மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் வசந்த் (ஜீவா), தனது மனைவி ஆரண்யாவுடன் (பிரியா பவானி சங்கர்) புதிதாக
வாங்கியிருக்கும் கடற்கரை வில்லாவுக்கு விடுமுறைக்காகச் செல்கிறார். ஆட்கள் யாருமற்ற, தொடர் வீடுகளைக் கொண்ட அந்த வில்லாவில், சில அமானுஷ்ய விஷயங்கள் அடுக்கடுக்காக நடக்கின்றன.
அங்கிருந்து தப்பிக்க நினைத்தாலும் முடியாமல் அங்கேயே சுற்றிச் சுற்றி வருகிறார்கள், இருவரும். அங்கு அவர்களைப் போலவே இன்னொரு ஜோடி இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைகிறார்கள். அங்கிருந்து அவர்களால் தப்பிக்க முடிந்ததா? அந்த அமானுஷ்யங்கள் என்ன என்பதை விளக்குவதுதான் ‘பிளாக்’. ‘கோஹரன்ஸ்’ (Coherence) என்ற ஹாலிவுட் படத்தின் ரீமேக் என்றாலும் சில மாற்றங்களைச் செய்திருக்கிறார்கள், தமிழுக்காக. 60 வருடத்துக்கு முன், பூமியை நெருங்கும் முழுநிலவு (Supermoon) நாளில் ஒரு திகிலூட்டும் சம்பவம் நடக்கிறது. அதே போல அதிசய நிகழ்வாக இப்போதும் வந்திருக்கிற முழுநிலவு நாளில், என்ன நடக்கப் போகிறது என்பதைப் பேசுகிறது படம்.
1964-ம் ஆண்டு ஆரம்பிக்கும் கதை, நிகழ்காலத்தில் முன், பின் என காட்சிகள் செல்வது எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன. யாருமில்லாத வீட்டுக்கு ஓவியம் பரிசாக வந்திருப்பது, எதிர் வீட்டில் திடீரென தங்களைப் போலவே ஒரு ஜோடி இருப்பது, இரண்டு வசந்தும் நேருக்கு நேராக மோதிக்கொள்வது, ‘பிளாக்’ பகுதியை இருவரும் கடக்கும் போது நடக்கும் காலமாற்றம் என பரபரப் புடன் இருக்கை நுனிக்கு அழைத்துச் செல்கிறது, பாலசுப்ரமணியின் இயக்கமும் திரைக்கதையும்.
ஆனால், இந்த அமானுஷ்யங்களுக்குப் பின்னால் இருக்கும் விஷயங்களை, பெர்முடா டிரையாங்கிள், குவாண்டம் பிசிக்ஸ், பேரலல் ரியாலிட்டி என பல தியரிகளைப் பேசி விவேக் பிரசன்னா விளக்குவதைப் புரிந்துகொள்வது பெரிய சவால்தான். அதோடு, பார்வையாளர்களுக்கு அது குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது.
கோபக்காரனாகவும் அமானுஷ்யம் கண்டு அதிர்ச்சியடையும் போதும் நடந்ததை போலீஸிடம் விளக்க முடியாமல் தவிக்கும்போதும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார், ஜீவா. பயத்தில் தடுமாறுவது, சொன்ன பேச்சைக் கேட்காத ஜீவா மீது வரும் கோபம் என கதாபாத்தி ரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார் பிரியா பவானி சங்கர். போலீஸாக வரும் யோக் ஜேபி, இரண்டு மூன்று காட்சிகளில் மட்டுமே வரும் விவேக் பிரசன்னா ஆகியோரும் கவனிக்க வைக்கிறார்கள்.
பின்னணி இசையில் த்ரில்லருக்கான எபெக்ட்டை கொடுக்கக் கடுமையாக உழைத்திருக்கிறார் சாம்.சி.எஸ். பாடல் காட்சிகள் தேவையற்றத் திணிப்பு. கோகுல் பினோயின் ஒளிப்பதிவு, இரவு நேர திகிலை இயல் பாகவே தந்துவிடுகிறது. இரண்டு கேரக்டர்தான் மொத்த படமும் என்பதால், அதை சுவாரஸியமாகக் கொடுக்க முயன்றிருக்கிறது பிலோமின் ராஜின் படத்தொகுப்பு.
மொத்தத்தில் இந்த பிளாக் திரைப்படம் எப்படி இருக்கிறது என்றால் இயக்குனர் திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் இந்த பிளாக் எல்லோரையும் கவரும்.