பேரன்பும் பெருங்கோபமும் திரைப்படம் விவாதத்தை ஏற்படுத்தும் படம்!
அவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களே இங்கே தெய்வங்களாக வணங்கப்படுகின்ற, வழிபாடு செய்யப்படுகிற ஒரு கலாச்சாரமும் நம்மிடையே கலந்து இருக்கிறது. மதுரை வீரன் சாமி கூட, சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டு அதன் அடிப்படையில் படுகொலை செய்யப்பட்ட ஒரு வரலாறாக தான் நான் காண்கிறோம். அப்படி தென் மாவட்டங்களில் முத்தாலம்மன் வழிபாடு இன்றைக்கும் இருக்கிறது. இந்த முத்தாலம்மன் என்கிற தெய்வம் சாதி அடிப்படையில் படுகொலை செய்யப்பட்ட ஒரு பெண்ணின் வரலாறாக தான் இன்றைக்கும் பேசப்பட்டு வருகிறது. அந்த கருப்பொருளை மையமாக வைத்து இயக்குநர் சிவப்பிரகாஷ் இயக்கி இருக்கும் பேரன்பும் பெருங்கோபமும் என்கிற இந்த திரைப்படம் புதிய கோணத்தில் ஆணவக் கொலையை அணுகுகிறது. ஆழமான கருத்துக்களை விவாதமாக்கி இருக்கிறார். சாதி ஒழிப்பை முன்னிறுத்துகிறார். இயக்குநர் சிவப்பிரகாஷ் கையாண்டிருக்கும் யுக்தி பலரையும் வியப்பில் ஆழ்த்தக்கூடியதாக இருக்கிறது. ஆழமாக சிந்திக்க வைக்க கூடியதாக இருக்கிறது. சாதி பிறப்பால் வருவதில்லை வளர்ப்பால் வருகிறது என்பதை ஆழமாக பதிவு செய்திருக்கிறார்.
40 ஆண்டுகளுக்கு முன்னர் ‘எடுப்பார் கைப்பிள்ளை’ என்கிற திரைப்படம் வெளிவந்தது. உயர்ந்த கல்வி பெற்ற குடும்பத்தில் பிறக்கும் பிள்ளை மிக சாதாரண குடும்பத்தில் வளரும். சாதாரண குடும்பத்தில் பிறந்த பிள்ளை செல்வந்தர் குடும்பத்திலே வளரும். சாதாரண குடும்பத்திலே பிறந்த பிள்ளைக்கு அந்த சாதி புத்தி இருக்கும் அல்லது உயர்ந்த குடும்பத்தில் பிறந்த பிள்ளைக்கு உயர்ந்த புத்தி இருக்கும் என அப்படி ஒரு வரையறையே இல்லை, அது வளர்ப்பின் அடிப்படையில் தான் அமையும் என்பதை அப்போதே அந்த படம் சொல்லி இருக்கிறது.

விஜித் பச்சான் முதல் படத்தில் நடிக்கிறார் என்கிற எண்ணமே ஏற்படாத அளவுக்கு மிக இயல்பாக சிறப்பாக நடித்து இருக்கிறார். உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த திரைப்படம் வெளி வருகின்ற அதே ஜூன் 5ஆம் தேதியில் தம்பி விஜித்தின் திரைப்படம் வருகிறது. அந்தப் படத்தை நான் பார்க்கவில்லை. இந்த படத்தை நான் பார்த்து விட்டேன். இந்தப் படம் என்னை வெகுவாக ஈர்த்து இருக்கிறது. நான் நீண்ட காலமாக பேசி வருகின்ற அரசியலை இரண்டு மணி நேரத்தில் சொல்லுகிற ஒரு திரைப்படமாக இதை சிவப்பிரகாஷ் இயக்கி இருக்கிறார். அதைவிட முக்கியமாக அண்ணன் தங்கர் பச்சான் அவர்களின் மைந்தர் விஜித் பச்சான் இந்த படத்தில் கதையின் நாயகனாக நடித்திருப்பது சாலப் பொருத்தமானது. அவர் எழுப்புகின்ற கேள்விகள் ஒவ்வொன்றும் சாதியவாதிகளுக்கு மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். சிந்திக்க தூண்டும். சாதி வேண்டாம் என எண்ண தோன்றும். அத்தகைய காட்சிகள் இந்த படத்தில் அமைக்கப்பட்டு இருக்கின்றன. வசனங்கள் ஒவ்வொன்றும் நெஞ்சில் ஆழமாக பதியக் கூடியவையாக இருக்கின்றன. மிகப்பெரிய விவாதத்தை எழுப்பக்கூடிய திரைப்படமாக இந்த படம் அமையும் என்று நான் பெரிதும் நம்புகிறேன்.
இயக்குநர் சிவப்பிரகாஷ், தம்பி விஜித் ஆகியோரை மனதார பாராட்டுகிறேன். நாயகி ஷாலியும் தனது பாத்திரத்தை மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் பாராட்டும் அதே வேளையில் இந்த திரைப்படத்தின் உயிரோட்டமாக இருப்பது இசைஞானி இளையராஜா அவர்களின் இசை. இந்த படத்திற்கு மிகப்பெரிய அளவில் உயிர்ப்பை தருகிறது. உயிரோட்டத்தை தருகிறது. அந்த இசையே இந்த படத்தை வெகு மக்களுக்கு கொண்டு போய் சேர்க்கும் என்று நான் பெரிதும் நம்புகிறேன். தமிழ் சமூகத்தில் ஜனநாயக சக்திகளாக இருக்கும் அனைவரும், சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை என்று நம்புகிற புரட்சிகரமான முற்போக்கான சிந்தனை உள்ள ஒவ்வொருவரும் வரவேற்று ஆதரிக்க வேண்டிய திரைப்படம் இது. கட்டாயம் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய திரைப்படம். ஒரு முறையாவது திரையரங்குக்கு சென்று இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.
இயக்குநர் சிவப்பிரகாஷ் பாலு மகேந்திராவின் மாணவர் என்பதால் அவருடைய சாயல்கள் ஆங்காங்கே இந்த படத்தில் வெளிப்படுகின்றன. நல்ல அருமையான காட்சிகளை பதிவு செய்து இருக்கிறார். விறுவிறுப்பான ஒரு கதை என்றாலும் கூட ரம்யமான காட்சிகளையும் இதில் இணைத்து இந்த திரைப்படத்தை எழிலூட்டி இருக்கிறார். கதைக்கரு மிகவும் வலுவானது. ஆழமானது. அனைவரும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டியது. ஆணவக் கொலை தொடர்பான பல படைப்புகளை பலரும் படைத்திருக்கிறார்கள். ஆனால் இதிலே ஒரு புதிய யுத்தியை இயக்குனர் கையாண்டு இருக்கிறார். நிச்சயமாக இது விவாதத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். கதை சொல்லியாக பாவா செல்லத்துரை மற்றும் இன்னும் சில முக்கிய பாத்திரங்களும் இந்த படத்தில் இருப்பது இந்த படத்திற்கு சிறப்பு சேர்க்கிறது. இந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். தம்பி விஜித் பச்சான்!









