• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Advertisement
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சினிமா ஒரு வலிமையான ஆயுதம்:இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர்

by Tamil2daynews
November 21, 2021
in சினிமா செய்திகள்
0
சினிமா ஒரு வலிமையான ஆயுதம்:இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர்
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
இயக்குநர் எஸ் .ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் ஸ்டார் மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகியிருக்கும் ‘நான் கடவுள் இல்லை’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.
இவ்விழாவில் இயக்குநர் அமீர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு படத்தின் பாடல்களை வெளியிட்டார்.
விழாவில் படத்தின் இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர், ஒளிப்பதிவாளர் மகேஷ் கே தேவ், படத்தொகுப்பாளர் பிரபாகர், நடிகர்கள் ‘பருத்திவீரன்’ சரவணன், சமுத்திரகனி, நடிகைகள் சாக்ஷி அகர்வால், இனியா, குழந்தை நட்சத்திரம் டயானாஸ்ரீ , தயாரிப்பாளர் பி. டி .செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர் பேசுகையில்,
 ”இந்த இசை வெளியீட்டு விழா திடீரென்று ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு விழா. டிசம்பர் 3ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. படத்தை விளம்பரப்படுத்த வேண்டும். ஆனால் ஹீரோ சென்னையில் இல்லை. அவர் சென்னைக்கு வந்தவுடன் இந்த விழா நடைபெறுகிறது. இந்தப் படத்தின் ஆடியோவை யார் வெளியிட்டால் பொருத்தமாக இருக்கும்? என எண்ணினேன். சமூக அக்கறை கொண்ட  படம் என்பதால், சமூகத்தின் மீது பேரன்பும், அக்கறையும் கொண்ட இயக்குநர் அமீர் கலந்து கொண்டு, வெளியிட்டால் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணி அவரை போனில் தொடர்பு கொண்டு அழைத்தேன். விசயத்தை தெரியப்படுத்திய போது எத்தனை மணிக்கு வர வேண்டும்? எங்கு வர வேண்டும்? அதை மட்டும் சொன்னால் போதும் என்றார்.
ஒரு இயக்குநராக அமீர் அருகில் அமர்ந்ததை பாக்கியமாக கருதுகிறேன். இதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன். எண்ணிக்கை பெரிதல்ல. தரம்தான் முக்கியம். ஆனால் இந்தப் படத்தை நான் அமீருக்குப் போட்டியாகத் தான் இயக்கி இருக்கிறேன். இந்த வயதிலும் உங்களைப் போன்ற இயக்குநர்களுடன் பயணிப்பதை பெருமையாகக் கருதுகிறேன். இந்தப் படத்தை நீங்கள் பார்க்க வேண்டும். பார்த்துவிட்டு கால்ஷீட் கொடுக்க வேண்டும்.
ஆரம்பத்தில் புதிது புதிதாக நடிகர்களை உருவாக்கி, வாய்ப்பளித்துக் கொண்டிருந்தேன். அப்போது என்னிடம் இருந்த உத்வேகம் இப்போது இல்லை. இயக்குநர்களுக்கு நடிக்க வாய்ப்பு அளிப்பதில் சில வசதிகள் இருக்கிறது. படப்பிடிப்புத் தளத்தில் அவர்கள் நடிகராக மட்டுமில்லாமல், உதவி இயக்குநராகவும், வசனத்தில் உதவி செய்பவராகவும், காட்சிகளை சுவாரஸ்யமாக மேம்படுத்துவதிலும், படப்பிடிப்புத் தள நிர்வாகத்திலும் உதவுவார்கள்.
