வேலியே பயிரை மேய்ந்த கதை மாதிரி தமிழ் சினிமாவில் நிறைய படங்கள் வந்திருந்தாலும் இந்த படம் உழைக்கும் வர்க்கத்தின் படம்.விதார்த் கதாநாயகனாக என் ஆர் ரகுநந்தன் இசையமைக்க கஜேந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் மருதம்.
விதார்த், சொந்தமாக இயற்கை விவசாயம் செய்யும் ஒரு குறு விவசாயி. தனது மனைவி ரக்ஷனா மற்றும் மகனுடன் எளிமையான, சந்தோஷமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். விவசாய பொருட்களின் மூலம் கிடைக்கும் வருவாயே ஆதாரம். இந்நிலையில், மகனை தனியார் பள்ளியில் சேர்ப்பதற்காக தனது நிலத்தை அடமானம் வைக்கிறார். அதன்பிறகு சில நாட்களில், அவரது நிலத்தின் பெயரில், வங்கியில் வாங்கிய கடனுக்காக, வங்கி இன்னொருவருக்கு அந்த நிலத்தை ஏலத்தில் விற்றது தெரிய வருகிறது. அதிர்ச்சியில் உறைந்து போகும் விதார்த், கடுமையான நெருக்கடிக்கு ஆளாகிறார். இது குறித்து வங்கிக்கு செல்லும் அவர், கடன் வாங்கியதற்கான ஆவனங்கள் அனைத்தும் சரியாக இருப்பதை பார்த்து மேலும் பேரதிர்ச்சி அடைகிறார். என்ன நடந்தது? இதன் பின்னணி என்ன? என்பது தான் ‘மருதம்’ படத்தின், பாமரர்களும் உணரும் வண்ணம் படைக்கப்பட்ட , ஒரு சாமனிய விவசாயியின் சட்டப்போராட்டம்!.
கதையை நகர்த்திச்செல்லும் பெரும் பங்கும், பொறுப்பும் நாயகன் விதார்த்துக்கு. வழக்கமான தனது திறமையான நடிப்பின் மூலம், அதை சிறப்பாகவே செய்திருக்கிறார். அவரின் மனைவியாக நடித்திருக்கும் ரக்ஷனாவும் குறை சொல்லமுடியாத வகையில் இயல்பாக நடித்திருக்கிறார். மோசடி மன்னன், வங்கி மேலாளராக நடித்திருக்கும் இயக்குநர் சரவண சுப்பையா, விதார்த்துக்கு சட்ட உதவிகள் செய்து கொடுக்கும் இயக்குநர் ‘தினந்தோறும்’ நாகராஜ், அருள்தாஸ், மேத்யூ வர்க்கீஸ், ‘லொள்ளு சபா’ மாறன் உள்ளிட்டோரும் குறிப்பிடும்படி நடித்துள்ளனர்.
எடிட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால், தொய்வாக செல்லும் காட்சிகளை தவிர்த்திருக்கலாம். குறிப்பாக, முதல் காட்சியில் தற்கொலை செய்யும் காட்சியை பொருத்துவதற்கு வேறு இடத்தில் வாய்ப்பிருந்தும் அதை தவிர்த்திருக்கிறார்கள். இப்படி சில குறைகள் இருந்தாலும், ‘மருதம்’ திரைப்படத்தை மொத்தமாக பார்க்கும் போது, ஒரு நல்ல படைப்பாகவே இருக்கிறது.
தமிழ் சினிமாவில் சில நேரங்களில் சில நல்ல படங்கள் வருவதுண்டு அந்த வரிசையில் வந்திருக்கும் மிக மிக நல்ல பணம் மருதம்.