிகையில் வருகிறது. இதைத் தெரிந்து கொண்ட உள்ளூர் போலீஸ்காரர்கள் கலையரசன் குடும்பத்தினரை சித்திரவதை செய்கிறார்கள்.ராணுவப் பிடியிலிருந்து எப்படியாவது வெளியேற வேண்டும் என்று கலையரசன் முயற்சி செய்கிறார் .ஆனால் எந்த வழி சென்றாலும் அந்த வழியை அடைக்கிறார்கள்.எப்படியும் தப்பித்து வெளியேற முயற்சி செய்யும் அவர், அந்த முயற்சியில் வெற்றி பெற்றாரா? ஊரில் உள்ள மக்களுக்கு என்ன ஆகிறது? என்பவைதான் 129.59 நிமிடங்கள் கொண்ட ’தண்டகாரண்யம்’ படத்தின் மீதிக்கதை.
ஆரண்யம் என்பது காடு எனப் பொருள்படும்.திருமறைக்காடு வேதாரண்யம் என்பது போல.தண்டகாரண்யம் என்பது தண்டனை அளிக்கும் அல்லது தண்டனைக்குரியவர்கள் வாழும் ஒரு காடு எனலாம் .இராமாயணத்தில் அசோகவனம் போல் .தண்டகாரண்யம் என்பதும் பேசப்படுகிறது..இராமர் 14 ஆண்டு கால வன வாசத்தின் போது, சீதை மற்றும் இலக்குவனுடன் சில காலம் தண்டகாரண்யத்தில் கழித்தார் என இராமாயண இதிகாசம் கூறுகிறது.
படத்தின் பெரும்பகுதிக் காட்சிகள் காடுகளிலும் ராஞ்சி ராணுவப் பயிற்சி மையத்திலும் நடைபெறுகிறது.காடும் காடு சார்ந்த பின்னணியிலும் கதை நிழ்வதால் நல்லதொரு கேன்வாஸாக இந்தப் படத்தின் பின்னணி அமைந்துள்ளது. காடு என்பது இயற்கை அழகு ,வளம் என்பது போக ஆபத்தும் குரூரங்களும் நிறைந்த ஒன்றாகப் படத்தில் தோற்றம் கொள்கிறது.
ராணுவப் பயிற்சி மையத்திலிருந்து தொடங்குகிறது கதை.அங்கே நண்பனின் டேப் ரெக்கார்டரில் ஓ ப்ரியா ப்ரியா பாட்டைக் கேட்கும் போது கலையரசன் உணர்ச்சி வசப்படுகிறார். தனது காதலி பிரியாவின் நினைவு வருகிறது. அதற்குப் பிறகு கலையரசனின் பார்வையில், முன்கதை விரிகிறது .
பய்யூர் வனச்சரகத்தில் வனச்சரக அதிகாரிகள் தற்காலிக ஊழியர்களை நடத்தும் விதமும், வன பாதுகாப்பு என்கிற பெயரில் நடக்கும் சட்ட விரோத அட்டூழியங்களும் காட்டப்படுகின்றன.வனச்சரக அதிகாரிகளின் அநியாயங்களைத் தட்டிக் கேட்கும் வாலிபராக தினேஷ் வருகிறார். இதனால் அலுவலக ரீதியான பிரச்சினைக்குள்ளான அருள்தாஸ், தினேஷைப் பழிவாங்க துடிக்கிறார். இங்கே உள்ளூரில் வன அதிகாரிகளுக்கும் தினேஷ் மற்றும் மக்களுக்குமான மோதல், சித்திரவதைகள் என்றால் அங்கே ராஞ்சியில் ராணுவப் பயிற்சி என்கிற பெயரில் கலையரசனும் பால சரவணனும் கொடுமையான சித்திரவதைகளில் சிக்கிக் கொள்வது என்று பதைபதைப்பை ஏற்படுத்துகின்றன காட்சிகள். நீரோட்டமான திரைக்கதையும் படத்தின் சுவாரஸ்யத்திற்குத் துணை நிற்கிறது.
முருகன் பாத்திரத்தில் கலையரசனும் சடையன் பாத்திரத்தில் தினேஷும்,கலையரசனின் காதலி பிரியாவாக வின்சுவும், தினேஷின் மனைவியாக ரித்விகாவும் நடித்துள்ளார்கள்.
முருகனாக நடித்துள்ள கலையரசன் பல்வேறு நடிப்பு வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தி ஸ்கோர் செய்துள்ளார்.சடையனாக வரும் தினேஷ் கேள்வி கேட்பவராகத் தொடங்கி ஒடுக்குதல்களை அனுபவித்துப் பிறகு திமிறி எழும் காட்சிகளில் கவனிக்க வைக்கிறார்.வின்சு ரேச்சல் சாம், ரித்விகா இருவரும் இழைய இழைய காதல் செய்கிறார்கள்.
