‘கா’ – விமர்சனம்
வழக்கமாக திரைக்கதை எழுதும் போது ஒன் லைன் ஒன்றை ரெடி பண்ணி விடுவார்கள். ஆனால், இதில் படத்தின் முதல் பாதியே ஒன் லைனில்தான் இருக்கிறது.
வைல்ட் லைஃப் புகைப்படக் கலைஞராக இருக்கும்.ஆண்ட்ரியா ஒரு வனப்பகுதியில் புகைப்படமெடுக்க செல்ல, வனக் காவலர் அர்ஜுன் சிங் உடன் செல்கிறார். அவ்வளவுதான் முதல்பாதி.
இதற்கும், ஆன்ட்ரியாவுக்கும் என்ன சம்பந்தம் என்பதைக் கடைசிவரை பொறுமையுடன் பார்த்தால் புரிந்து கொள்ளலாம்.
அதென்னவோ, செல்வராகவன் ஆனாலும் சரி, இந்தப்பட இயக்குனர் நாஞ்சில் ஆனாலும் சரி, ஒரு ஜீன்ஸ், டி ஷர்ட் கொடுத்து அலைய விட்டு விடுகிறார்கள்.
அது ஒன்றுதான் நம் பொறுமைக்கும் ஆறுதலாக அமைந்தது விடுகிறது. ஆண்ட்ரியாவின் பின்புறம், முன்புறம் காட்சிப்படுத்திய அளவில் கூட ஆண்ட்ரியாவின் பின்னணியோ, முன்னணியோ சொல்லப்படவில்லை. சர்வ சாதாரணமாக காட்டில் புழங்கி இரண்டு மூன்று பேரைப் போட்டுத் தள்ளுகிறார்.
ஆனால், அச்சு பிச்சான அர்ஜுன் சிங் தன் கேரக்டரை அருமையாக செய்திருக்கிறார். ஆனால், அவரையெல்லாம் ஒரு வனக் காவலராக எப்படித் தேர்ந்தெடுத்தார்கள் என்பது புரியவில்லை.
சலீம் கௌஸின் மெஜஸ்டிக்கான நடிப்புக்கு படத்தில் அதிக வேலையில்லை. அவர் ஏதோ புரட்சிப்படை தளபதி போன்ற வேடத்தில் இலச்சினை கொண்ட உடை எல்லாம் அணிந்து வருகிறார். அவர் உடன் வருபவர்களும் அப்படியே.
எல்லோருக்கும் மரண தண்டனை தரும், அவர் தனக்குத் தானே தண்டனையும் கொடுத்துக் கொள்வது சைக்கோ போன்ற அவர் வேடத்துக்கு பொருத்தம்தான்.
சுந்தர் சி.பாபுவின் இசைதான் இந்த மெத்தனக் கதையைக் கடத்த உதவி இருக்கிறது. அறிவழகன் ஒளிப்பதிவில் கானகம் , கழுவி விட்டார்போன்ற அழகுடன் காட்சி அளிக்கிறது.