பயாஸ்கோப் – விமர்சனம்
தமிழ் சினிமாவில் வெங்காயம் படத்தின் மூலம் வெகுவாகப் பேசப்பட்ட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார். நரபலி, ஜோதிடம் உள்ளிட்ட மூடநம்பிக்களுக்கு எதிரான உரத்தக் குரலை தன் எதார்த்த சினிமாவின் மூலம் வெளிப்படுத்திய கலைஞன்.
சங்ககிரி ராஜ்குமாரின் அடுத்த முயற்சிதான் இந்த பயாஸ்கோப். கிராமத்தில் உள்ள உற்றார் உறவினர் துணையுடன் ஒரு படம் எடுக்கமுடியுமா என்ற கேள்விக்குப் பதில் தருகிறது இந்தப் படம். அதிலும் சோதிடத்துக்கு எதிரான கருத்தையே அழுத்தமாக வலியுறுத்தும் இயக்குநரின் முயற்சிக்குப் பாராட்டுகள்.
தாத்தா பாட்டிகளாக படத்தில் கலகலப்பூட்டும் வெள்ளையம்மாள், முத்தாயி, முத்துசாமி, குப்புசாமி ஆகியோரின் நடிப்பும் பேச்சும் நகைச்சுவையின் உச்சம் என்று சொல்லலாம். வெள்ளந்தியாகப் பேசும் அவர்களுக்கு உரையாடல்கள் படத்தை சுவாரசியமாக்குகின்றன. சத்யராஜைக்கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை.
கூத்துக்கலைஞராக வெங்காயம் படத்தில் நடித்த எஸ்எம். மாணிக்கம், இந்தப் படத்திலும் மகனுக்கு உதவும் அன்புள்ள தந்தையாக வருகிறார். இயக்குநரின் நிஜமான தந்தையும் அவர்தான். சொந்த நிலத்தை அடகுவைத்து படமெடுத்து ஜெயிக்கிறார்களா என்பதுதான் முழுநீளப் படமாக விரிகிறது.
தாஜ்நூரின் இசை படத்திற்குப் பலமாக அமைகிறது. மலை கிராமங்களின் பேரழகை ஒளிப்பதிவில் அள்ளித்தந்திருக்கிறார் முரளி கணேஷ். சின்ன பட்ஜெட்டில் இப்படியொரு அசலான படத்தை எடுக்கமுடியும் என்று நிரூபித்திருக்கிறார் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார்.