நடிகர் வெங்கட் ராகுல், ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங், படத் தொகுப்பாளர் ஶ்ரீஜித் சாரங் மூவரின் தயாரிப்பில் இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் ‘எமகாதகி.’
ஒரு பெண் முதன்மை நாயகியாக நடிக்கும் இப்படத்தில் ரூபா கொடுவயூர் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நரேந்திர பிரசாத், கீதா கைலாசம், R.ராஜூ, சுபாஷ் ராமசாமி, ஹரிதா, பொற்கொடி, ஜெய், பிரதீப், ராமசாமி ஆகியோருடன் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.
சுஜித் சாரங், ஸ்ரீஜித் சாரங், இயக்கம் – பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன், ஒளிப்பதிவு – சுஜித் சாரங், படத் தொகுப்பு & கலரிஸ்ட் – ஸ்ரீஜித் சாரங், இசை – ஜெசின் ஜார்ஜ், கலை இயக்கம் – ஜோசப் பாபின், ஒலி வடிவமைப்பு – Sync Cinema, ஒலிக் கலவை – அரவிந்த் மேனன், VFX. Paper plane vfx, சண்டை பயிற்சி இயக்கம் – முரளி.G ., பத்திரிகை தொடர்பு – சதீஷ் (AIM), விளம்பர வடிவமைப்பு – சிவகுமார் (Siva digital art)

ஒரு சந்திப்பில் இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் கதையினை கேட்ட இந்த மூன்று நண்பர்களுக்கும் மிகவும் பிடித்துப் போகவே, இப்படத்தை தாங்களே இணைந்து தயாரிக்க முன்வந்துள்ளனர். சினிமா மீதான உன்னத காதலில், ஒரு தரமான படத்தை தரும் எண்ணத்தில், இப்படத்தை தயாரித்துள்ளனர்.
புதுமுகங்களால் உருவாகும் இப்படம் எந்தவித சமரசமுமின்றி முழுக்க, முழுக்க கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. ரசிகனை அடுத்தத் தளத்திற்கு எடுத்து செல்லும் தரமான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.
தஞ்சாவூரை சுற்றிய கிராமங்களில் இப்படத்தின் முழுப் படப்பிடிப்பும் நடத்தப்பட்டுள்ளது. கிராமத்து பின்னணியில் நடக்கும், சூப்பர் நேச்சுரல் மிஸ்டரி திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.
உயர் சாதியினரும் ஒடுக்கப்பட்ட மக்களும் இணைந்து வாழும் ஒரு கிராமம் அது. அந்த ஊரின் கோவில் கும்பிடு துவக்கிவிட்டார்கள். காப்பும் கட்டிவிட்டார்கள். அந்த நேரத்தில் அந்த ஊர் தலைவரின் மகள் திடீரென்று ஒரு நாள் இரவில் தற்கொலை செய்து கொள்கிறார்.
இந்த விவகாரம் போலீசுக்கு போனால் குடும்பம் மானம் போய்விடும். அதோடு போஸ்ட்மார்ட்டம் செய்வார்களே என்று பயந்து போய் ஏற்கனவே அந்த பெண்ணுக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்தது ஊரே அறிந்த விஷயம் என்பதால் மூச்சுவிட கஷ்டப்பட்டு இறந்து விட்டதாக பொய் சொல்லி ஊராரை நம்ப வைக்கிறார்கள் பெண்ணின் குடும்பத்தினர்.
சடங்கிற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், பெண்ணின் உடலை சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்வதற்காக தூக்க முயற்சிக்கும்போது அது முடியாமல் போகிறது. யாராலேயும் அந்த உடலைத் தூக்க முடியவில்லை. கட்டிலோடு சேர்ந்து தூக்குவதற்கும் முயல்கிறார்கள். அப்பொழுது கட்டில் உடைந்து தூக்கி அவர்களுக்கு காயம் ஏற்பட்டதுதான் மிச்சம்.