இந்தப்படத்தில் அண்மைக்காலமாக யாரும் சந்திக்காத சமுத்திரகனியைப் பார்க்கலாம். அழகான ஹீரோ அமைதியான ஹீரோ. இனிமையான ஹீரோ. அவருக்குள் ஒரு கமர்சியல் ஹீரோ ஒளிந்து கொண்டிருக்கிறார். அது அவருக்குத் தெரியவில்லை. நான் அதை வெளிப்படுத்தி இருக்கிறேன். ஒரு கமர்சியல் ஹீரோவிற்கான அனைத்து தகுதிகளும் அவரிடம் இருக்கின்றன. இந்தப் படத்தில் வெளிக்கொண்டு வந்திருக்கிறேன்.
நான், இயக்குநர் அமீர், சமுத்திரகனி போன்றவர்கள் சினிமாவை ஒரு வாழ்வியலாக எடுத்துக்கொண்டு செயல்பட்டு வருகிறோம். அந்த வழியில் நாங்கள் சினிமாவை ஒரு ஆயுதமாக எடுத்துக்கொண்டு, இந்த. சமூகத்திற்கும், சமுதாயத்திற்கும், இந்த நாட்டு மக்களுக்கும் ஏதாவது ஒரு நல்ல விஷயத்தைச் சொல்ல முடியுமா… என்று பயணப்படுகிறோம்.  ஏனெனில் சினிமா என்பது ஒரு வலிமையான ஆயுதம். ஊடகம் என்று சொல்ல மாட்டேன். ‘மூன்று திரைப்படங்களைத் தணிக்கை இல்லாமல் இயக்குவதற்கு எனக்கு வாய்ப்பு கொடுங்கள். நாட்டின் தலைவிதியை நான் மாற்றி காட்டுகிறேன்’ என்று பேரறிஞர் அண்ணா அன்றே சொல்லி இருக்கிறார். அந்த அளவிற்கு சினிமா ஒரு வலிமையான ஆயுதம். அதனால் சினிமாவை சமூகத்திற்குப் பயனுள்ள வகையில் கொடுக்க வேண்டும் என திரைத்துறைக்குள் வந்தேன். அதை தற்போது வரை செய்து கொண்டிருக்கிறேன். நீண்ட நாட்களுக்கு பிறகு 80 காலக்கட்டத்துப் பாணியில் மனதிற்கு நிறைவாக ஒரு படத்தை இயக்கி இருக்கிறேன்.
சமுத்திரக்கனி, அமீர் போன்றவர்கள் கஷ்டப்படும் உதவியாளர்களுக்கு விளம்பரப்படுத்தாமல் உதவி செய்து வருவதால் அவர்களிடமுள்ள மனிதநேயத்தைக் கண்டு வியந்திருக்கிறேன். ”ஏழைக்கு இரக்கப்பட்டு உதவி செய்கிறவன்.. இறைவனுக்கு கடன் கொடுப்பதற்கு ஒப்பாகிறான்..’ என பைபிளில் ஒரு வாசகம் உள்ளது. இதே கருத்து ஏனைய மதங்களிலும் இருக்கிறது.
சினிமாவில் நெகட்டிவ் கேரக்டர்களில் நடிக்கும் நடிகர்களுக்குத்தான் நடிப்பதற்கான சந்தர்ப்பம் அமையும். ரஜினி கூட நெகட்டிவ் கேரக்டரில் அறிமுகமாகி பிரபலமானவர். இந்தப்படத்தில் நாயகனை விட பல இடங்களில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருக்கும் சரவணன் தான் ஆதிக்கம் செலுத்தி இருக்கிறார். இந்தப் படம் வெளியான பிறகு நடிகர் சரவணன் பக்கம் குழந்தைகள் வரமாட்டார்கள். வருவதற்குப் பயப்படுவார்கள்.
நடிகர் விஜய் இன்று இந்த அளவு உயரத்தில் இருக்கிறார் என்றால், அதற்கு நானோ, இயக்குநர்களோ மட்டும் காரணமல்ல பி.டி. செல்வகுமார் போன்றவர்களின் கடின உழைப்பும் ஒரு காரணம். அதனால் அவரும் எங்கள் குடும்பத்தில் ஒருவர்தான்.
‘நான் கடவுள் இல்லை’ படம் எனக்குத் திருப்தியாக அமைந்திருக்கிறது என மகிழ்ச்சி அடைவதற்குக் காரணம் ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் இசை அமைப்பாளர் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களின் கூட்டு உழைப்பு தான் .
