ஓர் இனிய ஆச்சரியம். தென்றல் தீண்டுவது போல் ஒரு ஜாலியான படம். இயக்குநர் ராமின் முந்தைய படங்களினின்று நேரெதிராக உள்ளது இப்படம். ராமின் பிரதான கதாபாத்திரங்கள் பெரும்பாலும், சக மனிதர்கள் மீது கோபமும், அவநம்பிக்கையையும் கொண்ட கசப்பான மனிதர்களாக இருப்பார்கள். இப்படத்திலோ, கதாபாத்திரங்கள் அனைவருமே மிகவும் நல்லவர்கள். முக்கியமாக சக மனிதர்கள் மீது கோபமோ, பொறாமையோ இல்லாதவர்களாகவும்; தங்கள் மீது பச்சாதாபமோ, சுய கழிவிரக்கமோ கொண்டு இயலாமையை வெளிப்படுத்தாதவர்களாகவும் உள்ளனர். பார்ப்பவர்கள் எல்லாரையும் கெட்டவரெனும் துரியோதன மனக்கசடில் இருந்து, மனிதர்கள் அனைவருமே நல்லவர்கள் தானெனும் தருமனின் மனநிலைக்கு எப்படியோ தன்னை மேம்படுத்திக் கொண்டுள்ளார்.
அகில உலக சூப்பர் ஸ்டார் மிர்ச்சி ஷிவாவின் படத்தில் என்ன எதிர்பார்ப்போமோ படம் அதை ஏமாற்றாமல் அளிக்கிறது. ஆனால் இலக்கற்ற கவுன்ட்டர்களாக இல்லாமல், படத்தினோடும் கதாபாத்திரத்தினோடும் பொருந்தி மனம் விட்டுச் சிரிக்க வைக்கிறது. ஒரு கட்டத்தில் ஷிவா எது பேசினாலுமே பார்வையாளர்கள் ரசிக்கத் தொடங்கிவிடுகின்றனர். ஓரிடத்தில் நில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் மகனைத் தேடி ஓடி ஓய்ந்து கால்வலியுடன் அவர் படும்பாட்டில் பார்வையாளர்கள் சோர்ந்தாலும், ஷிவா அலட்டிக் கொள்ளாமல், ‘I am proud of you my son!’ என அசால்ட்டாய் டீல் செய்து அசத்துகிறார்.
சென்னையில் வாழும் கணவரையும் மகனையும் விட்டுப் பிரிந்து, கோவையில் சேலைக்கடை வைத்துள்ளார் ஷிவாவின் மனைவியாக வரும் கிரேஸ் ஆண்டனி. அவருடன் பணிபுரியும் இளம்பெண் கதாபாத்திரத்தைக் கூட மிக அற்புதமாக வார்த்துள்ளார் ராம். கடைக்குச் சேலை வாங்க வந்து விலையைக் குறைத்துக் கேட்கும், இரண்டே இரண்டு காட்சியில் வரும் பாட்டியின் கதாபாத்திரத்தைக் கூட மறக்க முடியாதபடிக்கு அற்புதமாக உருவாக்கியுள்ளார். சிறுவன் அன்பாக நடித்திருக்கும் மிதுல் ரயன் தூள் கிளப்பியுள்ளான்.

எப்பொழுதும் ராம் படத்தைக் கவிதையெனப் பார்வையாளர்களை உணரச் செய்வது அவரது படத்தில் இடம்பெறும் விஷுவலும் இசையும்தான். இப்படமும் அதற்கு விதிவிலக்கல்ல. ஒளிப்பதிவாளர் N.K.ஏகாம்பரமும், பின்னணி இசைக்குப் பொறுப்பேற்றுள்ள யுவனும் படம் பார்க்கும் அனுபவத்தை இனிமையாக்கியுள்ளனர். படம் நெடுகே நிறைய பாடல்கள் வருவது போல் ஒரு தோற்றம் ஏற்பட்டாலும், படத்தில் மூன்று பாடல்கள் மட்டுமே! மூன்றையுமே சிறுவனின் கோணத்தில் எழுதியுள்ளார் மதன் கார்கி. சந்தோஷ் தயாநிதியின் பாடலிசை, படத்தின் கலகலப்பைத் தக்கவைக்க உதவியுள்ளது.
இறுக்கமான தனிமையான உலகில் இருந்து பறந்து போக ஆசைப்படும் சிறுவன் அன்பு, படம் பார்க்கும் பார்வையாளர்களையும் சேர்த்துக் கொண்டு பறக்கிறான். மனதை லேசாக்கும் மிகச் சிறப்பானதொரு அனுபவத்தைத் தருகிறது படம்.