‘தி ராஜா சாப்’ படத்தில்பிரபாஸ் ஹீரோவாகவும், நிதி அகர்வால், மாளவிகா மோகனன், ரித்தி குமார் ஆகியோர் கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் சஞ்சய் தத் வில்லனாக நடித்துள்ளார். டி.ஜி. விஸ்வபிரசாத் இப்படத்தை தயாரித்திருக்கிறார். பத்து ஆண்டுகளுக்கு முன்பு ‘பிரேம கதா சித்ரம்’ என்ற ஹாரர் நகைச்சுவை படத்தின் மூலம் வெற்றி பெற்ற இயக்குனர் மாருதி, அந்த மாதிரி ஒரு கதையை உருவாக்கி ரசிகர்களுக்கு படைத்துள்ளார்.
ஹைதராபாத் வந்த ராஜாவுக்கு தனது தாத்தா பற்றிய பல விஷயங்கள் தெரிய வருகிறது. குறிப்பாக தேவநாகரி வம்சத்தின் வாரிசான தனது பாட்டி கங்கா தேவி பின்னணி என்ன?, அவர் வசித்த நர்சாபூர் காட்டில் உள்ள கோட்டைக்குள் ராஜா எப்படி நுழைந்தார்? ராஜாவுடன் கோட்டைக்குள் நுழைந்தவர்கள் வெளியேறாமல் இருக்க கனகராஜ் எத்தனை தந்திரங்களைச் செய்தார்? அவரின் திட்டம் என்ன? என்பது தான் இப்படத்தின் கதையாகும். இப்படம் ஹாரர் காமெடியுடன் எடுக்கப்பட்டிருக்கிறது.
படம் சுவாரஸ்யமாக தொடங்கிய நிலையில் ஆங்காங்கே சற்று சறுக்கியதால் படம் பார்ப்பவர்களுக்கு சலிப்பு ஏற்படுகிறது. நிதி அகர்வால் மற்றும் மாளவிகா மோகனன் ஆகியோருடன் காதல் பாடல்கள் படத்திற்கு தடையாக அமைந்திருக்கிறது. இடைவேளைக்குப் பிறகு காதல் காட்சிகளை குறைத்திருக்கலாம் என தோன்றுகிறது. பின்னணி இசையில் தமன் சில காட்சிகளில் தனது முத்திரையை பதித்துள்ளார். படத்தின் சவுண்ட் மிக்ஸிங் சரியாக கையாளப்படவில்லை என பலரும் தெரிவித்துள்ளனர்.
இதனால் பாடல்களில் உள்ள வரிகளையும், சில இடங்களில் வசனங்களையும் பார்வையாளர்கள் புரிந்துகொள்வது கடினமாக உள்ளது. பாகுபலிக்குப் பின் தனக்கென தனியிடம் பிடிக்க போராடி வரும் பிரபாஸ் கடின உழைப்பை கொட்டியிருக்கிறார். சஞ்சய் தத்தின் வில்லத்தனம் படத்திற்கு ஒரு பெரிய பிளஸ் ஆக அமைந்துள்ளது. நிதி அகர்வால், மாளவிகா மோகனன், ரித்தி குமார் மூவரும் தாராளமாக கவர்ச்சி காட்டியுள்ளனர்.