இந்தப் படத்திற்கு முதலில் பாடல்களே வேண்டாம் என்று தான் படப்பிடிப்பை நிறைவு செய்தோம். படத்தில் பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் இடையேயான உறவை – ஆழமான புரிதலை காட்சிப்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த இடத்தில் பாடல்கள் வந்தால் பொருத்தமாக இருக்குமென படத்தொகுப்பாளர் சுட்டிக்காட்டினார். அதன்பிறகு அங்கு ஒரு பாடலை வைத்தோம். பாடலுக்கு இடையில் ஒரு தந்தையின் அழுகுரல் இடம் பெற வேண்டும் என எண்ணினேன். அதனை நானே பாடினேன். நான் பாடினேன் என்பதைவிட அந்த இடத்தில் ஒரு தந்தையின் அழுகுரலைப் பதிவு செய்தேன்.” என்றார்.
நடிகர் சமுத்திரகனி பேசுகையில்,
” இயக்குநர் எஸ்ஏசி இந்த வயதிலும் இளமைத் துடிப்புடன் பணியாற்றுவதைப் பார்க்கும்போது பிரமிப்பு ஏற்படும். உங்களைப் போன்றவர்களைப் பத்திரமாக பாதுகாத்து வைத்துக் கொள்வது எங்களது கடமை. இதற்காகத்தான் நீங்கள் அழைத்தவுடன் உடனடியாக ஓடோடி வந்தேன். படப்பிடிப்பு தளத்தில் எனக்கும் நடிப்பு சொல்லித் தந்திருக்கிறார். காலையில் வேலை செய்யத் தொடங்கி அன்று  இரவு வரை உற்சாகம் குறையாமல் பணியாற்றுவார். அவருடன் பணியாற்றிய நாட்கள் மகிழ்ச்சியானவை.
படத்தை டிஜிட்டல் தளத்தில் வெளியிடுமாறு நான் பரிந்துரை செய்தது உண்மைதான். ஏனெனில் திரையரங்குகளில் நடிகர்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் சிறிய பட்ஜெட் படங்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. ‘அப்பா’ என்றொரு படத்தை நான் தயாரித்து இயக்கி வெளியிட்டேன். அந்தப் படம் வெளியாகி நான்கு நாட்களுக்குள் பெரிய படம் ஒன்று வெளியாகிறது என்று சொல்லி என் படத்தைத்  திரையரங்கிலிருந்து எடுத்து விட்டனர். இதுபோன்ற படங்களுக்கு மக்கள் முதல் நாளில் வரமாட்டார்கள். மக்களால் பேசப்பட்டு.. பேசப்பட்டு… பிறகுதான் திரையரங்கிற்கு வருவார்கள். பத்து நாளுக்குப் பிறகுதான் இது போன்ற படங்களுக்கு வசூல் அதிகரிக்கும்.
‘வினோதய சித்தம்’ என்று ஒரு படத்தை இயக்கினேன். அந்தப் படம் டிஜிட்டல் தளத்தில் இருக்கிறது என்று தைரியமாகச் சொல்வேன். ஆனால் திரையரங்கில் வெளியாகி இருந்தால், அந்தப் படத்தை நான் எங்கு சென்று பார்க்க வைப்பது? அதனால்தான் நான் இயக்குநரிடம் டிஜிட்டல் தளத்தில் வெளியிடுமாறு பரிந்துரை செய்தேன். எஸ் ஏ சி சார் இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் தான் வெளியாகும் என்பதில் உறுதியாக இருந்தார். திரையரங்க அனுபவம் என்பது முற்றிலும் வேறு. அதை நானும் அனுபவித்திருக்கிறேன். ரசித்திருக்கிறேன்.
இது போன்ற சின்ன பட்ஜெட் படங்களுக்கு கிடைக்கக்கூடிய ஆதரவு என்பது மிகவும் குறைந்து விட்டது என்ற ஆதங்கம் என்னுள் இருக்கிறது.
மறைந்த என்னுடைய குருநாதர் கே. பாலச்சந்தர் சாருக்கு வழங்கக்கூடிய அதே மரியாதையையும் அதே அன்பையும் இன்றும்  எஸ் ஏ சி சாரிடமும் வைத்திருக்கிறேன்.
தோல்வி அடைந்த என்னை நிமிர வைத்து, மீண்டும் என்னை உற்சாகப்படுத்தி வளரச் செய்தவர் இயக்குநர் அமீர். என்னை டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக்கியதும் அவர்தான். என்னை நடிகராக்கியதும் அவர்தான்.