வனச்சரக அலுவலராக வரும் அருள்தாஸ் வன்மம் கக்கும் கண்களோடு அந்த வில்லன் பாத்திரத்தில் வெளிப்பட்டுள்ளார்.
சிறிய உஸ்தாத் ஆக வரும் யுவன் மயில்சாமி மிடுக்கான பார்வை விரைப்பான தோற்றம் என உடல் மொழியிலும் நடிப்பிலும் பளிச்சிட்டுள்ளார்.அமிதாப்பாக வரும் சபீரின் பாத்திரம் ஆரம்பத்தில் எதிர்மறை நிழல் விழுந்ததாகத் தோற்றம் கொண்டு பிறகு அவரது குடும்ப்பப் பின்னணி தெரியும் போது அனுதாபத்தை அள்ளுகிறது.தினேஷ் – கலையரசன் ஆகியோரின் தந்தையாக நடித்துள்ள பெரியவர் நடிப்பில் மிளிர்கிறார்.பால சரவணன் தான் ஒரு நக்சலைட் என்று சிரிக்க வைப்பவர் ,என்கவுண்டர் செய்யப்படுவோம் என்கிற உயிர் பயத்தில் அலறும் போது கலங்க வைக்கிறார்.வேட்டை முத்துக்குமார், கவிதா பாரதி இருவருமே எதிர்மனம் கொண்டவர்களாக வருகிறார்கள்.
கதாபாத்திரங்களின் குணச்சித்திரங்களில் எந்த முரண்பாடும் இல்லாமல் அளவோடு வெளிப்பட்டுள்ளனர்.அந்த அளவிற்கு இயக்குநர் சரியாகச் சித்தரிப்பு செய்துள்ளார்.
ராணுவப் பயிற்சியில் நடக்கும் சித்திரவதைகள் ’டாணாக்காரன்’ படத்தை நினைவூட்டுகின்றன.கலையரசனும் – வின்சும் பேசும் வசனங்கள் பாத்திர எல்லை மீறும் காட்சிகள் .
ஜஸ்டின் பிரபாகரன் தனது இசையில் பல படிகள் மேலேறியிருக்கிறார்.பாடல்களிலும் பின்னணி இசையிலும் நேர்த்தி காட்டி உள்ளார்.’அடியே அலங்காரி’, ’காவக்காடே’ பாடல்கள் ஈர்க்கின்றன.
பிரதீப் காளிராஜா கதை மாந்தர்களோடு சங்பவங்கள் நிகழும் பின்புலத்தையும் துளியும் பிசகாமல் காட்சிப்படுத்தியுள்ளார்.அவரது ஒளிப்பதிவு காடுகளை அப்படியே கண்முன் நிறுத்திப் படத்திற்கு பெரும் பலமாக மாறியுள்ளது.
படத்தில் இதயத்தை திருடாதே படத்தின் ’ ஓ பிரியா பிரியா’ பாடலை உணர்ச்சிகரமாகக் கையாண்டு கலங்கி ரசிக்க வைத்திருக்கிறார்கள்.அதேபோல உச்சகட்ட காட்சியின் போது ‘மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும் விழியில் வழியும் உதிரம் முழுதும் இனி உன் சரிதம் எழுதும்’ என ’கண் சிவந்தால் மண் சிவக்கும்’ படப்பாடலின் வைரமுத்து வரிகளை ஒலிக்கவிட்டு அந்தக் காட்சிகளுக்கு உரம் சேர்த்துள்ளனர்.எளிய மக்களின் எழுச்சியைக் காட்டும் போது,’சில ஆயிரம் ஆயிரம் சூரிய தீபங்கள் பூமியில் தோன்றி விடும்; அட சாமரம் வீசிய பாமர ஜாதிகள் சாதனை கண்டு விடும் ‘என்று ஒலிக்கும் போது சிலிர்ப்பு வருகிறது.
முடிந்தவரை பாத்திரங்களில் எதார்த்தம், திரைக்கதையில் தொய்வில்லாத இறுக்கம், வசனங்களில் கூர்மை, பட உருவாக்கத்தில் முதிர்ச்சி என்று தன்னை வெளிப்படுத்தி ஒரு நேர்த்தியான படத்தை தர முயன்றுள்ள இயக்குநர் அதியன் ஆதிரையைப் பாராட்டாமல் இருக்க முடியாது. சபாஷ்.
மொத்தத்தில் எளிய மக்களின் வாழ்வியலையும் அதிகார வர்க்கத்தின் வஞ்சகத்தையும் வெளிப்படுத்தும் வகையிலும் காலகாலமாகத் தொடரும் இந்த அரசியல் அநியாய ஆட்டத்தைக் கேள்வி கேட்கும் வகையிலும் இந்தப் படைப்பு உருவாகி உள்ளது.
நிச்சயமாக இந்த . ‘தண்டகாரண்யம்’ திரையில் ஒரு வாழ்க்கை அனுபவத்தைப் பார்த்த திருப்தி அளிக்கும் படம் .
படத்தை நம்பி தியேட்டருக்கு போகலாம்