மணிரத்னம் தயாரித்த வானம் கொட்டட்டும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.ஏ.தனா. தற்போது விஜய் ஆண்டனியை வைத்து அவர் இயக்கியுள்ள படம் ஹிட்லர். கெளதம் வாசுதேவ் மேனன் , ரியா சுமன் , சரண் ராஜ் , விவேக் பிரசன்னா , ரெடி கிங்ஸ்லி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். விவேக் மெர்வின் இசையமைத்துள்ளார்கள்.
இன்னொரு பக்கம் சென்னைக்கு புதிதாக வேலை தேடி வந்து. லோக்கல் ரயிலில் ஒரு பெண்ணைப் பார்த்து அவர் மேல் காதலில் விழுகிறார் நாயகன் விஜய் ஆண்டனி. இரண்டு கதைகளும் மாறி மாறி நடந்துகொண்டிருக்க ஒரு கட்டத்தில் இந்த கொலைகளை எல்லாம் செய்து பணத்தை திருடுவது விஜய் ஆண்டனி தான் என கண்டுபிடிக்கிறார் கெளதம் மேனன். அவர் ஏன் இந்த கொலைகளை செய்கிறார். திருடிய பணத்தை என்ன செய்கிறார் என்பதை விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்ல முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் தனா.
பிரச்சனை என்னவென்றால் இந்த ஜானரில் இனிமேலும் புதிதாக சொல்வதற்கு ஏதாவது இருக்கிறதா என்பதே சந்தேகம் தான். படத்தின் முதல் காட்சி தொடங்கும்போதே இதுதான் க்ளைமேக்ஸ் என்று சொல்லிவிட முடிகிறது. ஒவ்வொரு கொலை நடக்கும்போதும் அதை விஜய் ஆண்டனிதான் செய்கிறார் என்பதை நாம் யூகித்துவிடாமல் இருக்க காதல் காட்சிகளை பயன்படுத்தி இருக்கிறார்கள். ஆனால் அது அவ்வளவு ஒன்றும் பலனளிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். வழக்கம் போல் விஜய் ஆண்டனியின் சராசரிக்கும் குறைவான நடிப்பு கதைக்கு எந்த வகையிலும் சாதகமாக அமைவதில்லை. போலீஸாக வரும் கெளதம் மேனனை வைத்தே கூட முழு படத்தை இயக்கியிருந்தால் பார்வையாளர்கள் ஏதும் குறை சொல்லியிருக்கப் போவதில்லை.
ரெடின் கிங்ஸ்லியின் நகைச்சுவைக் காட்சிகள் கொஞ்சம் ஆறுதலாக அமைகின்றன. விவேக் பிரச்சனாவின் பின்னணி இசை எங்கேஜ் செய்தாலும் பாடல்கள் பெரிதாக கவர்வதில்லை. விவேக் பிரசன்னா துணிக்கடை பொம்மைப் போல் சில காட்சிகளில் வந்து போகிறார். விஜய் ஆண்டனியின் மற்ற படங்களைக் காட்டிலும் இப்படத்தில் ஆக்ஷன் காட்சிகள் கூடுதலாகவே இடம்பெற்றுள்ளன. இருந்து என்ன பயண் கதை ரொம்ப பழசா இருக்கே…
இயக்குநர் தனா பெண் கதாபாத்திரங்களை வடிவமைக்கும் விதம் அதிகம் கவனிக்கப்படாத ஒன்று. வானம் கொட்டட்டும் படத்தில் மடோனா செபாஸ்டியன் , ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய இருவரின் கதாபாத்திரமும் வழக்கமானதாக இல்லாமல் அவர்களுக்கே உரிய பிரச்சனைகளை எதிர்கொள்ளும் பாத்திரங்களாக இருக்கும். இந்த படத்தில் அதே அளவிற்கு இல்லை என்றாலும் நாயகி ரியா சுமன் ஆண்கள் மீது சுத்தமாக நம்பிக்கை இல்லாத ஒருவராக வருகிறார். கதைக்கும் அவரது இந்த குணத்திற்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்றாலும் சுவாரஸ்யமான பெண் கதாபாத்திரங்களை உருவாக்குவது இயக்குநர் தனாவின் ஸ்ராங் ஜோன் என்று சொல்லலாம்.