நாடோடிகள் படம் பார்த்த பிறகு இயக்குநர் கே. பி, என்னிடம் ‘இயக்குநர் அமீரின் தாக்கம் உன்னிடத்தில் நிறைய இருக்கிறது’ என்று குறிப்பிட்டார். என்னுடைய படைப்பில் வன்முறை புகுந்ததற்குக் காரணம் அவர்தான். அதனால் இறுதிவரை அமீர் அண்ணனுக்கு அன்புக்குரிய தம்பியாகத்தான் நான் இருப்பேன்.” என்றார்.
இயக்குநர் அமீர் பேசுகையில்,
 ” இயக்குநர் எஸ் ஏ சி அவர்கள் இந்த விழாவிற்கு கலந்துகொள்ள அழைப்பு விடுத்தவுடன் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டேன். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நான் கலந்து கொள்ளும் முதல் இசை வெளியீட்டு விழா இது. அதனால் கூடுதல் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். கொரோனா காலகட்டத்தில் ஏராளமானவர்களை இழந்திருக்கிறோம். கொரோனாவிற்குப் பிறகு நாமெல்லாம் இங்கு இருக்கிறோம் என்பதே சந்தோஷம்.
இயக்குநர் எஸ் ஏ சி பேசுகையில் இந்த விழாவிற்கு அழைத்தவுடன் நான் ஏற்றுக்கொண்டு கலந்து கொண்டதைக் குறிப்பிட்டார். எனக்கும் எஸ் ஏ சி சாருக்குமான உறவு ‘சட்டம் ஒரு இருட்டறை’ என்ற படத்தைப் பார்த்த போதே தொடங்கிவிட்டது. அந்தப் படத்தை நான் பள்ளியில் படிக்கும்போது மதிய வேளையில் கட் அடித்து பார்த்தேன்.
ஒரு திரைப்படம் எந்த மாதிரியான தாக்கத்தை சமூகத்தில் ஏற்படுத்த முடியும் என்பதை நாம் அண்மைக்காலமாகப் பார்த்து வருகிறோம். ஆனால் அன்றைய காலகட்டத்திலேயே சட்டம் என்ற ஒரு வார்த்தையை வைத்து படத்தை இயக்கியவர் எஸ் ஏ சி. அதில் குறிப்பாக சட்டம் ஒரு இருட்டறை படத்தில் ‘சட்டம் ஒரு இருட்டறை அதை பேரறிஞர் அண்ணா சொன்னாரு.. ’என ஒரு பாடல் இருக்கும்.. அண்ணா சொன்னார் என்பதே எனக்கு அந்தப் படத்தை பார்த்த பிறகுதான் தெரியும். ஏனெனில் அண்ணா எழுதிய புத்தகத்தை நான் படிக்கவில்லை. அந்தப் பாட்டுதான்  என்னிடம் கொண்டு வந்து சேர்த்தது. ஒரு ரசிகனாக பள்ளியில் படிக்கும் காலத்திலேயே எஸ் ஏ சி யின் படத்தை பார்த்து இருக்கிறேன்.
அதைத்தொடர்ந்து மதுரை சென்ட்ரல் தியேட்டரில் 83 ஆண்டில் அவர் இயக்கத்தில் வெளியான ‘சாட்சி’ என்ற படத்தைப் பார்த்தேன். படத்தின் இடைவேளையில் அங்கு வைக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களையெல்லாம் பார்ப்பதுண்டு. அப்போது படத்தின் இடைவேளையின் போது ரசிகர்களின் வரவேற்பு எப்படி இருக்கிறது என்பதை நேரில் பார்ப்பதற்காக எஸ் ஏ சி வருகை தந்திருந்தார். சினிமா மீதான ஆர்வம் காரணமாக அவரைத் தெரிந்து வைத்திருந்தேன். அவரைச் சந்தித்து கைகுலுக்கி ‘படம் நல்லா இருக்கு’ என்று தெரிவித்து விட்டுச் சென்று விட்டேன்.
அதன் பிறகு சென்னை வந்து இயக்குநராகி, ‘ராம்’ படத்தை இயக்கி முடித்த பிறகு, அவரை சந்தித்து இளைய தளபதிக்காக கதை ஒன்றைச் சொன்னேன். அப்போது அவர் ‘முத்தம்’ என்ற பெயரில் ஒரு திரைப்படத்தை இயக்கி வந்தார். அதன் பிறகு பெப்சியில் இருந்தபோது அவருடைய அலுவலகத்துக்கு சென்று வாக்குவாதமும் செய்திருக்கிறேன்.
