அடையாறில் உள்ள இளைஞர் வெற்றி சினிமாவில் டைரக்டராக வேண்டும் என்ற ஆர்வத்துடன் சினிமா கம்பெனிகளுக்கு படை எடுத்து வருகிறார். தம்பி வெற்றிக்கு போதை பழக்கம் வேறு இருக்கிறது. (இதை போட்டால் தான் கற்பனை கட்டுக்கடங்காமல் வரும் என்ற விளக்கம் வேறு) ஒரு பிரபல டைரக்டரிடம் கதை சொல்ல, அந்த கதையை திருடி விடுகிறார் டைரக்டர். இந்த வெறுப்பிலும், கோபத்திலும் இன்னும் அதிக அளவில் போதை மருந்துகள் உட்கொள்கிறார் இளைஞர்.
ஆசிரியர் வசந்த் தன் மகள் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் செய்கிறார். இதை ஒரு வித்தியாசமான அணுகுமுறை கொண்ட காவல் துறை அதிகாரி விசாரணை செய்கிறார்.
இந்த மூன்று கதைகளையும் இறுதியில் ஒரு புள்ளியில் சேர்த்திருந்தால் படம் ஒரு நல்ல திரில்லராக வந்திருக்கும். ஆனால் மூன்று சம்பவங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதை படம் ஆரம்பித்து ஒரு சில காட்சிகளிலேயே சொல்லி விடுவதால் படத்தின் மீதான சுவாரசியம் குறைந்து விடுகிறது.
படத்தின் இறுதியில் ஒரு மெசேஜ் இருக்கிறது. இந்த மெசேஜ் காட்சியை பார்ப்பதற்கு முன் நிறைய தவறான விஷயங்களை பார்க்க வேண்டி உள்ளது. இப்போது வரும் படங்களில் போதை மருந்துகள் பயன்படுத்துவதை சர்வ சாதாரணமாக காட்டுகிறார்கள். இப்படத்தில் போதை மருந்துகளை பயன்படுத்தும் விதம் பற்றி டெமோவே செய்கிறார்கள். தமிழ்நாட்டு இளைஞர்களிடம் போதை பழக்கம் வளர்ந்து வரும் இந்த சூழ்நிலையில் இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இது போன்ற காட்சிகளை வைக்கலாமா? (அடுத்த படத்திலாவது பொறுப்புணர்வோடு செயல்படுங்க தம்பி)
இசையும், ஒளிப்பதிவும் பிளஸ் பாயிண்ட். .அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்பை ஏற்படுத்தியிருந்தால் ‘நிறங்கள் மூன்று’ அழகான ஓவியமாக வந்திருக்கும்.