முன்னணி இயக்குநர் AL விஜய்யின் சகோதரரும், தயாரிப்பாளர் AL அழகப்பன் அவர்களின் மகனுமான AL உதயா ஹீரோவாக நடித்து வந்திருக்கும் படம் அக்யூஸ்ட். பிரபல கன்னட இயக்குனர் பிரபு ஸ்ரீனிவாஸ் இப்படத்தை இயக்கி உள்ளார்.
பிரபல மலையாள நடிகர் அஜ்மல், யோகிபாபு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்கள். புழல் சிறையிலிருந்து கைதி கனகுவை (உதயா) போலீஸ் வேனில் மூன்று போலீஸ்காரர்களுடன் சேலம் அழைத்து செல்கிறது காவல் துறை. இந்த மூன்று போலீஸ்காரர்களில் ஒருவர் கான்ஸ்டபிள் வேந்தன் (அஜ்மல்) கைதி கனகுவை கொலை செய்யும் நோக்கோடு போலீஸ் வாகனத்தை தாக்குகிறது ஒரு கும்பல்.

படத்தின் முதல் பாதி பயணம், அடிதடி என சாதாரணமாக செல்கிறது. ஆனால் இரண்டாம் பாதியில் வரும் பிளாஷ்பேக் காட்சிகள் காதல், பிரிவு, அரசியல் சூழ்ச்சியில் பந்தாடப்படும் ஒரு அப்பாவி என வேறொரு சுவாரசியமான தளத்தில் செல்கிறது. படத்தின் கிளைமேக்ஸில் நாம் எதிர் பார்க்காத ட்விஸ்ட் தந்து கை தட்டலை வாங்கி கொள்கிறார் டைரக்டர்.
சினிமா பின்னனியில் இருந்து வந்திருக்கிறோம். இருப்பதைந்து ஆண்டுகள் சினிமாவில் நடிக்கிறோம். தனக்கு ஒரு அங்கீகாரம் வேண்டும் என்ற உணர்வுடன் நடிப்பை தந்துள்ளார் உதயா. தனது காதலிக்கு திருமணம் ஆனதை பார்த்து தவிப்பது, கிளைமேக்ஸ் காட்சியில் அழுது ஆர்பாட்டம் செய்யும் காட்சியிலும் நன்றாக நடித்திருகிறார் உதயா. அழுக்கான ஆடையில் தாடியுடன், இறுக்கமாக முகத்தை வைத்து கொண்டு கனகு கேரக்டரை கண்முன் கொண்டு வந்து விடுகிறார்.

யோகிபாபு நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்க வில்லை. லேசாக சிரிக்க வைக்கிறார். ஹீரோயின் ஜான்வி காதலிக்கும் போது அழகாக ரொமான்ஸ் செய்வதும் காதல் கை கூடாமல் வேறு ஒருவரை திருமணம் செய்து வாழும் போது ஒரு ஏக்கத்துடனும் யதார்த்த நடிப்பை தந்துள்ளார்.
கைதி – போலீஸ்’ நட்பை சொன்ன ‘மைனா’ திரைப்படம் சில ஆண்டுகளுக்கு முன் வந்து வெற்றி பெற்றது. இந்த படத்தின் சில காட்சிகளை பார்க்கும் போது மைனா நினைவுக்கு வருகிறது. படத்தின் முதல் பாதியையும் இன்னும் சிறப்பாக உருவாக்கி இருந்தால் அக்யூஸ்ட் இன்னொரு மைனாவாக வந்திருக்கும். இருந்தாலும் இந்த அக்யூஸ்ட் உங்களை ஏமாற்ற மாட்டான்.