இந்த விவகாரம் ஊர் முழுக்க பரவ ஊர் மக்கள் அனைவரும் ஒருவர் ஒருவர் பேசிக் கொள்கிறார்கள். அந்தப் பெண்ணின் ஆவி செய்கின்ற வேலை இது என்று அவர்கள் பேசி கொள்கிறார்கள். இந்த நேரத்தில் திடீரென்று பிணம் எழுந்து உட்கார பயந்து போன ஊர் மக்கள் ஒரு பூசாரியை வரவழைக்கிறார்கள். அவரும் வந்து தன்னுடைய சக்தியை பயன்படுத்தி செய்து பார்த்து, அதில் தோல்வி அடைந்து ஊரைவிட்டே ஓடுகிறார்.
இதற்குள்ளாக தகவல் தெரிந்து போலீஸூம் ஓடி வருகிறார்கள். ஒரு தற்கொலையை எப்படி நீங்கள் போலீசுக்கு சொல்லாமல் செய்யலாம் என்று கண்டிப்பவர், “நாங்கள் இதை சட்டப்படிதான் செய்வோம்” என்று சொல்லி பாடியை போஸ்ட்மார்ட்டத்திற்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்கிறார்கள். இப்பொழுதும் அந்த பிணத்தைத் தூக்க முடியவில்லை.
இந்த நேரத்தில் அந்தப் பெண் எப்படி இறந்தார் இறந்தார் என்கின்ற தகவலும் மக்களுக்கு தெரிய வர அந்தக் குடும்பத்தினர் மீது கோபம் கொள்கிறார்கள்.
இதற்குப் பின் என்ன நடந்தது அந்தப் பெண்ணின் இறுதிச் சடங்கு முறைப்படி நடந்ததா இல்லையா அந்த பெண்ணின் சாவுக்கு உண்மையான காரணம் என்ன… என்பதெல்லாம் மீதமுள்ள திரைக்கதை.
ஒரு அழகான சிறுகதை வடிவத்தில் இந்தப் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர். அதற்காக அவருக்கு நமது பாராட்டுக்கள். திரைக்கதையை நான் லீனியர் முறையில் கொஞ்சம் கொஞ்சமாக முடிச்சவளிப்பதை போல செய்து.. ஏன் எதனால் இந்தப் பிரச்சனை எழுந்தது… அந்தப் பெண்ணின் தற்கொலைக்கு என்ன காரணம்… எத்தனை பேர் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்… என்பதை ஒவ்வொன்றாக முடிச்சவிருக்கும் பொழுது நமக்கே கொஞ்சம் பரபரப்பாக இருக்கிறது.
ரூபாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஒரு பிணமாக நடிப்பது என்பது மிக, மிக கஷ்டமான ஒரு விஷயம். ஆனால், இவ்வளவு காட்சிகளில் ஒரு பிணமாக நடித்திருக்கிறார் என்றால் நிச்சயம் ஒரு பாராட்டுக்குரியதுதான். மற்ற வசன காட்சிகளில்கூட மிகவும் இயல்பாக நம்ம பக்கத்து வீட்டுப் பெண் போன்ற தோற்றத்துடன் நடித்திருக்கிறார். அவருடைய சிம்ளியான அழகு நிச்சயம் ரசிகர்களை வெகுவாக கவரும்.
இவருக்கு அடுத்து படத்தில் பெரிதும் கவர்வது ஹீரோயினின் அம்மாவாக நடித்திருக்கும் கீதா கைலாசம். பெண்ணின் உடலைப் பார்த்தவுடன் அப்படியே பித்துப் பிடித்தது போல, சிலையாக அமர்ந்து… ஒரு சொட்டு கண்ணீர்கூட விடாமல் “விட்டுட்டு போயிட்டா.. விட்டுட்டு போய்ட்டா..” என்று புலம்பிக் கொண்டே இருப்பவர் கிளைமாக்ஸ் காட்சிகள் தன்னுடைய தவறை உணர்ந்து ஓடி வந்து மகள் காலில் விழுந்து அழுகின்ற பொழுது நிச்சயம் கண் கலங்காமல் யாராலும் இருக்க முடியாது. அப்படி ஒரு உருக்கமான ஒரு நடிப்பை காண்பித்து இருக்கிறார் கீதா கைலாசம். பாராட்டுக்கள்.

