“நூடுல்ஸ்” திரைப்படத்தை வெளியிடும் மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி
சில வருடங்களுக்கு முன் வெளியான ‘அருவி’ படம் ரசிகர்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியுமா ? ‘அருவி’ படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் ‘அருவி’ மதன்.
இந்நிலையில் ரோலிங் சவுண்ட் பிக்சர்ஸ் (ROLLING SOUND PICTURES) திரு.அருண்பிரகாஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘நூடுல்ஸ்’ படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகி உள்ளார் ‘அருவி’ மதன்.
தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் தனக்கென ஓர் அடையாளத்தைப் பெற்று பல படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும், சில படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்துவரும் பிரபல நடிகர் ஹரீஷ் உத்தமன் இப்படத்தில் கதைநாயகனாக நடித்திருக்கிறார்.
இந்தப் படத்தின் ஒளிப்பதிவை வினோத் கவனிக்க, படத்தொகுப்பை சரத்குமார் மேற்கொள்ள ராபர்ட் சற்குணம் இசை அமைத்துள்ளார். கலை இயக்குநராக கென்னடி பொறுப்பேற்றுள்ளார்.
நல்ல கதையம்சம் கொண்ட கருத்தாழம் மிக்க படங்களை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் நாட்டம் கொண்ட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ‘நூடுல்ஸ்’ படத்தை சமீபத்தில் பார்த்துள்ளார். படம் அவருக்கு மிகவும் பிடித்துப்போக தனது ‘வி ஹவுஸ் புரொடக்சன்ஸ்’ நிறுவனம் மூலமாக இந்தப்படத்தை வெளியிடுகிறார்.வரும் செப்-1ஆம் தேதி இந்தப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இப்படத்தின் கதை பற்றியும் படம் உருவான அனுபவம் குறித்தும் இயக்குனர் அருவி மதன் கூறும்போது, “இரண்டே நிமிடங்களில் பரிமாறக் கூடிய உணவு ‘நூடுல்ஸ்’.
அதேபோல் கதை நெடுக தொடரும் இன்னும் சில இரண்டு நிமிட நிகழ்வுகளால் என்னென்ன திருப்பங்கள், எதிர் விளைவுகள் ஏற்படுகின்றன, இவர்கள் அந்தப் பிரச்சினையிலிருந்து எப்படித் தப்பிப்பார்கள் என்பதை மையப்படுத்தி இந்த ‘நூடுல்ஸ்’ படத்தின் திரைக்கதை உருவாகியுள்ளது எனவும், குறிப்பாக நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த நாயகனும் நாயகியும் அவர்கள் குழந்தையும் எதிர்பாராத ஓர் சிக்கலில் தெரியாமல் மாட்டிக் கொண்டு படும் பாடும், அந்த நேரத்தில் அவர்களது பிரச்சனையை சரி செய்ய அவர்கள் வீட்டிற்குள் வரும் ஒருவர் செய்யும் உச்சபட்சக் காமெடியும், இதற்கிடையில் அந்தக் குடியிருப்பில் வசிப்போரின் பரிதவிப்பும் என படம் பார்க்கும் அனைவரையும் ஒன்றே முக்கால் மணி நேரமும் மிகுந்த எதிர்பார்ப்பினூடே சிரிப்பும், சுவாரசியமும், உற்சாகமுமாக உட்காரச் செய்யும் விதமாக இந்தப்படம் உருவாகியுள்ளது எனவும் கூறினார்.,
சமீபமாக வெளியான ‘போர்த்தொழில்’, ‘குட்நைட்’ படங்கள் வரை நல்ல கதையம்சம் கொண்ட படங்களைப் பார்த்து கொண்டாடிய ரசிகர்கள் ‘நூடுல்ஸ்’ திரைப்படத்திற்கும் அதே வரவேற்பைக் கொடுப்பார்கள் என்று ‘நூடுல்ஸ்’ சிறப்புக் காட்சி பார்த்தவர்கள் உறுதியாக கூறுகிறார்கள். அதற்கு வலு சேர்க்கும் விதமாக இந்தப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் மூலமாக வெளியிட முன்வந்துள்ளது இன்னும் நம்பிக்கை அளிக்கிறது.