எழில் பெரியவேடி இயக்கத்தில் ‘பராரி’ என்ற படம் வந்திருக்கிறது. அறிமுக ஹீரோயின் சங்கீதா பிரமாத நடித்திருக்கிறார். 2000 பேரை ஆடிஷன் செய்து விட்டு அதில் ஒருவராக சங்கீதாவை டைரக்டர் தேர்வு செய்திருக்கிறார். தேர்வு செய்தது வீண் போகவில்லை. ஒரு வட மாவட்ட கிராமத்து பெண்ணாக நன்றாக நடித்திருக்கிறார்.
பா. ரஞ்சித், மாரி செல்வராஜ் இன்னும் சில பேர் சொல்லும் ஜாதிய – சமூக பின்புலம் கொண்ட கதைதான். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஆதிக்க ஜாதி என்று சொல்லிக்கொள்ளும் ஒரு பிரிவினர், மற்றொரு பிரிவு மக்கள் பேரில் ஜாதி ரீதியாக பல்வேறு அடக்குமுறைகளை மேற்கொள்கிறார்கள். வேலை இல்லாத சில மாதங்களில் இரு பிரிவு மக்களும் கர்நாடகாவுக்கு வேலைக்கு செல்கிறார்கள். அங்கே சந்திக்கும் பிரச்சனைகளை சொல்வது தான் பராரி.
படத்தின் முதல் பாதி நாம் செய்தி தாள்களில் படித்த ஜாதி ரீதியான அடக்கு முறைகளை பற்றி பேசுகிறது. இரண்டாம் பாதி பெங்களூரு ஜூஸ் தொழில் சாலையில் தமிழர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை சொல்கிறது. முதல் பாதியைவிட இரண்டாம் பாதி நம்மை ஈர்க்கிறது. வெளி மாநிலத்தில் தமிழன், வெளிநாட்டில் இந்தியன், சொந்த ஊர்ல மட்டும் ஏன் இந்த ஜாதி பெருமை? என்று சிறப்பான கதையில் நெகிழ்வான கிளைமாக்ஸ் காட்சியில் புரிய வைத்திருக்கிறார் டைரக்டர். “ஒரே தண்ணியை குடிக்கிறோம், ஒரே சாமியை கும்பிடுறோம், நீயும் கூலி, நானும் கூலி. நடுவுல ஏன் இந்த ஜாதி?” போன்ற வசனங்கள் நம்மை யோசிக்க வைக்கின்றன.
ஹீரோ ஹரி, வில்லன் புகழ் இருவரும் கேரக்டரை உள் வாங்கி நடித்திருக்கிறார்கள். பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் நாடக துறை பேராசிரியர் ராஜூ, நாடக துறை ஆராய்ச்சி மாணவர் பிரேம் நாத் என நாடக பின்புலம் கொண்ட நபர்களை தேர்ந்தெடுத்து நடிக்க வைத்திருக்கிறார் டைரக்டர். பிரேம் நாத் ஜாதி திமிர் கொண்ட நபராக சிறப்பாக நடித்திருக்கிறார். “ஜாதி, மதம், மொழி என்ற பெயரில் பலர் உலகம் முழுவதும் நிர்வாணம் ஆக்க படுகிறார்கள். இது போல் நடப்பதற்கு பின்னால் அரசியல் தான் நிர்வாணம் ஆக நிற்கிறது” என்ற அரசியல் வசனம் இந்தியாவில் நடந்த பல்வேறு விஷயங்களை நினைவு படுத்துகிறது.
படத்தின் இறுதிக் காட்சி ஒட்டுமொத்த திரைப்படத்தையும் தூக்கி நிறுத்துகிறது. எதற்குமே தீர்வு வன்முறை அல்ல என்கிற உன்னத கருத்தை உணர்த்துகிறது இந்த பராரி.