நாயகன் படத்தைத் தொடர்ந்து சுமார் 38 ஆண்டுகளுக்குப் பின் உருவாகியிருக்கும் படம் தக் லைஃப். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் கமல் , சிம்பு , த்ரிஷா , அபிராமி , நாசர் , அசோக் செல்வன் , ஜோஜூ ஜார்ஜ் , பகவதி பெருமாள் , ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

நாயகன் படத்தில் தனது மக்களுக்காக சன்முறையை கையில் எடுக்கிறார் சக்திவேல். அதே வன்முறையால் உருவான பகையால் சக்திவேல் தனது மனைவி மகனின் உயிரை இழக்கிறார். தனது மகளை பிரிகிறார். இறுதியில் சுடப்படுகிறார். இத்தனையும் பார்த்த சக்திவேலின் குணாம்சங்களை அடிப்படையாக வைத்துக் கொண்டு தக் லைஃப் படத்தில் ஒரு புதிய கதையை தொடர்கிறார் மணிரத்னம்.
ஆனால் நாயகன் படத்தில் இருந்த மைக்கதை , அதில் இருந்த உணர்ச்சிகளின் பேலன்ஸ் தக் லைஃப் படத்தில் மிஸ் ஆகிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டுன். ஒரு பெரிய கேங்ஸ்டர் அவருக்கு அடுத்தபடியாக அதிகாரத்திற்கு வர நடக்கும் சூழ்ச்சிகள் , தந்தை மகன் செண்டிமெண்ட் , திருமணத்தை தாண்டிய காதல் உறவு என மணிரத்னமின் முந்தைய படங்களின் சாய்கள் படம் முழுவதும் நிறைந்துள்ளன.

இன்னொரு பக்கம் கமல் – த்ரிஷா , கமல் – அபிராமி இடையிலான காட்சிகள் மணிரத்னமின் தனித்துவமான எழுத்தில் அமைந்துள்ளன. ஆக்ஷன் எமோஷன் என முதல் பாதியில் சரியாக சென்றுகொண்டிருக்கும் படம் இரண்டாம் பாதியில் முழுக்க முழுக்க ரிவெஞ்ச் படமாக மட்டுமே மாறிவிடுகிறது.
கமலின் நடிப்பு படத்தில் ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட் என்றே சொல்லலாம். பலமுறை பார்த்த காட்சிகள்தான் என்றாலும் ஒவ்வொரு காட்சியிலும் ஏதாவதொரு புதுமையை செய்து காட்சிகளை உயிரோட்டமுள்ளதாக மாற்றுகிறார். மறுபக்கம் சிம்புவின் ஸ்கிரீன் பிரசன்ஸ் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைகிறது. ஆனால் அவரது கதாபாத்திரம் இரண்டாம் பாதியில் இன்னும் ஆழமாக எழுதப்பட்டிருக்கலாம். அபிராமி மற்றும் த்ரிஷாவின் கதாபாத்திரம் வழக்கமான டெம்பிளெட் பெண் கதாபாத்திரங்களுக்குள் சுருக்கப்பட்டு விட்டது. சாக்லேட் பாயாக வந்த அசோக் செல்வன் போலீஸ் அதிகாரியாக தோற்றம் முதல் நடிப்பு வரை பயங்கரமாக அப்டேட் செய்துள்ளார். ஆனால் அவரது கதாபாத்திரம் செக்க சிவந்த வானம் விஜய் சேதுபயின் கதாபாத்திரத்தை அச்சு அடித்தது போல் உள்ளது. ஐஸ்வர்யா லக்ஷ்மி படத்தில் ஒரு முக்கியமான ட்விஸ்டாக மட்டும் பயண்படுத்த பட்டிருக்கிறார்.
நாசர் , ரமேஷ கண்ணா , வையாபுரி , ஜோஜூ ஜார்ஜ் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் படம் முழுவதும் தொடர்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் சண்டைக் காட்சிகளில் துல்லியமாகவும் எனோஷனலான காட்சிகள் மிக நிதானமாகவும் கேமராவை கையாண்டிருக்கிறார். வயதாகி வரும் கமலின் முதிர்ச்சியை அச்சு பிசகாமல் கொண்டு வந்திருக்கிறார்.
நாயகன் படம் உருவாக்கிய எதிர்பார்ப்போடு படம் பார்த்தால் நிச்சயம் பார்வையாளர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். முதல் பாதியில் கேரக்டரை உருவாக்கவும் ஒவ்வொரு எமோஷனையும் சொல்ல பொறுமையாக நேரம் எடுத்துக் கொண்ட மணிரத்னம் இரண்டாம் பாதியின் தொடக்கத்திலேயே லாஜிக்கை எல்லாம் கைவிட்டு அவசர கதியில் கதை சொல்லிவிட்டு செல்கிறார். மரணம் வரை சென்று கமல் மர்ம கலையை கற்றுக் கொண்டு சண்டை போடும் காட்சிகள் நம்பகத் தன்மையோடு சுத்தமாக இல்லை. இதனால் அடுத்தடுத்து நடக்கும் காட்சிகள் மீது எதிர்பார்ப்பு குறைந்தபடியே செல்கிறது.
மணிரத்தினம் தெரிந்து இந்த படத்தை இயக்கினாரா இல்லை அவரது உதவியாளர் இயக்கினாரா என்ற சந்தேகம் பல இடங்களில் தெரிகிறது.









