சமீப காலங்களாக நல்ல பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய ரசிக்கும்படியான படங்களை கொடுத்து கவனம் பெற்று வரும் வளர்ந்து வரும் நடிகர் அசோக் செல்வன் தற்பொழுது எனக்குத் தொழில் ரொமான்ஸ் படம் மூலம் மீண்டும் களத்தில் குதித்து இருக்கிறார். கிட்டத்தட்ட நீண்ட வருடங்களாக அவ்வப்போது ரிலீஸ் என்ற பெயருடன் போஸ்டர்கள் வெளியாகி பின்பு தள்ளிப் போய்க் கொண்டே இருந்த திரைப்படம் தற்பொழுது ஒரு வழியாக ரிலீஸ் ஆகி இருக்கிறது.
கிட்டத்தட்ட பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன் இருந்த ஒரு டிரெண்ட்டில் உருவான ஒரு திரைப்படமாக இந்த எனக்கு தொழில் ரொமான்ஸ் திரைப்படம் உருவாகி இருக்கிறது. பெரிதாக வேலை வெட்டி இல்லாத ஒரு நாயகன் வேலை செய்யும் நாயகியை துரத்தி துரத்தி காதலிக்கிறார். நாயகி ஒரு கட்டத்தில் நாயகனை காதலிக்க ஆரம்பிக்கிறார் இருவரும் சேரப்போகும் சமயத்தில் அவர்களை சேரவிடாமல் சில பிரச்சனைகள் வந்து சேர்கிறது. அதை அவர்கள் எப்படி தீர்த்து மீண்டும் ஒன்று சேர்ந்தனர் என்ற அரதபழசான ஒரு கதையை வைத்துக் கொண்டு அதை இக்கால ரசிகர்கள் ரசிக்கும்படி கொடுக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் பாலாஜி கேசவன். சுந்தர் சி, கிரேசி மோகன் படப் பாணியில் உருவாகி இருக்கும் இத்திரைப்படம் ஏனோ அவர்களின் படங்கள் கொடுத்த இம்பேட்டை இப்படம் கொடுக்க மறுத்து இருக்கிறது. பொதுவாக சுந்தர் சி கிரேசி மோகன் படங்கள் என்றாலே சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது. அது எந்த காலகட்டத்தில் வெளியானாலும் அந்தந்த காலகட்ட ரசிகர்களை நன்றாக ரசிக்க வைத்து சிரிக்க வைத்து கொண்டாடும் படமாகவே அமையும். ஆனால் இந்த படமும் அவர்களின் கதை போக்கையும் திரைக்கதை நுட்பத்தையும் கையில் எடுத்துக் கொண்டாலும் திரைக்கதையில் ஏனோ சற்றே பல ஆண்டுகள் பின்தங்கிய டிரெண்டை இப்படம் கடைபிடித்து இருப்பதால் ஆங்காங்கே பல இடங்களில் ரசிக்க வைத்தாலும் சில இடங்களில் அயர்ச்சியை கொடுப்பதையும் தவிர்க்க முடியவில்லை. இந்த படம் பல ஆண்டுகளுக்கு முன் உருவான ஒரு திரைப்படம். அது அந்த சமயத்தில் வெளியாகி இருந்தால் கூட நல்ல வரவேற்பை பெற்று இருக்கும். ஆனால் காலம் கடந்து இப்படம் வெளியாகி இருப்பது படத்திற்கு சற்று பாதகமாக அமைந்திருந்தாலும் குடும்பங்களுடன் சென்று எந்த ஒரு லாஜிக்கை பற்றியும் யோசிக்காமல் வெறும் பொழுதுபோக்கை மட்டுமே நினைத்துக் கொண்டு செல்லும் ரசிகர்களுக்கு இந்த படம் சற்று ஆறுதலான படமாகவே அமைந்திருக்கிறது. குறிப்பாக முதல் பாதையை காட்டிலும் இரண்டாம் பாதியில் நன்றாகவே காட்சிப்படுத்தப்பட்டு நல்ல சிரிக்கும்படியான காமெடி காட்சிகள் மூலம் படத்தை கரை சேர்த்து பார்ப்பவர்களுக்கும் நிறைவை கொடுத்திருக்கிறது. காதல் காட்சிகளை காட்டிலும் காமெடி காட்சிகளுக்கு நன்றாக முக்கியத்துவம் கொடுத்திருப்பதால் கூட்டமாக சென்று ரசிப்பதற்கு ஏதுவாக அமைந்திருக்கிறது.
நிவாஸ் கே பிரசன்னா இசையில் பாடல்கள் ஓகே. பின்னணி இசை காதல் காட்சிகளுக்கு சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறது. அதேபோல் காமெடி காட்சிகளிலும் பழைய இளையராஜா மியூசிக்கை பயன்படுத்தி ஆங்காங்கே சிரிக்கவும் வைத்திருக்கிறார். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவில் குடும்பம் மற்றும் நண்பர்கள் சம்பந்தப்பட்ட காதல் மற்றும் காமெடி காட்சிகள் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
படம் பழைய டிரெண்டில் காமெடி கலந்த சென்டிமென்ட் காதல் படமாக உருவாகி ரசிகர்களை ரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறது. கதையும் காட்சிகளும் பழையதாக இருந்தாலும் அவை ஓரளவு போரடிக்காமல் அப்படியே நகர்ந்து சென்று நிறைவான காமெடி படமாக முடிந்திருப்பது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. மற்றபடி லாஜிக்கை மறந்து பொழுதுபோக்கிற்காக மட்டும் வருபவர்களுக்கு இப்படம் நிறைவு கொடுக்கும்.