பிரதர் – விமர்சனம்
எம். ராஜேஷ் பட ஹீரோவான கார்த்திக்(ஜெயம் ரவி) பொறுப்பே இல்லாதவராக இருக்கிறார். நீதி கிடைக்க வேண்டும் என்று அவருக்கு இருக்கும் பற்றால் பிரச்சனையில் சிக்குகிறார். சென்னையில் இருக்கும் அடுக்குடிமாடி குடியிருப்பு சங்கத்திடம் சொல்லாமலேயே குடியிருப்பை இடிக்க கார்த்திக் உத்தரவு வாங்கியதால் பிரச்சனை ஏற்படுகிறது.
இனியும் இவனை இங்கு வைத்திருந்தால் மேலும் பிரச்சனையாகிவிடும் என ஊட்டியில் இருக்கும் அக்கா ஆனந்தியின்(பூமிகா) வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார்கள் பெற்றோர்.அடங்காத தம்பியை அக்கா திருத்துவார் என நம்பி அங்கு அனுப்பி வைக்கிறார்கள். யோசிக்காமல் எதையும் செய்யும் கார்த்திக்கால் அக்கா குடும்பத்தில் பிரச்சனை மேல் பிரச்சனை வருகிறது.
இவ்வளவு பிரச்சனை நடந்த பிறகும் கூட கார்த்திக் திருந்தவில்லை. பிரச்சனையை சரி செய்ய வேண்டும். இல்லை என்றால் நீ என் மகனே இல்லடா என அப்பா சொல்லும்போது தான் கார்த்திக் தன் குணத்தை மாற்றுகிறார். உடைந்த குடும்பத்தை ஒன்று சேர்க்க பாடுபடுகிறார் கார்த்திக். அவருக்கு துணையாக இருக்கிறார் அர்ச்சனா(ப்ரியங்கா மோகன்).
முதல் பாதி சிரிக்க வைக்கிறது. குடும்ப பிரச்சனை பெரிதானதும் படம் லைட்டாக சீரியஸ் டோனுக்கு மாறுகிறது. எல்லா பிரச்சனையையும் பார்த்துவிட்டு கார்த்திக் ரொம்ப சீரியஸான பையனாக மாறுவதை உடனே ஏற்க முடியவில்லை.
ஜெயம் ரவி கார்த்திக்காகவே மாறிவிட்டார். அவரின் நடிப்பு சிறப்பாக உள்ளது. அவரின் ஒவ்வொரு எமோஷனும் அருமை. பாசக்கார அக்காவாக நன்றாக நடித்திருக்கிறார் பூமிகா. ஹீரோயின் ப்ரியங்கா அழகாக வந்து போகிறார். பூமிகாவின் கணவராக நடித்திருக்கும் நட்ராஜ் சிறப்பாக நடித்திருக்கிறார். தலைக்கனம் பிடித்த கலெக்டராக வந்து கைதட்டல்களை பெறுகிறார் ராவ் ரமேஷ்.