தம்பி ராமையாவின் வித்தியாசமான நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ராஜாகிளி.
மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான இல்லத்தை நடத்தி வரும் சமுத்திரக்கனி, மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், குப்பையில் இருப்பதை சாப்பிடும் தம்பி ராமையாவை அரவணைத்து தனது இல்லத்திற்கு அழைத்து வந்து பராமரிக்கிறார். அப்போது அவரிடம் இருக்கும் ஒரு டைரியை படிக்கும் போது அவரது வாழ்க்கையைப் பற்றி தெரிந்துக் கொள்கிறார். பெரும் செல்வந்தராகவும், தொழிலதிபராகவும் பல துறை தொழில்களை மேற்கொண்டவராக இருந்தவர் தம்பி ராமையா.
அதற்கான நடை, உடை மற்றும் பாவனை என வித்தியாசம் காண்பித்து நடித்துள்ளார். அதன்பின் பெண்கள் மீதான மோகம் உடைய காட்சிகளில் சிறிது கோமாளித்தனத்துடன் சலிப்பை ஏற்படுத்துகிறார்.
தம்பி ராமையாவின் இரண்டாவது மனைவியாக நடித்திருக்கும் சுபா, இளம் காதலியாக நடித்திருக்கும் சுவேதா ஸ்ரீம்ப்டான், காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் அருள்தாஸ், பழ கருப்பையா, டேனியல் அனி போப், பிரவீன் குமார்.ஜி, ரேஷ்மா, வெற்றிகுமரன், விஜே ஆண்ட்ருஸ், மாலிக், , கிரிஷ், கிங் காங் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
ஒரு செல்வந்தரின் வாழ்க்கை எப்படி அவர்களது இல்லங்களில் நடமாடும் சந்தேக பேய்களால் எப்படி பிரச்சனைகள் உருவாகிறது. ஆண்களின் சபலம் புத்தி எப்படி சறுகலை கொண்டு வருகிறது என்பதை மிகவும் அழுத்தமான கதையாக எழுதியுள்ளார் தம்பி ராமையா. அதனை திறம்பட காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குனர் உமாபதி ராமையா
இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கும் தம்பி ராமையாவின் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையமைத்திருக்கும் சாய் தினேஷ் பணி சிறப்பு.
ஒளிப்பதிவாளர்கள் கேதார்நாத் – கோபிநாத் ஆகியோரது கேமரா, முருகப்பனின் பணக்கார வாழ்க்கையையும், பசி மிகுந்த வாழ்க்கையையும் எதார்த்தமாக காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது.
மொத்தத்தில் தம்பி ராமையாவின் கனவு படமான இந்த ராஜா கிளி எம்ஆர் ராதா நடித்த படங்களை ஞாபகப்படுத்தி இருந்தாலும் இவரின் முயற்சியை பாராட்டலாம்.