வெளிச்சம், இருண்மை என்று மாறி மாறி வருகின்ற காட்சிகளாக வந்து கிராமத்து பின்னணியில் ஒரு அழகான ஒளிப்பதிவை.. கண்ணுக்கு குளிர்ச்சியான ஒளிப்பதிவை சேர்த்து கொடுத்திருக்கிறார். அதற்காக அவருக்கு நமது பாராட்டுக்கள்.
ஒரு அற்புதமான சோகப் பாடல் இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த ஆண்டின் மிகச் சிறந்த சோக பாடலாக அதை நாம் எடுத்துக் கொள்ளலாம். அந்தப் பாடல்களின் மாண்டேஜ் காட்சிகளிலும், இழவு வீட்டில் நடைபெறுகின்ற அத்தனை விஷயங்களையும் மிகவும் கச்சிதமாக காண்பித்திருக்கிறார் இயக்குநர்.
நான் லீனியர் முறையில் சில காட்சிகள் ஏற்கனவே நடத்தவைகளாக காட்டப்படுகின்ற பொழுது அதனுடைய வித்தியாசத்தை நாம் உணரும் வகையில் படத் தொகுப்பாளர் கச்சிதமாக படத்தை நறுக்கி கொடுத்து இருக்கிறார். அந்த வகையில் அவருக்கு பாராட்டுக்கள்.
‘உருவகப்படுத்துதல்’ என்கின்ற கதை சொல்லல் முறையின் அடிப்படையில் இந்தப் படத்தின் கதையை இயக்குநர் வடிவமைத்து இருக்கிறார். அதனால் இப்போதைய 2 கே கிடேஸ்களுக்கு தோன்றும் சாதாரண சின்ன எடையுள்ள இவரை ஏன் தூக்க முடியவில்லை லாஜிக் இடிக்கிறது என்பார்கள்.
ஆனால், உண்மையில் இந்தக் கதை ஒரு பேய் கதைதான். இறந்து போன அந்தப் பெண்ணின் ஆத்மா, தன்னுடைய இறப்புக்கு யார் காரணம் என்பதை தெரியாமல் இவளுடைய உடலைவிட்டுப் போக மாட்டேன் என்று அடம் பிடிப்பதை போல ஒரு சிறுகதை வடிவத்தில் இந்த திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர்.
கடைசியாக அந்தப் பெண்ணின் தாயார் அந்தப் பெண்ணின் இறப்புக்கு யார் காரணம் என்பதை வெளிப்படையாகச் சொன்ன பின்புதான் உண்மையை அறிந்து கொண்டு சரி.. இப்போது நான் என் ஆன்மாவை கை விடுகிறேன் என்று சொல்லிவிட்டு அந்த அம்மாவின் மீது அவர் விழுந்து விழுகிறார். அதற்கு பின்புதான் அவரை தூக்கவே முடிகிறது.
ஆக தன்னுடைய இறப்புக்கு காரணம் யார் என்பது அறிந்து கொள்ள நினைக்கும் ஒரு சராசரி பெண்ணின் விருப்பமாக இந்தப் படத்தை நாம் எடுத்துக் கொள்ளலாம். அந்த வகையில் எடுத்தால் நிச்சயம் இந்தப் படத்தை ஒரு டிபிக்கலான பேய் படம் என்றுதான் சொல்ல வேண்டும்.
அதேசமயம் சாதிய பாகுபாடுகளை சுட்டிக் காட்டி எவ்வளவுதான் படித்தவர்களாக இருந்தாலும் இன்னமும் கிராமப் புறங்களில் சாதி வெறி எந்த அளவுக்கு தலைவிரித்து ஆடுகிறது என்பதையும் இந்தப் படத்தில் இயக்குநர் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறார்.
பொதுவாக ஆவிகள் ஆன்மா சாந்தியாகாமல் சுற்றுவதால்தான் அந்த ஆவிகளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு பலவிதமான பிரச்சனைகள் ஏற்படும் என்பார்கள். அப்படி ஒரு கருத்தினை முன் வைத்து இந்தப் படத்தில் இயக்குநர் செய்திருக்கும் இந்த வித்தியாசமான கதை நிச்சயம் நம்மைப் பெரிதும் கவரும்.