சொர்க்கவாசல் – விமர்சனம்
திங்க் ஸ்டுடியோஸ் மற்றும் ஸ்வைப் ரைட் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள படம் தான் சொர்க்கவாசல். அறிமுக இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத் இந்த படத்தை எழுதி இயக்கியுள்ளார். தமிழ் பிரபா மற்றும் அஸ்வின் ரவிச்சந்திரன் கூடுதல் எழுத்தாளர்களாக பணியாற்றி உள்ளனர். பிரின்ஸ் ஆண்டர்சன் ஒளிப்பதிவு செய்ய, செல்வா எடிட்டிங் மற்றும் கிறிஸ்டோ சேவியர் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளனர். சொர்க்கவாசல் படத்தில் RJ பாலாஜி, செல்வராகவன், கருணாஸ், நாட்டி, சனியா ஐயப்பன், ஷரஃப் உ தீன், பாலாஜி சக்திவேல், ஹக்கிம் ஷா, அந்தோணிதாசன் ஜேசுதாசன், காக்கா கோபால், சந்தானபாரதி ஆகியோர் நடித்துள்ளனர். ஒரு உண்மை கதையை மையமாக வைத்து திரைக்கதையை அமைத்துள்ளார் இயக்குனர். |
ஆர் ஜே பாலாஜிக்கு முற்றிலும் ஒரு வித்தியாசமான கதை இது. அதிகம் பேசாத, காமெடி செய்யாத, மற்றவர்களை கலாய்க்காத ஒரு சீரியசான கதாபாத்திரத்தில் பார்த்திபனாகவே வாழ்ந்துள்ளார். ஒவ்வொரு முறையும் அடிவாங்கி, ரத்தம் சொட்ட சொட்ட அவர் பேசும் டயலாக் காட்சிகள் நன்றாக இருந்தது. இந்த படம் நிச்சயம் ஒரு நடிகராக அவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்றுத்தரும். சிறை மொத்தத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு பிரபல ரவுடியாக செல்வராகவன் சிகாமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிட்டத்தட்ட ஒரு டான் போன்ற ஒரு கதாபாத்திரத்தில் எனது வழக்கமான நடிப்பை கொடுத்துள்ளார். சிறை கண்காணிப்பாளராக கருணாஸ், ஓய்வு பெற்ற நீதிபதியாக வரும் நாட்டி, ஆர்ஜே பாலாஜியின் காதலியாக நடித்துள்ள சாணியா ஐயப்பன் ஆகியோர் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இருப்பினும் ஒரு சில கதாபாத்திரங்கள் சரியாக சொல்லப்படவில்லை. குறிப்பாக சிகாமணி கதாபாத்திரத்தை முதலில் பெரிய ரவுடி என்று செல்கின்றனர். பிறகு போலீஸ் தரப்பில் நீ நிறைய நல்லது செய்கிறாய் என்றும் சொல்கின்றனர். இதனால் அந்த கதாபாத்திரம் உண்மையில் யார் என்பது சரியாக புரியவில்லை. படத்தின் நாயகன் பார்த்திபன் கதாபாத்திரம் பல இடங்களில் தனது ஹீரோயிசத்தை காட்ட வழிகள் இருந்த போதிலும் அதை எதுவுமே செய்யாமல் இருந்ததற்கு இயக்குனருக்கு தனி பாராட்டுக்கள். கிறிஸ்டோ சேவியர் பின்னணி இசை கூடுதல் சிறப்பு. படத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள A சர்டிபிகேட்டை நன்றாக பயன்படுத்தியுள்ளனர். படம் முழுக்கவே சண்டை, ரத்த காட்சிகள் என நிறைந்துள்ளது. தமிழ் ரசிகர்களுக்கு இது போன்ற படங்கள் புதிது என்றாலும் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும்.