2010 வாக்கில் என்னை தொடர்புகொண்டு நேரில் சந்திக்க வேண்டும் எனக் கேட்டார். அப்போது நான் ‘யோகி’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய அலுவலகத்திற்கு வருகை தந்து நீங்கள் எனக்கு ஒரு படத்தில் நடித்துக் கொடுக்க வேண்டும். உடனடியாக 40 நாள் கால்ஷீட் வேண்டும் எனக் கேட்டார். என்னால் கால்ஷீட் கொடுக்க முடியவில்லை. அப்போது தேர்தலுக்கு மூன்றரை மாதங்கள் தான் இடைவெளி இருந்தது. அதற்குள் படத்தை எடுத்து வெளியிட வேண்டும் எனச் சொன்னார். எப்படி சார் முடியுமா? எனக் கேட்டபோது, ‘அதெல்லாம் என் பொறுப்பு’ என்று துணிச்சலாகச் சொன்னார். அதன் பிறகு அவருடன் இணைந்து பணியாற்ற முடியவில்லை. அதன் பிறகு அவர் சத்யராஜை வைத்து அவர் நினைத்த கதையை ‘சட்டப்படி குற்றம்’ என்ற பெயரில் எடுத்து வெளியிட்டார். அப்போதும் நான் அவரை வியந்து பார்த்தேன்.
கொரோனாவிற்கு முன்னர் கூட நான் சென்னை பிலிம் சிட்டியில் ‘நாற்காலி’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்த நேரத்தில் அவர் என் கேரவனுக்குள் வந்து சந்திக்க முயற்சி செய்திருக்கிறார். பிறகு அவர் வருகை தந்த விசயத்தைக் கேள்விப்பட்டு, அருகில் படப்பிடிப்பு நடைபெற்ற தளத்திற்குச் சென்று அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் சமுத்திரக்கனியை வைத்து படத்தை இயக்கிக் கொண்டிருந்தார். அதே ஆற்றலுடன் தொடர்ந்து படத்தை இயக்கிக் கொண்டிருந்தார். இன்றளவும் அவரால் எப்படி சினிமாவில் பயணிக்க முடிகிறது என்பதை நினைத்து வியப்புடன் அவரைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். அந்த ஆச்சரியமும், உங்களின் பயணமும், நீங்கள் போட்டுக்கொடுத்த பாதையும்  தான் உங்களுக்கான மரியாதை. இது சாதாரண விசயமல்ல பெரிய விசயம்.
மேடையில் உங்களுக்கு அருகில் அமர்ந்ததை நான் இறைவனின் ஆசியாக கருதுகிறேன். எங்களைப் போன்ற இயக்குநர்களுக்கு படத்தைவிட நீங்கள் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறீர்கள் என்பதுதான் முக்கியம். இதைத்தான் நாங்கள் உங்களிடமிருந்து கற்றுக் கொள்ள விரும்புகிறோம். இன்றும் நீங்கள் நினைத்தால் இந்த விழாவை இதைவிட பெரிதாக நடத்தியிருக்கலாம். ஆனால் நீங்கள் இந்த படங்களுக்கு.. இவர்களை வைத்துதான் இசை வெளியீட்டை நடத்த வேண்டுமென்று சிந்திக்கிறீர்களே.. அதுதான் எங்களுக்கு முக்கியமாகத் தெரிகிறது. இதைத்தான் நாங்கள் உங்களிடமிருந்து கற்றுக் கொள்ள விரும்புகிறோம். அதனால்தான் அழைத்தவுடன் இந்த விழாவில் கலந்து கொள்ள  வந்திருக்கிறேன்.
எங்களைப்போன்ற இயக்குநர்களுக்கு சினிமாவை எளிமைப் படுத்தியது உங்களைப் போன்ற மூத்த இயக்குநர்கள் தான். நீங்கள் இல்லை என்றால் நாங்கள் இல்லை. அதனால் உங்களுக்கான மரியாதை என்றென்றும் எங்கள் இடத்தில் இருக்கும்.
நீங்கள் பல சூப்பர் ஸ்டார்களை உருவாக்கி விட்டு, அமைதியாக அமர்ந்து இருக்கிறீர்கள். உங்களின் சாதனை அளவிடமுடியாது. ஏராளமானவர்கள் சினிமாவிற்கு வருவார்கள் ஆனால் உங்களைப் போன்று யார் சினிமாவை நேசித்து இத்தனை ஆண்டு காலம் நீடித்து இருப்பார்கள். எம்ஜிஆர்  ,சிவாஜி, ரஜினி, கமல் போன்று எஸ் ஏ சி என்பதும் சினிமாவில் ஒரு ஐகான் தான். இதை அவ்வளவு எளிதில் அழித்துவிட முடியாது.
