‘டைனோசர்ஸ்’ – விமர்சனம்
எம்.ஆர்.மாதவன் இயக்கத்தில் உதய் கார்த்திக், ரிஷி, மாறா, சாய் ப்ரியா தேவா, மனேக்ஷா உள்ளிட்ட பல புதுமுகங்கள் நடித்திருக்கும் திரைப்படம் டைனோசர்ஸ்.
ஸ்ரீநிவாஸ் சம்பந்தம் தயாரித்துள்ள இப்படத்தை ரோமியோ பிச்சர்ஸ் வெளியிடுகிறது. போபோ சசி இப்படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில், ஜோன்ஸ் வி ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். வெளியீட்டுக்கு முன்பே கோலிவுட் வட்டாரத்தினரின் பாராட்டுகளை அள்ளி கவனம் ஈர்த்தது இப்படம்.
வரன் கேட்டு செல்லும் மணப்பெண் தன் நண்பனை பார்ப்பதை அறிந்து அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பது தொடங்கி, ‘புது மாப்பிள்ளை’ நண்பனுக்காக ஜெயிலுக்கு போவது வரை நட்புக்கு இலக்கணமாய் வாழும் மண்ணுவின் அண்ணன் தனா (ரிஷி).
சாலையார் கேங் என்றோ செய்த கொலைக்காக போலியாக ‘ஏரியா பசங்க’ சரண்டராகும் சூழல் ஏற்பட, நட்புக்கு எடுத்துக்காட்டாய் வாழும் மண்ணுவின் அண்ணன் தனா, புதிதாக திருமணமான தன் நண்பன் துரைக்கு பதிலாக ஜெயிலுக்கு போக நேர்கிறது.
தமிழ் சினிமாவில் வட சென்னை பேக் ட்ராப்பில் வாள் பிடித்த கேங்ஸ்டர் கதைகளை பல படங்கள் பேசியிருக்கின்றன. ஆனால் இது நிச்சயம் ஒரு புது அனுபவம். வட சென்னை, மெட்ராஸ் போன்ற படங்களுக்குப் பிறகு, அத்தனை புதுமுகங்களுடன், சென்னை தமிழும் லந்தும் வசனத்துக்கு வசனம் தெறிக்க, நிச்சயம் தவற விடக்கூடாத ராவான அனுபவம்!
“என் கையிலேயே பொருள கொடுக்கப் பாக்கறீங்களா” என எந்த கேங்கிலும் சிக்காமல் அட்ராசிட்டி செய்தபடி, உஷாராக வலம் வரும் நாயகன் மண்ணுவாக நடித்திருக்கும் உதய் கார்த்திக். தொடக்கத்தில் ‘இவர் ஓகேவா’ என கொஞ்சம் சந்தேகம் வரவழைத்தாலும், சென்னைபூர்வக் குடி நபராகவே மாறி தன் கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்து கதையையும் தாங்கி இருக்கிறார்.
தமிழ் சினிமாவின் வழக்கமான பொம்மை நாயகி வேடத்தில் சாய் ப்ரியா. ரசிகர்களை ஈர்ப்பதற்காக ஸ்கோப் இல்லை. மண்ணுவின் அம்மாவாக வரும் ஜானகி கதைக்கு தேவையான நடிப்பை வழங்கி இருக்கிறார்.
முதல் கொஞ்ச நிமிடங்களுக்குப் பிறகு சூடு பறக்க தட்டி எழும்பும் முதல் பாதி. கிட்டத்தட்ட 10 நிமிடங்களுக்கு நிகழும் அந்த மர்டர் ஸ்கெட்ச் காட்சி பரபரப்பின் உச்சம்! கோலிவுட்டின் தரமான இண்டர்வெல் ப்ளாக் காட்சிகளில் இது நிச்சயம் இடம்பெறும்.