வித் லவ் – விமர்சனம்
வித் லவ்.
பள்ளிப் பருவத்தில் பூக்கும் பதின்மத்துக் காதலைச் சொல்லாமலே விட்டுவிடும் சத்யசீலனும் மோனிஷாவும், தங்கள் முதல் காதலரைத் தேடித் தங்கள் காதலித்ததைத் தெரியப்படுத்த நினைக்கின்றனர். அந்த அழகான பயணத்தை நேர்த்தியாகவும் நகைச்சுவையாகவும் சொல்லியுள்ளார் அறிமுக இயக்குநர் மதன்.
“அவளோட முடிவு எதுவா இருந்தாலும் ரெஸ்பெக்ட் பண்ணு” – நாயகியின் அக்காவாக நடித்துள்ள RJ ஆனந்தி பேசும் வசனம்.நீ உங்க அப்பா கிட்ட எப்பவாவது என்னன்னு கேட்டு இருக்கியா நாயகியின் வசனம்
காதல் அத்தியாயத்தை விட்டு துளி நகர்ந்து ஆசிரியர் சாமிநாதனை ஏன் சத்யசீலன் அறைகிறார் எனும் கிளைக்கதைக்குச் செல்கிறார் இயக்குநர் மதன். ஆனால் அதையும் மையக் கதையோடு இணைத்து அசத்திவிடுகிறார். ஒரு விஷயத்திற்கு உடனடியாக (instant) ரியாக்ட் செய்வதோடு அதைக் கடந்து விடாமல், அதன் அசல் காரணத்தைக் தெரிந்து தெரிந்து கொள்ள பலரும் விரும்புவதில்லை என்பதைப் படம் மூன்று இடங்களில் அழுத்தமாகப் பதிகிறது. முன்முடிவுகளற்ற உரையாடல்களுக்குத் தயாராக இல்லாத உறவுகளுக்கு மத்தியில் இயல்பாகவே ஒரு சுணக்கம் ஏற்பட்டுவிடுகிறது. இவ்விஷயத்தை, இயக்குநர் வசனத்திலும் நுண்ணியமாகக் கொண்டு வந்து அசரடிக்கிறார். “இது ஆண்களோட புத்தி” எனச் சொல்லி, “இல்ல இது என்னோட புத்தி” எனத் தன்னைத் தானே கதாபாத்திரம் சரிசெய்து கொள்கிறது. சாமிநாதனாகச் சித்தப்பு சரவணன் நடித்துள்ளார். இந்தப் பத்தியிலுள்ள விஷயத்தைச் சரவணன் வசனமாகப் பேசினாலும், அக்காட்சி அழுத்தமற்று நழுவி விடுகிறது. ஆனால் அதே விஷயத்தை, தேனி முருகன் மிக அழகாகப் பிரதிபலித்துள்ளார்.
சென்ற ஆண்டின் வெற்றிப்படங்களில் ஒன்றான டூரிஸ்ட் ஃபேமிலியை இயக்கிய அபிஷன் ஜீவிந்த், தன்னை முழுவதுமாக இயக்குநரிடம் ஒப்படைத்துள்ளார். ஹீரோயிசம் அதிகமில்லாத, நிறைய மொக்கை வாங்கும் கதாபாத்திரத்தை உள்ளபடிக்கு உள்வாங்கி அழகாகத் திரையில் கொண்டு வந்துள்ளார். நாயகனாக இது அவருக்கு முதற்படம் எனச் சொல்ல முடியாத அளவுக்கு நிறைவாகத் தன் பங்கினை அளித்துள்ளார். ’96 போல் ஒரு மாயாஜாலத்தை நிகழ்த்தாவிட்டாலும், ஷான் ரோல்டனின் பின்னணி இசை படத்தோடு பார்வையாளர்களை ஒன்ற வைக்கும் மேஜிக்கைச் செய்துள்ளது. தேவாவின் ‘அவள் வருவாளா’ பாட்டை ஓரிடத்தில் உபயோகித்து ரசிக்க வைத்துள்ளார். இசையும், பாடல் வரிகளும் கதாபாத்திரத்தின் மனவோட்டத்தைக் கடத்தப் பெரிதும் துணை புரிகின்றது.
மோனிஷாவாக அனஸ்வரா ராஜன் அசத்தியுள்ளார். அவரது கியூட்டான எக்ஸ்பிரஷன்ஸ்களால், ஒளிப்பதிவாளர் ஷ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஃப்ரேம்கள் மேலும் அழகுற ஜொலிக்கின்றன. அவரது மலையாள நெடி வசன உச்சரிப்பு மட்டும் சிறிதளவு (கொஞ்சூண்டு) அந்நியமாய் சிற்சில இடத்தில் ஒலிக்கிறது. திருச்சிக்காரராய் இல்லாமல் கொஞ்சும் மலையாளம் பேசும் கேரளத்துப் பெண்ணாகவே வந்திருந்தால், இயல்பான cooing தன்மை வெளிப்பட்டிருக்கும். ஆனால், படத்தில் அனஸ்வராவின் தமிழ், அவரேற்ற கதாபாத்திரத்திற்குத் தக்கவாறு சற்று மிடுக்குடன் உள்ளது. அம்மிடுக்கு அவரது கியூட்டான எக்ஸ்பிரஷன்ஸ்களுக்கு ஒத்திசையாமல் ஆங்காங்கே தனித்துத் தெரிகிறது. அறிமுகமான நொடி முதல் படத்தின் மைய ஈர்ப்பாய் விளங்குகிறார். இப்படத்தை, நாயகியின் பார்வையில் (வழிகாட்டலில்) நாயகன் உலகத்தைக் காண்கிறான் என்று கூடச் சொல்லலாம்.
ஒருதலையாகத் தான் நேசிக்கும் நபருக்கு ஒன்றெனில், உற்ற தோழி என்றாலும் மூக்கை உடைக்கும் நாயகிக்கு, எவ்விடத்தில் அக்கோபத்தைக் கைவிட்டு மன்னிக்க வேண்டும் என்ற கலை கைகூடியுள்ளது. பயணத்தின் முடிவிலும் கூட, நாயகனுக்கு அக்கலை கைகூடிவரவில்லை என்பது துரதிர்ஷ்டம்.
சத்யசீலன் தமிழ் சினிமாவின் வழக்கமான நாயகன் தான் என்றாலும், இயக்குநர் மதனின் மோனிஷா கதாபாத்திரம் அப்படியில்லை. இசைதான் படத்தில் இரண்டாவது கதாநாயகன் பேக்ரவுண்டில் பின்னி இருக்கிறார். சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்த படங்களிலேயே மாஸ் ஹிட் படம் இதுதான். திருமணம் ஆன முஸ்லிம் பெண்ணிடம் காதலை சொல்லக்கூடாது இது ஜாமா உடைய ரூல்ஸ் அந்த இடத்தில் மிகவும் கவனமாக கையாண்டு இருக்கிறார் இயக்குனர் சபாஷ்.மொத்தத்தில் இந்த படத்தை குடும்பங்களும், காதலர்களும், பள்ளி நண்பர்களும் தலையில் வைத்து கொண்டாடுவார்கள்.
மொத்தத்தில் வித் லவ், தி கிரேட் லவ்.