நீங்கள் பேசும்பொழுது பைபிளிலிருந்து ஏராளமான மேற்கோள்களை குறிப்பிட்டீர்கள் பிறகு யாரும் தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள் என பேசினீர்கள். யார் எதற்காக தவறாக எடுத்துக் கொள்ளப் போகிறார்கள்?. நீங்கள் தாராளமாகப் பேசலாம். இந்திய அரசியல் சட்டம் உங்களுக்கு அந்த உரிமையை வழங்கியிருக்கிறது. இந்த நாட்டில் விரும்பியவர்கள்.. விரும்பிய மதத்தை பின்பற்றலாம். மதப்பிரச்சாரம் பண்ணலாம். எது வேண்டுமானாலும் செய்யலாம். இதில் தவறாக எடுத்துக் கொள்வதற்கு ஒன்றுமில்லை. இன்றைக்கு பிரதமர் நரேந்திரமோடி பேசுவதை கோயில்களில் தொலைக்காட்சி வைத்து ஒளிபரப்பு செய்கிறார்கள். அப்படிப்பட்ட காலகட்டத்தில் நல்ல விஷயங்களை எந்த மதத்தில் இருந்து வந்தாலும் எந்தச் சமூகத்தில் இருந்து வந்தாலும் எந்த மொழியில் இருந்தாலும் அதை மக்களுக்குச் சொல்ல வேண்டிய பொறுப்பு இருக்கிறது. அதைத்தான் நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள் என நான் நினைக்கிறேன் அதனால் நீங்கள் பேசியது குறித்து ஒருபோதும் சங்கடப்படத் தேவையில்லை.
சமுத்திரகனியும், நானும் ஒரே அறையில் வசித்தவர்கள் தான். அவன் எப்போதும் ஏதேனும் புத்தகத்தை படித்துக் கொண்டே இருப்பான். எனக்கு படிக்கும் பழக்கம் இல்லை. கேட்கும் பழக்கம் இருக்கிறது.இரவில் சமுத்திரகனி படித்ததை காலையில் அவன் சொல்லும் போது கேட்கும் பழக்கம் எனக்கு இருக்கிறது. அந்த உழைப்பு தான் அவனை இந்த உயரத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறது.  இன்னும் உயரத்திற்குச் செல்வார். தெலுங்கின் முன்னணி நடிகர்களான மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், சிரஞ்சீவி போன்ற நடிகர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார். காரணம் கனியின் அணுகுமுறை. அவர் அனைவரிடமும் அன்பாகப் பழகுவார். அவரின் இயக்கத்தில் அண்மையில் வெளியான ‘வினோதய சித்தம்’ படத்தைப் பார்த்து பிரமித்து விட்டேன். அந்தப் படத்திற்குப் பிறகு அவர் மீது சற்று பொறாமையும் ஏற்பட்டது. சக படைப்பாளிகள் நல்லதொரு படைப்பை கொடுத்துவிட்டால் அவர்கள் மீது ஒரு ஆரோக்கியமான பொறாமை ஏற்படும்.
நான் கடவுள் இல்லை படத்தை ஓ டி டி தளத்தில் வெளியிடலாம் என சமுத்திரகனி  எஸ் ஏ சியிடம் பரிந்துரை செய்தார். எனக்கும் அது சரி என்று தோன்றுகிறது. ஆனால் எஸ் ஏ சி இது திரையரங்கில் தான் வெளியாகும் என்பதில் உறுதியாக இருக்கிறார். ஓ டி டி யில் வெளியிட்டால் அது ரசிகர்களைச் சென்று சேராது என்ற நிலை தற்போது இல்லை. ஏனெனில் இன்று ஓ டி டி டி இல் வெளியான ‘ஜெய்பீம்’ என்ற படம்தான் சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தையும், மாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. நாம் இங்கு 100 பேரை அழைத்து வந்து சொல்வதைவிட, ஆயிரக்கணக்கான மக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று சொல்வது என்பது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இது மிகப் பெரிய வரம் தான். அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் அதையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.” என்றார்.
Previous Post

ரஜினி சார் பேட்ட படத்தில் எனக்கு ஒரு அட்வைஸ் கொடுத்தார். படத்தை தயாரிக்க மட்டும் வேண்டாம் என்றார்.

Next Post

சமூக அக்கறையில் விஜய்சேதுபதியின் “கடைசி விவசாயி”

Next Post
சமூக அக்கறையில் விஜய்சேதுபதியின் “கடைசி விவசாயி”

சமூக அக்கறையில் விஜய்சேதுபதியின் "கடைசி விவசாயி"

Popular News

  • பழநி தல வரலாறு

    பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • Mrs and Mr – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • கைமேரா பட இசை வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • Freedom – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில், வெளியானது “மஹாவதார் நரசிம்மா” டிரெய்லர் !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில், வெளியானது “மஹாவதார் நரசிம்மா” டிரெய்லர் !

July 12, 2025

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில், தனுஷ் நடிக்கும் D54 பிரம்மாண்ட திரைப்படம் – பூஜையுடன் ஷூட்டிங் ஆரம்பம்!

July 12, 2025

“டிரெண்டிங்” பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

July 12, 2025

சவுத் ஸ்டார்ஸ் x மார்வெல்: ‘ஃபென்டாஸ்டிக் ஃபோர்’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எந்தெந்த நடிகர்கள் நடிக்கலாம்?

July 12, 2025

“பறந்து போ” திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை கொண்டாடிய படக்குழுவினர்!

July 12, 2025

Freedom – விமர்சனம்

July 12, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.